இதயத்தைத் தந்திடு அண்ணா
பகுதி 9 · 9 / 13
கலைமகளாம் நம் அன்னை வள்ளுவனைத்
தலைமகனாய்ப் பெற்றெடுத்தாள்.
மலர் என்றால் தாமரைத்தான்
மன்னன் என்றால் கரிகாலன்
நூல் என்றால் திருக்குறளே
எனப்போற்றும் அறப்பனுவல்
அளித்திட்டான்; மாந்தரெல்லாம் களித்திட்டார்!
விண்முட்டும் மலையோரம் - நம்
கண்பட்டும் படாமலும் எழுகின்ற நச்சுமரம் போலப்
பண்பட்ட தமிழர் வாழ்வில் - முதுகில்
புண்பட்ட கொள்கையெல்லாம் மூண்டதங்கே!
சாதிகளைக் காணாது குறள் ஒலித்த தமிழ் மண்ணில்
பாதியிலே வந்ததம்மா பலகோடி சாதிகளும்!
அறிவு மணங்கமழ்கின்ற ஆலயங்கள் அற்றுப்போய்
ஆயிரம் தெய்வங்கள் உறைகின்ற கோயில்கள் கண்டுவிட்டார்.
மொழியுணர்வே இல்லாத வாயுணர்வின் மாக்கள் - தமிழ்
அழியினும் வாழினும் என்னென்று இருந்திட்டார்
அறநெறியே குறிக்கோளாய்த் திகழ்ந்திட்ட பெருநிலத்தில்
பிறநெறிகள் பயிர் செய்தார்; பிழை குவித்தார்.
மழையற்றுப் போன வயல்போல மாறிற்றுத் தமிழர் மனம்
அழுக்காறு - அவா - வெகுளி - இன்னாச் சொல் நான்குமின்றி
நடக்காது வேலையென்று நடத்திட்டார் சில தமிழர்!
பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லையென்று
பொருள் குவித்து வளம் செழித்த நாட்டில்- இன்று
இருள் கவிந்து வாட்டம் கொடி போட்டதங்கே.
வாடினாள் தமிழன்னை - சோகப் பாட்டுப்
