இதயத்தைத் தந்திடு அண்ணா
பகுதி 8 · 8 / 13
ஊர் மெச்சப் புகழ்ந்துரைத்தார் அண்ணன் கீர்த்தி!
ஆந்திரத்துப் பிரம்மானந்த ரெட்டிகாரும்
ஆகா - நீர் தானே அசல் காந்திய வாதியென்று
ஆராதனை செய்திட்டார் - ஆண்டொன்று கழியவில்லை!
மதுவிலக்கைத் தீவிரமாய் ஆக்குகின்றீர் பல
மாநிலத்தில் கை கழுவிக் கலயம் கட்டிவிட்டார் மரங்களிலே!
மகாத்மாவின் தோன்றல் நீர்தான் என்று
கீரியென்றால் மலையன்றோ - அந்த
மலைமுழுவதும் முகிலானார் நம் அண்ணா!
வி.வி. கிரி தந்த வாழ்த்துக்கு விளக்கமிது.
பன்னாட்டுப் பேரறிஞர் வாழ்த்தி நின்றார் - அன்று
தென்னாட்டுச் சிகரமாக இருந்திட்டோர்
அண்ணன் பற்றி
என்ன சொன்னார்?
பழந்தமிழ் வித்தகர் பல்லாவரத்தார் - அண்ணா,
பழந்தமிழ்ப் பேச்சால் மயங்கி நின்றார் - அந்த
மறைமலை தந்த புகழ்மொழி ஆயிரம்
பசுமலை பாரதி - பாண்டியன் தோற்றம் - அவரை
நாவலர் என்று நாடே அழைக்கும் - அவர்
சழக்கரால் வீழ்ந்த தமிழ் நிலம் காக்க - மன
அழுக்கில்லாத் தலைவன் கிடைத்தான் என்றே
அண்ணன் பெருமை சொன்னார் அன்று!
ஈராயிரம் ஆண்டின் முன்னும் இன்றுபோல்
இளையவளாய் இருந்திட்ட தமிழாம் அன்னை
நூறாயிரம் கோடி என ஆண்டு பல வாழ்வதற்கு
நூலாயிரம் செய்திட்ட புலவர்களை ஈன்றாள் எனினும்;
