காலப் பேழையும் கவிதைச் சாவியும்
கவிதை 22 · 22 / 58
இதற்கு விளக்கம் ஏற்கனவே வழங்கப்பட்டாகி விட்டது ;
இப்போது எதிரேயிருப்பது ; வினாவா ? விடை யா ?
வினா இல்லாமல் விடை எழுமா ?
இதற்குப் பெயர் என்ன ?
இது வினா ?
பிரபஞ்சம் ; இது விடை !
இந்த விடை ஏற்கனவே இருப்பதால்தானே ;
அல்லது இருந்தது என்பதால் தானே -
எதையோ ஒன்றைப் பார்த்து இது என்ன என்று
வினவ முடிந்தது!
எதுவுமே இல்லாத போது வினா எழவில்லை.
வினா எழாததினால் விடை தோன்றவில்லை. எனவே
வினா - விடை எதுவுமே தேவையற்ற ஒரு நிலை -
அந்த நிலையிலேயே நானிருந்ததாகவும்
அந்த நிலையோடு நிழலாக ஒட்டிக் கொண்டு
ஒன்றல்ல - இரண்டல்ல - ஓராயிரமல்ல -
லட்சமல்ல - கோடி கோடி என
ஐநூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு
இந்த உலகம் தோன்றியதென்றும் -
அதில் எண்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு
உயிர் தோன்றியது என்றும் கண்டு பிடித்துக்
கூறப்படுகிறதே - அப்படித் தோன்றியதில்
முதல் உயிர் நான்தான் என்று கற்பனை செய்து
கொண்டு அந்த எண்பது கோடி ஆண்டுகளாக
நான் காற்றோடு காற்றாக மிதந்து கொண்டும்
நீரோடு நீராகக் கலந்து கொண்டும்
வெப்பத்தோடு வெப்பமாகவும் ;
குளிரோடு குளிராகவும் ;
இருளோடு இருளாகவும் ;
வெளிச்சத்தோடு வெளிச்சமாகவும் ;
விண்ணோடும் மண்ணோடும் விளையாடிக் கொண்டு
ஊர்ந்தும், நெளிந்தும், மண்டியிட்டுத் தவழ்ந்தும்,
நடந்தும் முன்னேறிக் கொண்டிருக்கிறேன்.
என் முன்னேற்றத்துக்கு முற்றுப் புள்ளி
வைக்கப்பட்டதாக யாரால் சொல்ல முடியும் ?
எண்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கூட
“புல்லாகிப் பூடாய்ப் புழுவாகி” என்று
உயிரின் வளர்ச்சியை உருகி உருகிப்
பாடியிருக்கிறாரே ; மாணிக்கவாசகர் -
அப்போதே முற்றுப் புள்ளி வைக்கப்பட்டிருந்தால்
உமக்கும் எனக்குமிடையே இந்த உரையாடல் ஏது ?
என் பயணத்தில் ; இதனை நடைபயணம் என்பதா ?
நகரும் பயணம் என்பதா ? ஊர்ந்திடும் பயணமா ?
பறந்திடும் பயணமா ? பொதுவாகப் பயணம் என்பதே
பொருந்தும் என்பதால் ; பல கோடி ஆண்டுகளாக நடைபெறும்
என் பயணம் என்று மட்டும் சொல்கிறேன் - 500 கோடி
ஆண்டுகள் - அதில் முதல் உயிராக நான் ; எண்பது கோடி
ஆண்டுக்கு
முன்பு தோன்றினேன் என்பதை எப்படி யாரிடம் நிரூபிப்பது ?
அப்போதுதான் உம்மில் யார் இருந்தார் ; இனி
இப்போதுதான் யார் இருப்பார் ?
அதனால் பல கோடி ஆண்டு என்பது
ஒரு சமரச உடன்பாடு அல்லவா ? -
சரியான கணக்கில்லையே தவிர ; ‘கணக்கற்ற
ஆண்டுக் காலம்’ என்பது ஏற்கக் கூடிய கணக்குத் தானே!
பகவத் கீதையில் பார்த்தாமன்,
“எல்லாம் நானே” என்று எடுத்துக்காட்டுகளை
அடுக்கிக் காட்டியது போல இந்த ‘நான்’ என்பதை
யாரும் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது -
படிமுறை வளர்ச்சியில் பின்னோக்கிச்
சென்று பயணத்தைப் பாதுகாப்பாக நடத்திக்
கொள்ளத்தான் முதலில் “புழுவாகி” எனப்
புறப்பட்டு என்கிறார்போலும் மாணிக்கவாசகர்!
இந்தப் பல கோடி ஆண்டுகளில்
என் பயணத்தில் எத்தனை எத்தனை படிம வளர்ச்சிப்
பட்டியல்களைப் பார்த்து விட முடிந்திருக்கிறது -
கி.மு. 12,000 ஆண்டு வரையில் இருந்ததாகக்
கூறப்படும் வட அமெரிக்காவையும் கிழக்கு
ஆசியாவையும் இணைத்திருந்த ஒரு பால அமைப்பு,
பனியுகியினால் மூழ்கிப் போனதையும் ; அந்நாள் வரையில்
வட அமெரிக்காவுடன் கொண்டிருந்த
கிழக்கு ஆசியத் தொடர்பு காரணமாக
அங்கே மாயா நாகரிகம் பரவியதற்கான
அடையாளங்களையும் என் பயணத்தில் ஒரு கூறாகவே
காண முடிகிறதே!
குரங்கிலிருந்து மனிதன் என்கிற வரையில்
படிம வளர்ச்சியின் தாத்பரியத்தை நான் புழுவாக இருந்த
காலந் தொட்டு ; ஊர்ந்து நெளிந்து, உங்களுக்கும்
தெரிவிப்பதற்குப் பயணம் நடத்துகிறேன் ; ஊன்றுகோல்கள்
ஒன்றிரண்டல்ல ; பலவற்றின் துணைக் கொண்டு!
உலகு உள்ளிட்ட எண்ணற்ற
கோள்கள் உலவிடும் பிரபஞ்சம் ;
குடும்பக் கட்டுப்பாடு கடைப் பிடிக்காமல்
இன்னும் எத்தனை கோள்களைக்
குழந்தைகளாக உவைத்து உருவாக்கிப்
போகிறதோ! பயணம் நிற்காமல்
போகப் போகத்தானே தெரியும் -
இதுவரையில் இத்தனை கோடி கோடி
ஆண்டுகள் நடத்திய பயணத்தில் ;
மண்ணில் நெளியும் புழுக்களையும் -
விண்ணில் சிறகு விரிக்கும் பறவைகளையும் -
வனத்தில் திரியும் விலங்குகளையும் -
ஊர்வன - நீந்துவன எனும் உயிரினங்களையும்
வயதால் இவற்றுக் கெல்லாம் இளைய
முழுமையானது என நம்மளவில் கருதிக்
கொள்கிற மனித இனத்தினையும் -
அந்த இனத்தின் பாகுபாடுகளையும் -
அவற்றில் ஒவ்வொன்றும்
போற்றும் பண்பாடுகளையும் ;
கண்டும்
களித்தும்
கவலைப்பட்டும்
கார்முற்றும்
கண்ணீர் வடித்தும்
பல்வேறு உணர்வுகளைச் சுமந்து கொண்டு
பயணம் நடத்துகிறேன் ; உம்மோடும் கூட!
முன் நோக்கிச் செல்லும் பயணத்தில் சற்றுப்
பின் நோக்கித் திரும்பிப் பார்க்கிறேன் -
இதைத்தான் “அரிமா நோக்கு” என்பர் அறிஞர் -
அடியேன் நோக்கு அரியா நோக்காகக் கூட இருக்கலாம் ;
இதில் தன்னல நோக்கு இல்லை,
தமிழர் வரலாற்று நோக்கும் இருப்பதால்,
குறுகிய நோக்கெனக் கொள்ளாமல் ; என்
கொள்கை நோக்கெனக் கொள்வீர்!
நோக்கின் காரணம் ; விடையாக
விரிந்து நிற்கிறது -
“பிறகேன் வினா?” என்பதே என் வினா!
வணிகப் பெருவேந்தன் கோவலன் ; அவன் காதல் துணைவி
வாய்மை நிறை நடனவல்லி மாதவி ; வாழ்வின் திருவிளக்கென
வாய்த்ததிரு கண்ணகியாம் பெண்ணரசு ; இம்மூவரின்
வழித் தோன்றலாய் வந்துதித்த, வற்றாப் புகழ்
மொழிக்குல மங்கை நல்லாள் ; மன்பதையில் எவர்
பழிப்புக்கும் இடம் தாராத பற்றற்ற துறவி மணிமேகலை -
இவர்களை இணைத்து ஒலிக்கும் சிலம்பும் மேகலையும்,
இணையென ஒளிரும் சீவக சிந்தாமணியும்,
அருந்தமிழ் இலக்கியப் பனுவல் வளையாபதியும்,
ஆணாதிக்கம் வீழ்த்திய ஆரணங்கு பற்றிய குண்டலகேசியும்,
சமணம், பெளத்தம், சைவம், வைணவமென்று - பெருஞ்
