காலப் பேழையும் கவிதைச் சாவியும்
கவிதை 16 · 16 / 58
கரிகாலச் சோழனைப் பற்றிய புறப்பாட்டு ஒன்றைப் பாடிய
காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் எனும் புலவர்,
அந்தப் பாட்டில் பாண்டிய மன்னன் ஒருவனையும் இணைத்துப்
பாடியிருக்கிறார். அந்த மன்னனின் பெயர் பெருவழுதி.
“நீ அறந்தங்கும் உறையூரின்கண் அரசன்; இவனோ தமிழ்
குலங்கும் மதுரையில் குளிர்ந்த செங்கோலையுடைய வேந்தன்!
நீ, தண்புனல் காவிரிக்கு உரியவன் ; இவனோ போரின்கண்
மாட்சிமைப்பட்ட பாண்டியர் குடியில் ஏறு போன்றவன் ; பொதிகை
மலைச் சந்தனமும் திரை கடல் முத்தும் மும்முரசமும்
கொண்டவன். நீவிர் இரு பெருந் தெய்வங்கள் ஒருங்கு
நின்றாற்போல் காட்சி தருகின்றீர்! இன்றுபோல் என்றும்
நிலைத்திடுக நமது நட்பு! வென்று வென்று போர்க்களத்தில்
மேம்படுக உமது வேல்! புலி, கயல் பொறித்து, உம் வெற்றியைப்
பிற நாட்டுக் குன்றுகளில் செதுக்கிடுவீராக!”
புறம் ஐம்பத்தெட்டாவது பாடலில் இந்த அழகிய
கருத்தினைத் தந்து காரிக்கண்ணனார், சோழன் கரிகாலனையும்,
பாண்டியன் பெருவழுதியையும் ஒரு சேர் வாழ்த்துகிறார்.
இதனைக் கொண்டு கரிகாலன் காலத்துப் பாண்டியன்,
பெருவழுதியென்று முடிவு கட்டுகிறோம். கரிகாலன் காலமோ
கி.மு. 60 முதல் கி.மு. 10 வரையில்.
அந்தக் காலத்திலேதான் உரோமாபுரியில் அகஸ்டஸ் சீசர்
ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறான். அதாவது கி.மு. 39
முதல் கி.பி. 14 வரையில்.
இந்தக் காலக் கணக்கை ஆராய்வதிலிருந்து அகஸ்டஸ்
சீசருடன் நட்புறவு கொண்டு தூதுவரை அனுப்பி வைத்த
பாண்டியன் பெருவழுதியாகத் தான் இருக்க முடியும் என்ற
முடிவுக்கே நாம் வர வேண்டியவர்களாகிறோம்.
கிரேக்கரையும், உரோமானியரையும் யவனர்கள் என்ற
பெயரால் அழைத்து, அந்த யவனர்களைத் தங்கள் அரண்மனை
களில் காவல் வீரர்களாக வைத்திருந்தனர் தமிழ் மன்னர்கள்
என்பதற்கு இலக்கியங்கள் சாட்சி கூறுகின்றன. “கடிமதில்
வாயிற் காவலிற் சிறந்த அடல்வாள் யவனர்” என்ற சிலப்பதிகாரப்
பாட்டு தக்க எடுத்துக்காட்டாகும்.
நக்கீரனார் பாடிய ஐம்பத்தாறாவது புறப்பாட்டில் “யவனர்,
நன் கலம் தந்த தண்கமழ் தேறல்” எனக் காணும் வரி, யவனர்கள்
தமிழகத்தில் மது வகைகளைக் கொணர்ந்து விற்று வந்தனர்
என்பதை உணர்த்துவதாகும்.
தென்னகத்திலிருந்து ரோமாபுரிக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட
உணவுப் பொருள்களில் மிக முக்கியமானது மிளகு. அலாரிக்
என்பவன் ஒரு காலத்தில் ரோமை வெற்றி கண்டபோது, நஷ்ட
ஈட்டுத் தொகையில் மூவாயிரம் பவுண்டு தமிழ்நாட்டு மிளகும்
தரவேண்டுமென்று உடன்படிக்கை செய்து கொண்டானாம்.
பாண்டிய நாட்டுக் கொற்கைப் பெருந்துறைக்கு அருகில்
முத்துக்களும், சங்குகளும் மிக அதிகமாகக் கிடைத்து,
அவைகள் உலகில் எல்லாப் பகுதியினராலும் பாராட்டும் பெற்றன.
கொற்கை முத்துக்கு
“மறப்போர்ப் பாண்டியர் அறத்திற் காக்கும்
கொற்கையும் பெருந்துறை முத்து”
என்ற அகப்பாட்டு அழகுற விளக்குகிறது.
முத்தும், நுண்ணிய பருத்தி ஆடைகளும், எலி மயிராலும்
பட்டாலும் நெய்யப்பட்ட உடைகளும், உரோமாபுரி போன்ற
நாடுகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து குதிரைகளும் மது
வகைகளும், கண்ணாடிச் சாமான்களும் கொற்கைப் பெருந்
துறையில் வந்து இறங்கிய வண்ணமிருந்தன.
அழகான கப்பல்களில் தங்கத்தை ஏற்றிக் கொண்டு
யவனர்கள் வருவார்களாம். பிறகு மிளகை ஏற்றிக் கொண்டு
திரும்புவார்களாம். முசிறித் துறை முழுவதும் அந்தக் கப்பல்களின்
பேரொலி கேட்கும் என்று சங்க இலக்கியங்கள் பெருமை
பேசுகின்றன.
புகார் துறைமுகத்தில் எல்லா நாடுகளைச் சேர்ந்த
வணிகர்களும், மாலுமிகளும் வந்திறங்குவார்கள்; அவர்கள்
எல்லாரும் ஒரே இனத்தவர் போல ஒற்றுமையாகப் பழகி
வாழ்வார்கள் என்று தமிழிலக்கியம் கூறுகிறது. யவனர்கள் பலர்
தமிழ் மன்னர்களின் மெய்க் காப்பாளர்களாகவும் இருந்திருக்கின்றனர்
என்ற செய்தியொன்றே இரு சாராரிடையிருந்த
நல்லெண்ணத்தை விளக்கும் கண்ணாடியாகும்.
இத்தகைய தொடர்புகளை இன்று மெய்ப்பித்துக் காட்டுவது
போலப் புதுவை மாநகருக்குப் பக்கத்தில் “அரிக்கமேடு”
என்னுமிடத்தில் நடைபெற்ற ஆராய்ச்சியில் உரோமானியருக்குரிய
பலவகைப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்திலே குவியல் குவியலாக ரோமர்
நாணயங்கள் கிடைப்பதற்கு என்ன காரணம் என்று
ஆராய்ந்தார்கள். கிழக்குக் கடற்கரையிலிருந்து உரோமாபுரிக்கு
மேற்கு கடற்கரை வழியாகப் பொருள்களை அனுப்ப
வேண்டுமானால் ஒன்று கன்னியாகுமரியைச் சுற்றிக் கொண்டு
போகவேண்டும் அல்லது கிழக்குத் தொடர்ச்சி மலையும் மேற்குத்
தொடர்ச்சி மலையும் சந்தித்து வழி விட்டிருக்கும் குறுக்குப்பாதை
வழியாகத்தான் செல்ல வேண்டும். இன்று அதிக அளவில் அந்தப்
பகுதியில் காணப்படும் நாணயக் குவியல்களுக்கு அதையும் ஒரு
காரணம் காட்டுவோரும் உளர்.
ரோம் நாட்டுத் தங்க நாணயங்கள் இந்தியா, பாகிஸ்தான்
உட்பட்ட அறுபத்தெட்டு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த
அறுபத்தெட்டு இடங்களில் ஐம்பத்தேழு இடங்கள் விந்தியத்
திற்குத் தெற்கே இருக்கின்றன என்பதைக் கேட்கும் போது
ரோமுக்கும், தென்னகத்திற்கும் இருந்து வந்த பழைய தொடர்பை
எண்ணி எண்ணிப் பெரு மூச்செறிகிறோம் நாம்.
அந்தப் பெருமூச்சுத் தான் இன்னும் அடங்காமல்
இந்தக் காலப் பேழையிலும் வெளிப்படுதல் காண்கின்றீர்.
அகழ்ந்து கண்டுபிடிக்கப்படுகின்ற
அந்தக் கால வரலாற்றுச் சுவடுகள்,
இகழ்ந்து தள்ளுதற்குரியவைகளாய்
இருட்டடிப்பு செய்வோர்க்குத் தெரியலாம் - அவை
புகழ்ந்து போற்றுதற்குரியவை மட்டுமல்ல;
மகிழ்ந்து உலகமன்றில் கொலு வீற்றிட வேண்டியவை.
தவழ்ந்து தவழ்ந்து தட்டுத் தடுமாறி
தாழ்வாரத்தில் தத்தித் தவித்திடும்
தமிழக வரலாறு எனும் குழந்தையை
தாய்த் தூக்கித் தன் மடியில் வைத்துக் கொள்ளும்,
காலம் வந்தால்தான் கணக்குச் சரியாகும்;
பாலம் அமையும்; பல்வேறு தேசிய இனங்களுக்கிடையே!
‘உலக வரலாறு’ எனும் இனிய கனியின்
உள்ளிருக்கும் சுவைகளில் ஒன்றாயிருப்பது, இந்திய வரலாறு;
அந்தச் சுவையில் சுவையாக ஒன்றியிருப்பது;
இந்தத் தமிழக வரலாறு!
கோடி - கோடி - கோடி -
எத்தனை கோடி ஆண்டுகளுக்கு
முன்போ; ஓராண்டு - ஒரு திங்கள் -
ஒருநாள், ஒரு நாழிகை, ஒரு நொடி -
எதிரே இருப்பது எதுவென்றோ;
எவரென்றோ எதுவும் தெரியாத
இருள் - இருள் - இருள் -
அந்த இருளின் நிறம்;
இப்போது தெரிகிறது,
கறுப்பு என்று! ஆனால்
அப்போது தெரியாது - காரணம்;
கண்டதில்லை; எந்த வண்ணத்தையும்!
கறுப்பு, சிகப்பு, பச்சை, மஞ்சள்,
நீலம். வெள்ளை இப்படியெல்லாம்
ஒவ்வொரு நிறமாகப் பெயர் சூட்ட
அந்த நிறமும் எம்முன்னால்
தனித்து வந்ததில்லை.
அன்று நாம் கண்டதெல்லாம்;
கறுப்பு நிறம் ஒன்றுதான் என
இன்று உணருகிறோம்
அதற்கு அப்போது
வெள்ளை என்று பெயர் வைத்திருந்தால்;
இப்போது இருட்டின் நிறம்;
வெள்ளை - வெள்ளையேய்தான்!
