காலப் பேழையும் கவிதைச் சாவியும்
கவிதை 18 · 18 / 58
பரிணாம வளர்ச்சி என்பதுதான் விரித்துரைக்க வல்லது!
தாவர வித்துக்களும் ஒரு வகையில் முட்டைகள் தானே!
முட்டையென ஒன்று உருவாகிறது முதலில் -
முட்டைக்குள் கோழி மட்டுமல்ல;
மனிதன் கூட முட்டைக்குள்ளேதான் உருவாகிறான் -
முட்டையென்பது கோழி முட்டை மட்டுமல்ல;
அது போலப் பறவைகளிடும் முட்டையுமல்ல;
விந்தின் ஒவ்வொரு துளியிலும் எத்தனையோ
இலட்சக் கணக்கான முட்டைகள் -
அவற்றில் தேவையான முட்டைகளை மட்டுமே
பயன்படுத்திக் கொண்டுதான்,
எந்தவொரு கருவும் உருவாகிறது -
உருவான இடத்துக்குத் தக்க;
பரிணாம வளர்ச்சி அடிப்படையில்
பறவையாகவோ, விலங்கினமாகவோ,
ஊர்வனவாகவோ, மனிதனாகவோ உருவுப்பெறுகிறது!
குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்றால்;
படிமுறை வளர்ச்சியென்பதும்
பரிணாம வளர்ச்சியில் வந்தான் என்று
கொள்ள வேண்டுமே யல்லாது;
இப்போது காணப்படும் குரங்குகள் ஏன்
மனிதராக மாறவில்லை என்று கேட்க முடியுமா?
நான் முன்பே ஒரு முறை குறிப்பிட்டது போல -
சுவர் எழுப்பிய சேறு குழைக்கிறோம் -
குழைக்கப்பட்ட சேறு கொண்டு
சுவர் எழுப்பியது போக; எஞ்சியுள்ள சேறு;
சேறாகத் தானே இருக்க முடியும் -
அந்தச் சேறு சுவரென
அமைக்கப்பட்ட முடியாதல்லவா? -
சரி;
முட்டை கோழியாகிறது என்றால்
முட்டை எப்படி உருவாகிறது? இதற்குப் பதில்;
சேறு எப்படி உருவாகிறதோ; அப்படித்தான்
முட்டையும் உருவாகிறது என்பதாகும்.
களி மண் - அல்லது சுவர் மண் - தண்ணீர்
இவை கலந்தால் சேறு உருவாவது போல -
முட்டை உருவாவதற்கும்
சில கலப்புகள் தேவைப்படுகின்றன.
முட்டையிலிருந்து முட்டைக்குத் தேவைப்படுகிற;
முட்டையை உருவாக்கக் கூடிய
சத்துக்கள் உதவி புரிகின்றன -
அந்த முட்டையிலிருந்துதான் கோழி -
அது போலத்தான் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியில்
மனிதனாக வளர்ந்தவனுமாவான்!
அவன் தோன்றியது குமரிக் கண்டமா?
ஆப்பிரிக்காவா? - இது
மனித வரலாற்றுக்குத் தேவையான
கேள்வி மட்டுமல்ல;
உலக வரலாற்றுக்கும் தேவையான கேள்வி!
“இந்தியா தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா,
ஆஸ்திரேலியா ஆகியவற்றை உள்ளடக்கிய பெருங்கண்டமாம்
இலெமூரியாவில் தோன்றிய மனிதன்தான் முதலில் நாகரிகம்
பெற்ற மனிதன்” என்று 1974 ஆம் ஆண்டு கோந்த்ரா ராவ் எனும்
சோவியத் அறிஞர் “மூன்று கடல் புதிர்” (The Riddles of three
oceans) என்ற நூலில் கூறியுள்ளார் எனினும்; “இலெமூரியா”க்
கண்டம் உடைந்து இன்றைய கண்டங்கள் ஏறத்தாழ இன்றுள்ள
நிலையில் ஒரு கோடி ஆண்டுக்கு முன்னரே
உருவாகிவிட்டமையால், இற்றைக்கு 12,000 ஆண்டுகளுக்கு
முன்னர் (பனியூழியில்) கடல் மட்டம் தாழ்வாக இருந்தபொழுது
குமரிக்குத் தெற்கே நிலப்பகுதியாக இருந்த கடல் கொண்ட
தென்னாடே (குமரி கண்டமே) மாந்தன் பிறந்தகம் அல்லது
மாந்தன் மொழி, நாகரிகம் பிறந்தகம் என்பது பொருத்தமான
முடிவாகும் என்பதே ஆய்வின் முடிவாக” அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே,
நதிகளின் உற்பத்தி இடத்தையும்
அவை ஓடுகின்ற தடத்தையும் -
கடலையும் - நகரையும்
மாற்றி அமைத்திடும் மகத்தான வலிமையை;
பூகம்பக் கரத்தினாலும், புயல் வேகத்தினாலும்;
கடற்கோளினாலும் காட்டுகின்ற
இயற்கையை எதிர்த்து நின்றுதான்
இத்தனை காலமாக மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
மனித இன நாகரிக வளர்ச்சி உலகில் ஒரே சமயத்தில் எல்லா
இடங்களிலும் - சீராக அமைந்திட முடியாது - அதையொட்டித்
தான் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள்,
‘தொழில் திறனும், திருத்தமான மொழி பேசும் ஆற்றலும், குமரி
நாட்டு மாந்தரிடையே வளர்ந்த போது; முறையே வேளாண்மைப்
பெருக்கமும், வாணிபப் பெருக்கமும், நகரமைப்புக் கலைகளும்
மேன்மையுற்றன” என்றும்,
‘மொழி செம்மையாகப் பேசப்பட்ட நாகரிக வளர்ச்சிக் காலமான
இக்கால எல்லையில் சித்தியரின் முன்னோரும், சுமேரியரின்
முன்னோரும், குமரி நாட்டிலிருந்து பிரிந்து போயிருக்கக் கூடும்”
என்றும் குறிப்பிடுகிறார்.
குமரிக் கண்டம்; மனிதன் முதலில் தோன்றிய இடம் மட்டுமல்ல;
மனித நாகரிகத்தின் தொட்டிலாகவும் விளங்கியது என்பதையும்
- படம் பிடித்துக் காட்டுகிறது.
இந்த அடிப்படையில்தான் வின்சென்ட் ஸ்மித், பேராசிரியர்
சுந்தரனார் போன்ற அறிஞர் பெருமக்கள் இந்திய வரலாறு
வடக்கேயிருந்தல்ல; தெற்கே தமிழகத்திலிருந்து எழுதப்பட
வேண்டுமென்று கூறினார்கள்.
இப்போது அதையும் சுற்றி மாற்றிக் கொண்டு இந்திய வரலாறு
மட்டுமல்ல “மனிதன் தோன்றி இந்நாள் வரை” யிலான உலக
வரலாறே - மனித குல வரலாறே தெற்கேயிருந்துதான் எழுதப்பட
வேண்டுமென்ற கருத்து உறுதிப்படுகிறது என்றுதான் கூற
வேண்டியுள்ளது. இதற்கேற்பவே
“காலப் பேழை”யை “கவிதைச் சாவி”
கொண்டு திறந்து காட்டி வருகிறேன்.
வகைப்படுத்தி வரலாறு தொகுத்து
வழங்குதற்கு வல்லுநர் யாரும்; தமிழர்க்கு
வாய்க்காத காரணத்தால்;
கல் வெட்டுக்களும், காவிய காப்பியங்களும்
காலமாகாத இலக்கியச் சான்றுகளுமே,
அந்நாள் தொட்டு இந்நாள் வரையிலான
அருந்தமிழர் வரலாறாய் அமைந்த தன்றோ!
எல்லார்க்கும் முற்பட்ட
எழுச்சி மிகு பாண்டிய மன்னன்
நெடியோன் என்போனும்,
மேருமலை உச்சி வரையில்
ஏறு நடை போட்ட சோழன்
கரிகால் பெருவளத்தானும்,
கண்ணகி சிலைக்குக்
கல் எடுக்க இமயம் சென்று,
கனக விஜய மன்னர்களை வென்ற
சேரனாம் செங்குட்டுவனும்,
மூவாயிரம் ஆண்டின் முன்னே - நம்
மூதாதையர் எனும் சரித்திர
முத்திரை பெற்றவர்களாம்.
கங்கை, வங்கம், கலிங்கமெனக்
களம் பல கண்டு பகை வென்றவர்களாம் - நம்
கண் மூடினும் - அவர் பெயரை
மண் மூடாதெனும்
வரலாற்று நாயகர்கள்! அவர்தம்
வழித் தோன்றல்கள்; எத்தனையோ
சேர, சோழ, பாண்டியர்களாம்!
“விண்ணை இடிக்கும் தலை இமயம் - எனும்
வெற்பை அடக்கும் திறனுடையார் - சமர்
பண்ணிக் கலிங்கத்து இருள் கெடுத்தார் - தமிழ்ப்
பார்த்திபர் நின்ற தமிழ்நாடு” என்றும்,
