காலப் பேழையும் கவிதைச் சாவியும்
கவிதை 14 · 14 / 58
கலைவாணரே! உம்மையெல்லாம்
இகழ்ந்தார்கள்!
இகழ்ந்தார்கள்,
இகழ்ந்தவர்கள், இன்னும்
உயிரோடு இருக்கிறார்கள்,
வட நாட்டில் மன்னர்களாய்!
பொருணை நதியும், பொழிவும்
சூழ்ந்த எழில்மிகு வஞ்சித்
தலைநகரே, உன்னை
இகழ்ந்தார்கள்! இகழ்ந்தார்கள்!
இழிகுணம் படைத்தோர்
இகழ்ந்தார்கள் ; அமைச்சர்
அழும்பில் வேள் இருக்க
வீரன் வில்லவன் கோதை
தளபதியாயிருக்க – உங்கள்
திரண்ட தோள்களில் எல்லாம்
வலிமை வளர் பிறையாயிருக்க –
ஆற்றோரத்தில் மந்திரம்
ஜெபித்துக் கொண்டிருக்க
வேண்டிய சிலதுகள்,
ஆவேசக் கூச்சலிட்டதாம் –
வீரர்களே! பார்ப்போம் ஒரு கை!
அந்த நா காக்கத் தெரியாத
நாடோடிகளை! தும்பி வாடி,
தோரணங்கற்பட்டு, வேட்ட
மங்கலம் கோட்டைகளிலுள்ள
வீரரெல்லாம் கிளம்பட்டும்!
காளையரே, காதலியருக்கு
கடைசி முத்தம் இதுவாக
இருக்கலாம் என்று கூறி விட்டுப்
புறப்படுங்கள்! நாளென்ன
சாகப் பயப்படும் சமூகமாயா?
சமருக்கஞ்சும் இனத்தவரா,
அந்தச் சாமரமேந்திகளிடம்
சரணடைய! இல்லை! இல்லை!
களத்திலே நமது தலைகள்
பறி போகலாம்! ஆனால் கனல்
கக்கும் கண்களோடு அவை
கொய்யப்படும். தசைகள்
கிழித்தெறியப்படலாம்!
ஆனால் சுயமரியாதை
இரத்தத்தின் சூடு தனியாமல்
அவை கிழிக்கப்படும்,
முரசு தட்டுங்கள்! இமயத்தை
முட்டுங்கள்! தமிழன் தோற்ற
தில்லை! தோற்றதில்லை!
புறப்படுங்கள்!”
காட்சி 3
குயிலாலுவம்.
( சேரன் செங்குட்டுவனுக்கும், கனக விஜயருக்கும் நடைபெற்ற
போரில் செங்குட்டுவன் வெற்றி பெறுகிறான்)
சேரன் : வில்லவா! வெற்றி முழங்கும் இந்த
இடத்திற்கு பெயர் என்ன?
வில்லவன் : குயிலாலுவம்.
சேரன் : குயிலாலுவம், குறித்துக் கொள்!
இந்தப் பாறைகள் அனைத்தும்
பைந்தமிழ் வீரம் தீட்டிய ஏடுகள்!
வெற்றி மட்டும் போதாது வில்லவா,
அந்த வீணர்களை விடக் கூடாது.
வில்லவன் : காஷாய உடையிலே ரிஷிகளைப்
போல் எங்கோ ஒடிவிட்டார்களாம்
கனக விஜயர்கள்....
சேரன் : புதுமையல்ல....
அவர்களுக்கு உரியதான ஒரே
பழக்கம் அதுதான்!
(கனக விஜயர்கள் சாமியார்
உடையில் கொண்டு வரப்படுகிறார்கள்)
சேரன் : யார் இவர்கள் ?
வில்லவன் : கனக விஜயர்.
சேரன் : கனக விஜயர். கனக விஜயர்....
வீராதி வீரர்களே! நன்றாக
இருக்கிறது போர்த் திறமை!
முதுகு காட்டுவது – முக்காடு
போடுவது – மறைந்திருந்து
தாக்குவது – மகானாய் மாறுவது,
முனிவர்
வேடத்தில் இருக்கிறீர்களே,
இதற்குப் பதில் சொல்லுங்கள்...
புராணத்திலே தேவாசுர யுத்தம்
எவ்வளவு நாள் நடந்தது ?
கனகர் : பதினெட்டு ஆண்டுகள்!
சேரன் : ராம ராவணப் போர் ?.....
கனகர் : பதினெட்டு மாதங்கள்!
சேரன் : பாரதப் போர் ?
கனகர் : பதினெட்டு நாட்கள்!
சேரன் : வீரர்களே, நினைவிருக்கட்டும்.
சேரன் செங்குட்டுவன்
கனக விஜயருடன்
நடத்திய போர், பதினெட்டே
நாழிகையில் முடிந்து விட்டது.
கனகர் : மன்னவா, மன்னியிடுகிறோம்....
மன்னித்து விடுங்கள்!
சேரன் : மன்னிப்பதா ? நான் மன்னிப்பதா ?
தமிழ்நாட்டு மண்ணில் வந்து
மண்டியிடுங்கள். அது உங்களை
மன்னிக்கட்டும்.....
வில்லவன் : மன்னவா, தமிழகம் திரும்ப
வேண்டாமா ? புறப்பட்டு
முப்பத்திநான்கு திங்கள்
ஆகின்றனவே.....
சேரன் : புறப்படுவோம் – வில்லவா.
அதற்குள் கண்ணகிக்குச் சிலை
நாட்ட இங்கு கல் எடுக்க வேண்டும்
மல்லவா ?
வில்லவன் : ஆமாம்....
சேரன் : அந்தக் கல்லைச் சுமப்பதற்குச்
சரியான எருதுகள் கிடைத்துவிட்டன.
கனக – விஜயா, தமிழரின்
வீரத்தின் மீது வீசினாய் ஒரு
சொல் – இப்போது தூக்கு கல்!
தமிழறிஞர்களும், தகுதி மிக்க ஆய்வாளர்களும்,
தன்மானப் புலவர்களும், உண்மை வரலாறு ;
உணர்ந்திடத் துடிக்கும் ஆர்வலர்களுமன்றோ ;
அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் அலைந்து தேடி ;
மறைக்கப்பட்ட மணிக் குலத்தைக் கொண்டு வந்து
மகுடத்தில் பொருத்த வேண்டியுள்ளது.
கண்ணகி சிலை வடிக்கக் கல் எடுத்திட
கங்கைக் கரையில் சேரன் களம் காண்பதற்கு முன்பே
அந்த நதியில் அவன் அன்னை நீராடச் செல்வதற்கு ;
அருந்துணையாக பெரும்படையுடன் அவனும் சென்றான்.
முதல் தடவையாக சென்ற போதே – அவனை
முற்றுகையிட்ட ஆரிய மன்னர்களை
முறியடித்து வெற்றி கொண்டான்
முழுமதியாய் அன்னை முகம் மலர வைத்தான்!
“கங்கைப்பேர் யாற்றுக் கடும்புனல் நீத்தம்
எம் கோ மகளை ஆட்டிய அந்நாள்
ஆரிய மன்னர்
ஒரு நீயாகிய செரு வெங்கோலம்
