குணநாயகர் நேரு
பகுதி 3 · 3 / 7
நல்லவர் இருந்தார் நானிலம் வாழ ...
வல்லவர் இருந்தார் வாரி அணைக்க ...
போனது வருமோ? புலம்பலை நிறுத்து!
பூக்களின் ராணி! புன்னகை காட்டு!”
ஆறுதல் கூறினர், அழகு ரோஜா
தேறுதல் பெறாமல் தேம்பி யழுதாள்.
“இரவு உமிழும் எச்சில் என்பேன் பனித்துளியை-என்
இறைவனது இதழ் முத்தம் அமுதம் என்பேன் ...
அன்றுமுதல் தந்தெனக்கு ஆசை காட்டி ...
இன்றென்னை எச்சில் பனித்துளியில்
நனைத்து விட்டார்; என் செய்வேன்?
முடிசூடா மன்னவர் இனி என்னைத் தொடார்
என நினைக்கும் போதெல்லாம்
முள்ளாகக் குத்துதடி மேனியெல்லாம்!
வாழ்வில் சிரிப்பில்லா எனக்கு இந்தச் சிவப்பெதற்கு?
மனத்தில் மகிழ்வில்லா எனக்கு நறு மணந்தான் எதற்கு? ...
இந்தியச் சிம்மாசனத்தில் அவர் இருந்தார்—அவர்
இதயச் சிம்மாசனத்தில் நானிருந்தேன் ...
உறங்குகின்றார் விழித்தெழுவார்; படி
இறங்கி வந்து பாவையென அழைப்பதற்குள் .... அவர் நெஞ்சு
அரங்குதனில் ஆடுதற்குச் சிவப்பாடை புனைந்து நின்றேன்
அதற்குள் காலக்
குரங்கின் கை ‘மாலை’யாக ஆக்கிவிட்டார் என் வாழ்வை
போய்விடுங்கள் எனை விடுத்துத் தனியாக
