உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

காலப் பேழையும் கவிதைச் சாவியும்

கவிதை 15 · 15 / 58

கண் விழித்துக் கண்டது கருங்கட் கூற்றம்!”

(சிலப்பதிகாரம்)

காலப் பேழையினைத் திறந்து வைத்து

கதைகள், கவிதைகள் வாயிலாக

கடந்த கால வரலாறு இவ்வாறு கூறும் பொழுது ;

கண்ணுக்குத் தெரியாமல் இதுவரையில்

திறம்பட உண்மைகளை மறைத்திருந்த பெருந்

திரைகளை விலக்கிக் காட்டி ;

‘திராவிடர்’ என்போர் இனம் இத்திருநாட்டில்

இராவிடம் இல்லையென்பதை எடுத்துச் சொல்லுவது ;

மறந்து போன இனப்பகை யுணர்வை மீண்டும் எழுப்பிடத்

தொடர்ந்து நடத்தும் ‘துவேஷச் செயல்’ எனத் தூற்றிச் சிலர்

எழுதுகின்றார் கடிதம் – ஏசுகின்றார் மறைவில்

எதையும் தாங்கும் இதயம் உண்டு எனினும் ;

எதிர்ப்புக் குரலுக்கோர் மறுப்புக் குரல் அல்ல ;

இதமான விளக்கக் குரல் கொடுக்க எண்ணுகின்றேன் ;

எனவேதான் இதனை எழுதுகின்றேன்

காலை நடைப் பயிற்சியின் போதோ ;

கடும் வேக ஓட்டப் பந்தயத்திலோ ;

காலில் சிறு கல்லோ, முள்ளோ

தட்டுப்பட்டு விட்டால் ; அது நம்மை அறவே

தடுத்து விடாதென்றாலும் – தயங்கி நின்று ;

தடை நீக்கிக் கொண்டுதானே மேலும் செல்வோம் –

எதிர்க் கருத்துக்களையும் அப்படித்தான் நினைத்துக் கொண்டு

என் பயணம் தொடரும் நிலையில் –

இங்கே சற்று நிற்கின்றேன் ; அடுத்து

மிடுக்குடன் பயணம் மீண்டும் தொடரும்.

தடுத்திட முனைவோர்க்குத் தரும் விளக்கம் இதுதான்!

“ஆரியம், திராவிடம் என்று ஆறிப் போன தேநீரை

காரியம் இப்போதென்ன சாதிப்பதற்கென்று ;

அடுப்பில் வைத்து சூடேற்றப் பார்க்கின்றீர்?” என

துடுக்குமிகு கேள்வி யொன்றால் துளைக்கின்றார் சில பேர் ;

என் செய்வது ; ஏழை வீட்டில் அதுதான் “தேவாமிர்தம்!”

நன்செய் புன்செய் நாலாயிரம் ஏக்கர் நிலக்கிழார் எனில் ;

இனம், மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, நாடு பற்றிக்

கவலையின்றி –

பணமேடு, செல்வக் குன்று, பொன்மலை, வைர வைடூர்ய

பார்வதங்கள் காண்பதிலே

காலத்தைச் செலவிடுவர்! காபியோ, தேநீரோ, வேறெந்த

பானமோ – அது

காலங் கடந்திடாத சரக்காக இருக்கும் அவர் மாளிகையில் சூடு

மாறாமல்!

ஆரியர், திராவிடர் என்றதும் ஆத்திரப்பட்டு அடியேன்மீது

அர்ச்சனை நடத்துகின்றார் – இல்லாததை நான் சொன்னது போல்

பொல்லாத கோபம் வருகின்றதே ஏன்?

புதைந்து கிடக்கும் மண்டையோடு எலும்பெடுத்து

வாழ்ந்த இன வரலாறுகளை வகைப்படுத்தி முறைப்படுத்தி

ஆழ்ந்து செய்யும் அகழ்வாராய்ச்சி சாட்சி கொண்டு

அய்யர், அய்யங்கார்கள், சாமா, சாஸ்திரிகள் என

அறிஞர்களாம் வரலாற்று வல்லுநர்கள் வெளியிட்டுள்ள

கருத்துக்கள் கூட கண்ணிருந்தும் காண மறுப்போர்க்கு

காதிருந்தும் கேட்க விரும்பாதோர்க்கு –

உணர்விருந்தும் உணர மாட்டோம் என்போர்க்கு

உரிய இடம் எதுவோ ; அதுதானே கிடைக்கும்!

இந்த மேதைகள் எல்லாம் ; என்ன பதில் அளிப்பார் ;

இதோ – இவர்களின் கூற்றுக்கு? எனக் கேட்கின்றேன்.

“தமிழர், தமிழகத்தின் பழங்குடியினர் மட்டுமல்ல ;

உலகத்தின் ஆதி மக்களும் அவர்களாகவே இருந்திருக்கலாம்”

இதனைக் கூறியவர் “தமிழர் சரித்திரம்” எனும் நூலில்

திரு. பி.டி. சீனிவாச அய்யங்கார் எனத் தெரிவிக்கின்றேன்.

“ஆரியர் நாகரிகத்தை விடத் தமிழர் நாகரிகம் மிகப்

பழமையானது” எனப் பகருகின்றார் ;

“திராவிட இந்தியா” எனும் நூலில்

திருவாளர் சேஷ அய்யங்கார் –

“ஆரியர் தமிழகம் வந்து

தமிழர் நன்மைக்கோ தீமைக்கோ

என்பதை அறிஞர்கள் ஆராய்ந்து கொள்க”

என “தமிழ் மொழி வரலாறு”

எனும் நூலில் பரிதிமாற் கலைஞராம் –

சூரிய நாராயண சாஸ்திரிகள் சொல்லியுள்ளார் –

காரண காரிய விளக்கமுடன்

கடந்த கால முதல் இந்நாள் வரை

உலக வரலாறு நான் உரைக்கின்ற போது

உண்மை வரலாறு மறைக்காத நிலையில்

காலப் பேழையைத் திறப்பதினாலே ; புதிய

களம் ஒன்றும் விளையாது ;

பிறப்பினால் உயர்வு தாழ்வு எனும் –

பழைய நினைவு பட்டுப் போனாலே போதுமானது – அதனால்

குறுகிய எண்ணம் கொள்ளாமல்

பருகிடலாம் இந்த “ஆரிய” தேநீரை!

தரணியின் வரலாறு எழுத முன்வருவோர் யாராயினும்,

தற்காலத் தேவையான தாளே இல்லாமல் எழுதலாம் ;

தரமான ஓலையில்லாமல் எழுதலாம் ; விஞ்ஞானத்

திறம் காட்டும் கணினியின் தயவில்லாமல் எழுதலாம் –

ஆனால் ;

தமிழகம் பற்றிய குறிப்பின்றி எழுத இயலுமா எனில் ;

தலை நிமிர்த்தி அறைகூவல் விடுத்திடலாம் –

எழுதலாம் ; எழுதினால் அது –

முழுமையாக இருக்காது, முறையாகத்தானிருக்கும்!

‘உரோமாபுரிப் பாண்டியன்’ எனத் தொடர ஓவியமாக

ஒரு வரலாற்றுப் புதினம் எழுதும் வாய்ப்புப் பெற்றேன் – அதனை

வெளியிட்டுப் பயன்மிக்க உரை வழங்கியவர்

வீரத் தமிழ்ப் பேராசான்

விழியின் ஒளி போன்றார் – விரிவான் அனையர்

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணராவார்.

தகுதியெல்லாம் பெற்ற நீதியரசர்

தக்கோர் போற்றும் நேர்மையாளர்

அன்பு கமழ் அனந்த நாராயணன்

அற்புத உரையாற்றி அகமகிழ்ந்தார்.

நூலின் முதற்படி பெற்றுக் கொண்டு

பாவில் தேன் கலந்த பாராட்டு வழங்கியவர் –

தோளில் கை போட்டுப் பழகிய தோழர் – தமிழர்க்குத்

தொகை தொகையாய்க் கவிதை தந்த கண்ணதாசன்.

அந்நூலில் அறிமுக உரையெனும் பகுதியில்

அடியேன் அளித்திருக்கும் ஆதாரங்கள் ;

இன்றைக்கு இந்தக் ‘காலப் பேழை’யில் என்றல்ல –

என்னைக்கும் வரலாற்றுக் கணக்கில் வரவு வைக்க வேண்டியதே!

அன்று நான் எழுதி வெளிவந்த

அந்த நூலுக்கான அறிமுக உரையை ;

அப்போதிருந்த வடிவத்திலேயே

இப்போது தருகின்றேன் –

“உரோமாபுரியின் முதலாவது மன்னர் மன்னனாக மணி

மகுடம் அணிந்து கொண்டான் ஆக்டேவியஸ்! “மகிமை

பொருந்திய மகாவீரன்” என்ற வீர வாசகத்தின் சுருக்கமான

பெயராக “அகஸ்டஸ்” என்ற பட்டத்தை உரோமாபுரிப்

பாராளுமன்றம் ஆக்டேவியசுக்குப் பூரிப்போடு சூட்டி மகிழ்ந்தது.

அந்தக் காலத்திலேதான் நமது பழம் பெரும் தமிழகத்தின்

முப்பேரரசுகளின் கொடி நிழலில் கொற்றம் தழைத்துக்

கொண்டிருந்தது எனவும், சோழ மண்டலத்தில் திருமாவளவன்

இரண்டாம் கரிகாற் பெருவளத்தான் ஆண்டு கொண்டிருந்தான்

எனவும் வரலாற்றுப் பெரியவர்கள் வரையறுத்துள்ளார்கள். இந்தக்

கரிகாலனின் காலம் கி.மு. 60 முதல், கி.மு. 10 வரை என்பதாகத்

தமிழ்ச் சான்றோர் குறிப்பிடுகின்றனர்.

உரோமாபுரியிலே கோலோச்சிய அகஸ்டஸ் சீசரின்பால்

பாண்டிய மன்னன் தனது தூதுவரை அனுப்பியிருந்தான் என்றும்,

அது கி. மு. 20 என்றும் குறிப்புக்கள் காணப்படுகின்றன.

அங்ஙனமாயின் அந்தத் தூதுவரை உரோமாபுரி அகஸ்டஸ்

மன்னனிடம் அனுப்பி வைத்த பாண்டிய அரசன் யார்?

முதல் பதிப்பு: ஜூன் 2006 — தமிழ்க்கனி பதிப்பகம் / பூம்புகார் பதிப்பகம், சென்னை