காலப் பேழையும் கவிதைச் சாவியும்
கவிதை 17 · 17 / 58
யாரோ உரசிக் கொண்டு
சென்றது போலவோர்; அருகில்
நின்றது போலவோர்; உணர்வு!
யார் அது? ஆதாம் - ஏவாளா?
அல்லது நாமேதானா?
விடை காண்பதின் முன்பே
வெடித்தது எதுவோ?
சிதறியது என்னவோ?
பதறியது இதயம்!
அத்தனை பெரிய ஒலியை
பிரமாண்டங்கள் ஆயிரத்தை
அடுக்கி வைத்து; அந்தப்
பிரமாண்டத்திற்கெல்லாம்
பெரிய பிரமாண்டம் வீழ்ந்த ஒலியை;
காது செவிடுபடுவதற்கு முன்னால்
கேட்டிருக்கலாம் அல்லவா?
ஆனால் கேட்கவுமில்லை, பார்க்கவுமில்லை.
அந்த ஒலி பதிவானதற்கு
அடையாளம் மட்டுமே
கோடு கிழித்தாற் போல
ஆரம்பத்தில் சொன்னபடி
கோடி - கோடி - கோடி
ஆண்டுகளுக்குப் பிறகு தெரிந்தது!
கோடிக் குஞ்சுகளை அடைத்து வைத்துள்ள
கூடைக்குள்ளிருந்து கிளம்பிடும் சப்தம்;
இப்போது கேட்கிறது -
இதே சப்தம்தான்
பக்கத்திலிருந்தும் கேட்டது -
நமக்கு மேலும் கீழும்
நன்றாகவே கேட்டது!
அந்தக் கூடைகள் அன்றும் இன்றும்;
ஆகாயத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன!
நாமிருக்கும் கூடையும் கூடத்தான்!
அதோ ஒரு கூடை; அது ஏன்
நம்மைச் சுற்றுகிறது?
இல்லை - இல்லை - நாம்தான் அதைச்
சுற்றுகிறோம் - சுற்றிக் கொண்டிருக்கிறோம்!
அடடே; நமக்கு நாமே
சுற்றிக் கொண்டிருக்கிறோமே;
நமக்குத் தொலைவில் தோன்றி
தொடர்ந்து சுற்றிக் கொண்டிருப்பன வெல்லாம்;
நம்மைப் போல் கோடிக் குஞ்சுக் கூடைகளா?
எல்லாக் கூடைகளும் சுற்றுகின்றனவா?
நமக்கு எப்படித் தெரியும்?
நாம்தான் இருட்டுக்குள்
இருட்டின் நிறமே எதுவென்று
தெரியாமல்,
குருட்டு நிலையில் கிடக்கிறோமே -
நம்மை நாமே சுற்றிக் கொள்கிறோம் -
அது நமக்குத் தெரியாத அசைவு!
அதற்கு யாரும் நம்மிடம் பெற்றதில்லை இசைவு!
நம்மைப் போல் வெடித்து
பிளவுபட்டதுகள் - நம்மைப் போலவே
பிரபஞ்சம் என்ற பெயரில்
சுழல்கின்றனவா? வேறு எதனையும்
அல்லது யாரையும் சுற்றி வருகின்றனவா?
நாம் மட்டும்தான் பிரபஞ்சமா? எல்லாமே
சேர்ந்து பிரபஞ்சமா?
எதுவோ இருந்து தொலைக்கட்டும்;
இப்போது நமது பணி என்ன?
நமக்கிடப்பட்ட கட்டளை என்ன?
பணியோ; கட்டளையோ - நாம்
நிறைவேற்ற முன்வராவிடினும்
நிறைவேற்றத் தொடங்காமல்
கிடப்பிலேயே போடப்பட்டு விடாமல்
இயங்குகிறது! இயங்குகிறது!
இயங்கிக் கொண்டே இருக்கின்றது.
எத்தனை கோடியோ; அத்தனை கோடி
ஆண்டுகளாக; அந்த “இயங்குதல்”
தொடர்கிறது - இடை இடையே
ஏதோ அதிர்வுகளால் என்னவோ; என்னென்னவோ
மாறி மாறி நடைபெறுகின்றன -
அதை நாம் பிறகுதான்
அறிந்து கொள்ள முடிகிறது-
முன்னாலே அறிந்து கொண்டாலும்
அதனைத் தடுத்திடும் வலிமை நமக்கு
வழங்கப்படவில்லை -
வழங்குவதற்கென்று யாரும்
இல்லாதபோது; எப்படி வழங்கப்படும்?
யார் வழங்குவார்கள்?
நான், நீ உட்பட - அதாவது நாம்,
கோடானுகோடி
ஆண்டுக்கு முன் வெடித்துச் சிதறிய
ஒரு கூடைக்குள் குஞ்சுகளாய் இருந்தோம், இருக்கிறோம்;
நமது கூடையைப் போல!
இதோ உவமையே
சொல்லுகிறேன் -
சில்லென்று மென் காற்று வீசும் கடற்கரையில்
காற்றுக் கொப்புளங்களைச் சிறுவர்கள்
ஊதி ஊதிப் பறக்க விடுகிறார்களே; அவைகளும்
வெடிக்கும் வரையில் பறக்கின்றனவே;
பலூன்களைப் போல!
அவற்றில் ஒன்றுதான் நாம் ஏறியிருக்கும் -
ஏறப் பட்டிருக்கும் - ஆகாயக் கூடை -
அந்தக் கூடையைக் காற்று அலைக்கழித்து;
கடல் நீர் மோதிக் குலைத்து, கடற்கோள் -
புயல், சூறாவளி என இயற்கையின் சண்ட மாருத
எதிர்ப்புகளை எல்லாம் சமாளித்து நிலைத்து
போக எஞ்சிய துண்டு துணுக்குகளை
எட்டிப் பிடித்துக் கொண்டு தான்
தொங்குகிறோம் -
அந்தத் தொங்கலில் நம்மைத்
தற்காலிகமாகத் தாங்கிப்
பிடித்துக் கொண்டிருப்பதும்;
தாக்கித் தகர்த்துத்
கொண்டிருப்பதும்;
நம்மால் அறியப்பட்டுள்ள
இயற்கையேய்தான் -
அதன் படைப்பில்தான்
அன்றும் - இன்றும் - நாம்
உருவானோம் - நமது கூடுகள்; ஆம் -
கோடிக் குஞ்சுக் கூடுகள்;
குக்! குக்! குக்! என்ற
கோரஸ் ஒலியோடு கூடிய கூடுகள்!
அவற்றில் முதல் கூடு; குமரிக் கண்டமா?
ஆப்பிரிக்க நிலமா? வேறு ஏதாவது?
கண்டு பிடித்த காலம் எது? -
கற்காலமா? பொற்காலமா?
மனிதனே; அதாவது நானும் நீயுமே
தோன்றாத - நாம் தோன்றாத
காலத்தில் கற்காலமாவது பொற்காலமாவது?
நாம் தோன்றியதுதான் எப்படி? -
குஞ்சு, கோழியாயிற்று!
கோழி; முட்டையிட்டது!
முட்டையிலிருந்து குஞ்சு, வந்தது!
எது முதலில்? முட்டையா? கோழியா?
இதற்கான விளக்கம்;
