காலப் பேழையும் கவிதைச் சாவியும்
கவிதை 20 · 20 / 58
இழி செயல்!
இழி செயல் என்பேன் நான்!”
என்றான் சேரன்.
கவலை மிகக் கொண்டான் -
காவல் மரத்தை மட்டுமல்ல;
காவலிலிருந்து பழையனையும்
விடுவித்துக் கவலை தீர்த்துக் கொண்டான்.
திராவிட இனத் தமிழரிடம் வீரம் இருந்தது, விவேகம் இருந்தது,
திக்கெட்டும் புகழ் மணக்கும் திறன் இருந்தது -
போரில் புலி என்கிற புய வலிமை இருந்தது; பகைவனிடம்
புறமுதுகிடா மான உணர்வு மண்டிக் கிடந்தது!
நெஞ்சில் வேல்தாங்கி களச்சாவை சந்திக்கும்
அஞ்சாமை அணுப்பொழுதும் அகலாமல் இருந்தது
கலை ஆர்வத்தின் சிகரம் என்ற நிலை; அலைகடல் தாண்டி
இருந்தது -
நிலை குலையாக்க கொள்கை உரம் இருந்தது -
ஆனால்
ஆனால்
அந்தோ; தமிழரிடையே
இன ஒற்றுமை என்ற
அந்த ஒன்றுதான் இல்லை என்பதற்கு
இந்த வரலாற்று நிகழ்ச்சி நம்மை
மிக வருந்தச் செய்யும் நிகழ்ச்சியன்றோ!
வீரம், மானம் இரண்டுக்கும்
எடுத்துக்காட்டாய்த் திகழ்கின்ற
வெண்ணிப் போர் பற்றி
எண்ணிப் பார்த்திடில் - மீட்டிய
வீணையின் நரம்புகள் போல
வீரரின் நரம்புகளும் அதிரும் -
இதயம் விம்மும் -
இருவிழி, அருவிகள் ஆகும் -
பெருவீரன் கரிகால் சோழனுக்கும்
சேரலாதன் எனும் மன்னனுக்கும்
தஞ்சைக்கடுத்த தமிழூராம் - கோயில்
வெண்ணியில் நடைபெற்ற போர்
எண்ணிலடங்காப் பிணங்கள் வீழ்ந்து;
திண்ணியராம் சேரர் சோழர் நேருக்கு நேர் நின்று
இருவருமே வேலும் வாளுமேந்தி
பொருதினார் அந்தக் குருதிக் களத்தில்!
கரிகாலன் எறிந்த வேல், பாய்ந்து சென்று
கண் மூடித் திறப்பதற்குள்
சேரனின் மார்பைத் துளைத்து
செங்குருதிச் சேற்றில் குளித்து - அவன்
முதுகுப் புறம் எட்டிப் பார்த்து
முடித்தது வீரவேந்தன் வாழ்வை!
மரணமடைந்தான் சேர மன்னன் என்று
மனமாரக் கூற மாட்டேன் - மானம்
உடைந்தது என்று பதைத்துப் போய் - தமிழர்
வழக்கிற்கு விதிவிலக்கு கோராமல்
‘வடக்கிருந்து’ உயிர் விடுவதற்குச் சேரன்
முடிவெடுத்ததால் மொழிந்தேன் அவ்வாறு!
வேல் கம்பும் வாளும் எடுத்துக் கொண்டு
விரைந்து செல்வேன் ‘வடக்கிருக்க’ என்றான் -
போரில் புறமுதுகிட்டு வந்த காயமல்ல - முதுகுப்
புறத்தே வேல் முனை வெளிப்பட்ட காயம் கூட
போரில் தனக்குற்ற அவமானமெனக் கற்பித்துக் கொண்டு
விழுப்புண்தான் என்று ஆறுதலோ, அகமகிழ்வோ கொள்ளாமல்;
வீழ்ந்து விட்டான் சேரன் சாவில்; வடக்கிருந்து - புகழ்
பூண்டு விட்டான் என்று புலவர் கழாத்தலையார் பாடினார்.
என்ன பாடல் அது?
“முரசு ஒலிக்க மறந்தது -
யாழ் இசைக்க மறந்தது -
வடித்தகள் பாலின்றி வறண்டு கிடக்கின்றன -
தேனைத் தீண்டுவாரில்லை -
உழவர் யாரும் கழனிக்குச் செல்லவில்லை -
ஊர்ப்புற வெளிகள் அனைத்தும்
வெறிச்சோடி விட்டன -
எங்கள் சேர மன்னன், மானம் காக்க
வடக்கிருந்து உயிர் விடச் சென்றதாலே!”
★
“மண்முழா மறப்ப, பண்யாழ் மறப்ப,
இருங்கட் குழிசி அவிழ்ந்து இழுது மறப்ப,
சுரும்பார் தேறல் சுற்றம் மறப்ப,
உழவர் ஓதை மறப்ப, விழாவும்
அகலுள் ஆங்கண் சீறார் மறப்ப,
புறப்புண் நாணி, மறத்தகை மன்னன்
வாள்வடக் கிருந்தனன்”
(புறம் 65) (கழாத்தலையார்)
கழாத்தலையார் இரங்கற் கவிதை இப்படிப் பாட
களம் அமைந்த வெண்ணியில் பிறந்த பெண்பாற்புலவர்
வெண்ணிக் குயத்தியார் என்பார்;
கரிகாலன் வெற்றியைப் போற்றிப் பாடும்போது கூட;
“நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ!
சென்று அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே,
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப் புகழ் உலக மெய்திப்
புறப்புண் நாணி வடக்கிருந்தோனே!”
(புறம் 66) (வெண்ணிக்குயத்தியார்)
எனக் குறிப்பிடும் குயத்தியார்;
கரிகாலன் வெற்றி பெற்றுப் புகழ் பெற்றான்
சேரலாதனோ வடக்கிருந்து மானங்காத்தான் - என்று
கவிதை முத்தாரம் இருவருக்கும் அணிவிக்கின்றார்.
தீப் போல் இந்தச் செய்தி
திருநாடு முழுதும் பரவிடவே
திக்கெட்டுமிருந்து
திரண்டனர் சான்றோர்.
சிங்கமெனப் போரிட்டு வீழ்ந்த
சேரமானுடன் சேர்ந்து மாந்து
வடக்கிருந்து வாழ்வு துறக்கும்
விருப்புடன் விரைந்தனர் அவர்கள் -
“கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்
பொருதுபுண் நாணிய சேர லாதன்
அழிகள் மருங்கின் வாள்வடக் கிருந்தென
இன்னா இன்னுரை கேட்ட சான்றோர்
அரும் பெறலுலகத் தவனொடு செலீஇயர்
பெரும்பிறி தாகி யாங்கு!”
(அகம் 55) (மாமூலனார்)
கரிகாலன் வெற்றிக்கான மகிழ்ச்சியொரு புறம்
சேரமான் வடக்கிருக்க முடிவு செய்த
மான உணர்வு கண்டு மனத்துயர் ஒரு புறம் -
போரில் வீழ்ந்தவரும் - வெற்றி கண்டவரும்
போற்றுதற்குரியவர்களே என்று
புகழ் மாலை சூட்டிய
புலவர்களின் பரந்த உள்ளத்திற்கு
ஈடு இணையென
எதைத்தான் காட்டிட இயலும்!
கட்டிளங் காளையாக இருந்த போதே
கயவராம் சில பகைவர் மூட்டிய தீயில்
கணுக்கால் தீய்ந்து காவலையுற்று விடுபட்டவன்
கல்லணையால் புகழ் பெற்றுக் காவிரிக்கும் கரை அமைத்தவன்
உறையூர் பூம்புகார் என
ஒப்பிலாத் தலைநகர் இரண்டு
கொண்ட கொண்டலாம் சோழன்
கரிகாலன் புதல்வி கட்டழகுச் செல்வி
