உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

காலப் பேழையும் கவிதைச் சாவியும்

கவிதை 19 · 19 / 58

“சிங்களம், புட்பகம், சாவகம் - ஆகிய

தீவு பலவினும் சென்றேறி - அங்கே

தங்கள் புலிக்கொடி, மீன்கொடியும் நின்று

சால்புறக் கண்ட தமிழ்நாடு” என்றும்,

“சீனம், மிசிரம், யவனரகம் - இன்னும்

தேசம் பலவும் புகழ் வீசிக் - கலை

ஞானம், படைத்தொழில், வாணிகமும் மிக

நன்று வளர்த்த தமிழ்நாடு” என்றும்,

பாரதி பாடியுள்ளவை கவிதைகள் மட்டுமல்ல; தமிழர்

வீரம், விவேகம், வாணிபம், கலையுணர்வும் - இவை

ஆழ்கடல் தாண்டியும் ஆதிக்கம் செலுத்தியவை என்பதற்கு

அசைக்க வொண்ணா ஆதார விதைகளுமாம்!

இங்கிலாந்து, பிரான்சு, ஸ்பெயின்,

இன்னும் அமெரிக்கப் பகுதிகளிலும்

ஏலம், சுமோர், எகிப்தியர்களுடனும்

நாகரிகத் தொடர்பு நம் திராவிடர்க்கு உண்டு - என

எவர்தான் மறுத்து வென்றுள்ளார் ?

கருப்பு வைரம் என்று நாம் இங்கே

விருப்புடன் இரும்பினைப் புகழ்வது போல்

மெக்சிகோ வாழ்ந்த மக்கள் இனம்;

‘மாயன்’ நாகரிகத்தைப் போற்றித்

திராவிட நாகரிகம் அதுவென ஏற்றி - அவர்தம்

திடமான கருப்பே அழகு திகழ் நிறமென்கிறார்.

“நிக்கிதோ சிந்தோ” என்றால் அவர் மொழியில்

‘கருப்புதான் கவின் மிகு நிறம்’ எனப் பொருளாம்.

எழுத்தும் நாகரிகமும் எகிப்தியர் கற்று

குமரிக் கண்டத் தமிழர் வழங்கிய கொடையாகும்.

மெசபொடோமியா நாகரிகம் மேன்மையுற்றதும்

எலாமியர் என்போர் ஏற்றம் பெற்றதும்

அழிந்த குமரிக் கண்டம் அழிவதற்கு முன்பு

பொழிந்த நாகரிக நறுமலர்ப் பெருமழையே,

காரணம் என்பார் வரலாற்றாய்வு கற்றறிந்த

கள்ளமிலா நல்லறிவாளராம் நடுநிலையாளர்!

“மத்திய தரைக்கடல், குமரிக் கண்டம், சிந்து வெளி,

எகிப்து, சுமேரியா, எங்கணும் பரவியது;

தமிழர் நாகரிகமே” என்று, தக்க சான்று பகருகின்றார்.

தகுதி மிகு இராமச்சந்திர தீட்சிதர் என்பார்;

“தமிழர் தோற்றமும் பரவியதும்” என்ற நூலில்!

திராவிட இனத் தமிழர் நாகரிகம் பண்பாடு

திக்கெட்டும் பரவியிருந்ததற்கும் - அவர்

திறப்பாடு ஓங்கி வளர்ந்துள்ளதற்கும்

தெளிவுமிக்க சான்றுகள் இருந்த போதும் -

தேய்த்தரைத்த சந்தனத்தை யாரோ எவரோ

தேகமெல்லாம் பூசிக் கொண்டு; திருவிழா கொண்டாடவும்

தேய்ப்பதற்குப் பயன்பட்ட சந்தனக் கட்டையில்

தேய்ந்தது போக மிச்சத்தையாவது - நம்

தமிழர்க்குப் பயன்படுத்த

தேடுகின்றோம்; தேடியலைகின்றோம்!

அதுதான் இந்தக் காலப் பேழை!

சோழன் பெற்றெடுத்த செல்வன்

செங்குட்டுவன் என்பதும் - அவன் தாய்

கரிகால் சோழன் மகள் நற்சோணை என்பதும்

சிலப்பதிகாரம் செப்புகின்ற செய்தியாகும்.

பதிற்றுப் பத்துப் பதிகம் பகருவது என்னவெனில்; அந்தப்

பாவையின் பெயர் சோழ மகள் மணக்கிள்ளி என்பதாம்!

இரு பெயர் ஒருவர்க்கிருப்பது இயல்பே ஆனதால்,

இதனைப் பெரிதுபடுத்திக் குழப்பமுறத் தேவையில்லை.

இதைவிடப் பெரிய குழப்பங்கள் தமிழக வரலாற்றில் தலை காட்டும்.

முதலாம், இரண்டாம், மூன்றாம் கரிகாலர்கள் என மூவர் உண்டு;

அந்த மூவர் பெற்ற வெற்றிகளும் ஒன்றோடொன்று மோதி

எதிலே யார் பெற்ற வெற்றி என்றறிய முடியாமல் திணறுவதும்

உண்டு!

வேறொரு குட்டுவன் போல ‘வேல்கெழுகுட்டுவன்’ என்பார்; அவன்

வேறு யாருமல்ல; சேரன் செங்குட்டுவனுக்கே மாறு பெயர்

என்றுரைப்பார்!

இங்கிலாந்தில் முதலாம் ஹென்றி தொடங்கி, எட்டாம் ஹென்றி

வரை;

எத்தனை ஹென்றிகள் வரினும்; காலமும் வரலாறும்

கச்சிதமாயிருக்கும்.

இங்கு நமக்கு இலக்கியமும் கல்வெட்டுந்தான் வரலாறாக

வாய்த்ததினால்;

இயன்ற அளவே ஆய்வு செய்து, காலத்தை அறுதியிட்டுக் கூற

முடிந்ததென்பேன்!

இமயம் சென்று வென்ற இணையற்ற வீரன்;

சமயம் வாய்த்த போதெல்லாம் தமிழர்க்குப் புகழ்சேர்க்கும் சேரன்;

மானமொன்றே நல்வாழ்வெனக் கொண்ட மாமன்னன்

மாமலையென நின்றே தன் இனம் காக்கும் மறத்தமிழன்

இவனை வெல்வார் யாருமில்லை; என்ற பேச்சும் - எதிர்த்து

எவர் வரினும் வீழ்வார் என்ற சொல் வீச்சும்

எங்கும் நிறை நாதமாகி செங்குட்டுவன் புகழ் பரவக் கண்டு;

பொங்குற்றார் பொறாமையினால் புவியாளும் மன்னர் சிலர்!

தணல் அணையப் பொறாமையும், தாங்க முடியா எரிச்சலும்;

தமிழன் பெருமை கண்டு, தமிழனுக்குத்தானே ஏற்படும்;

அந்த மன்னரில் ஒருவனாய் முளைத்தவனே மோகூர் பழையன்.

பழையன், பகை முடித்துச் சேரனைப் புதைகுழிக்கு அனுப்பிட;

புதிய திட்டங்கள் வகுத்தான் - பொல்லாச் சதிகள் புரிந்தான்

போருக்கும் ஆயத்தமானான்; போர் முரசம் கொட்டிவிட்டான்.

அவன் நாட்டு எல்லையிலே ஒரு தலைவன் அருகன் என்போன்

அதுவே நேரமென்று சேரனுக்குத் துணையாகப் பழையன் மீது

பாய்ந்தான்.

சேரன் மீது கொண்ட சினம் போல் ஆயிரம் மடங்கு மிகையாக

அருகன் மேல் சினம் கொண்ட பழையன், அவனை அழித்திட

எழுந்தான் முதலில் -

அந்தத் தாக்குதலுக்குத் தப்பிய தலைவன் அருகன்;

பழையனை வீழ்த்தவும்; மறக்க முடியாத பாடமாக

அவன் மானத்திற்கு அறைகூவல் விடுக்கவும் துணிந்து

சேரன் படையில் சேர்ந்து கொண்டு உடைத்தான் பழையன்

கோட்டையை!

செருமுனையில் சிங்க ஏறாகக் காட்சி தந்த

செங்குட்டுவன்; மோகூரைச் சிதைத்துச் சீறித்து

எங்குற்ற போதிலும் உனை விட மாட்டேன் என்று

பொங்குற்றெழுந்து பழையனையும் சிறை பிடித்து

மோகூரான் காவல் மரமாம் வேம்பினை

முற்றாக வெட்டிச் சாய்த்து;

வெட்டுண்ட மரத்தை இழுத்து வர தன் ஆட்சிக்குக்

கட்டுண்ட மோகூரின் யானைகளை ஏவி விட்டு அந்தத்

தன்னேரிலாத் தமிழ் மன்னன் தனது

தலைநகர் திரும்பிச் சென்றான்.

அவன் திரும்பியவுடனே அருகன்; தான் விரும்பியதை

நிறைவேற்றிக் கொள்ள - பழையனை பழி தீர்க்கக்

காவல் மரத்தைக் கட்டி இழுப்பதற்குத் தோதாக வடமாகத் தன்

ஏவல் கேட்கும் வீரரை அழைத்து;

பழையன் அரண்மனைப் பெண்டிரின் கூந்தலை அறுத்து

வடக் கயிறாகத் திரிக்கச் செய்தான் - அக்

கயிறுகள் கொண்டு காவல் மரத்தைக்

கட்டி இழுக்கச் சொன்னான் -

அது கேட்டுச் சேரன்; தான் பெற்ற வெற்றியில்

கறை படிந்ததே எனக் கணல் கக்கினான் - அருகன் மீது!

“என் துணையைப் பயன்படுத்தி - அருகனே

உன் பகையைத் தீர்த்துக் கொண்டாய்;

பழையன் மீது உனக்கிருந்த ஆத்திரத்தைக் காட்டுதற்கு -

படையனுப்பிப்

பழி தீர்த்துக் கொண்டாய் எனினும்; நம்

பகை நாட்டுக் காவல் மரத்தைக் கட்டியிழுக்கப்

பண்பாட்டுக் கெதிராக;

பழையன் குடும்பப் பெண்கள் கூந்தலை அறுக்கச் சொன்னது

பழி வாங்கும் செயல் என்பாய்;

இல்லை! இல்லை!

முதல் பதிப்பு: ஜூன் 2006 — தமிழ்க்கனி பதிப்பகம் / பூம்புகார் பதிப்பகம், சென்னை