உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

இதயத்தைத் தந்திடு அண்ணா

பகுதி 7 · 7 / 13

வெளியே வந்தவுடன்,

நிலைகுலையா நம் அண்ணா அன்று சொன்னார்

அது -

நேற்றுச் சொன்னது போல் இருக்குதம்மா!

தலைவரில்லை முன்னேற்றக் கழகத்துக்கு - என்

தலைவர் இருந்த நாற்காலி, காலியாக இருக்கும்! அதில்

தலைவர் அவர் என்றேனும் வந்தமர்வார்..

அதுவரையில் காத்திருப்பேன் என்றார்.

பூத்திருக்கும் மலர்த் தோட்டம்

காலைப் பனிநீர் வடிப்பது போல்

காத்திருந்து கூட்டம் கேட்டோர்

கண்ணீர் வடித்தார்

கண்ணீர்த் துளிகளே! நாட்டின் கண்மணிகளே! என அழைத்துச்

செந்தீர் சிந்துதற்கு அணிவகுத்தார்!

யாரேனும் கேட்டதுண்டா?

யாரேனும் புகன்றதுண்டா?

பதினெட்டு ஆண்டுக்குள் ஓர் இயக்கம்

பதுங்கிப் பாயும் வேங்கையெனப் - பாராள வந்த கதை?

ஈராண்டு முடியவில்லை என் அண்ணா ஆட்சியேற்று -

சீரார்ந்த செயல் பலவும் செயலுற்றார்!

ஏரார்ந்த உழவர்க்கெல்லாம் ஏற்றம் தந்து

எழில் வாழ்வு குவிப்பதற்கு எடுத்தார் முயற்சி!

உலகத் தமிழ் மாநாடு துவக்க வந்த

ஓங்கு புகழ்க் குடியரசுத் தலைவர்

இணையற்ற காட்சி கண்டேன் மாட்சி கண்டேன்

இதுபோல வாழ்வில் என்றும் கண்டதில்லை'யென