குணநாயகர் நேரு
பகுதி 2 · 2 / 7
தெரியவில்லை யாரை என்று...
“முழங்காலை வலிக்குதடி”. என்றாள் முல்லை
“சிவந்ததடி என் பாதம்” எனச் செண்பகம் இளித்தாள் பல்லை ...
சாமந்தி மல்லிகை இருவர்க்கும் பெருந்தொல்லை—
பூங்காவின் மூலையொன்றில் புலம்பல் ஒலி கேட்டவுடன்
பூப்பெண்கள் “அதோ, அதோ!” எனச் சொல்லி
அந்த இடம் பறந்திட்டார் ...
“பூமானே! புகழ்க்குன்றே! போனாயோ என் தலைவா?
கோமானே! கொள்கை வேந்தே! உன்னைக்
கொள்ளையிட்ட கூற்றெங்கே?
எனையெடுத்து முத்தமிட்டு இதயத்தில் ஏற்றிக் கொண்டாய் —இன்று
எனைவிடுத்து நீ மட்டும் நெடுந்தொலைவு போய்விட்டாய் ...
என்ன நியாயம்?
இதழுக்குத் தேன் தருவாய்-பதிலுக்கு
நான் தருவேன் ... மறந்தா விட்டாய்?
மார்பகத்தில் அணைத்திருப்பாய்
மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரளும்
மங்கையென்னைப் பிரிவதற்கு உன் மனந்தான் கல்லோ?”
எனக் கதறும் ஒலி கேட்டு
இனிய நறும் பூப்பெண்கள் அருகே சென்றார் ...
மடை திறந்த வெள்ளம் போல் கண்ணீர் கொட்டி
மயங்கிவிழும் நிலையிலே ரோஜா நின்றாள் ...
மல்லிகை முல்லை அருகே சென்று—
“என்னடி ரோஜா இன்னமும் அழுகை?
