அண்ணா கவியரங்கம்
பகுதி 6 · 6 / 16
உழவன் போல உள்ளமெலாம் பூரிப்புத் துள்ளி எழ
காய்ந்த வயிற்றுக்குக் கஞ்சி வார்த்திடவே
கற்கண்டே! தேன் பாகே! திருக்குறளே!
நீ காஞ்சியிலே பிறந்திடு என்றாள்
பிறந்திட்டான் நம் அண்ணனாக;
அறிவு மன்னனாக—
பொதிகை மலைத் தென்றலாய்
போதாய் மலர்கின்ற தமிழ் உணர்வின் புதுமணமாய்
பதிகத்துப் பொருளாய்
பழந்தமிழர் புறப்பாட்டாய்
வந்துதித்தான் அண்ணன்—கீழ்
வானுதித்த கதிர் போல—
புரியாதார்க்கு ஒரு புதிர் போல!
அவன் புகழைப் பாடுதற்கு
அவன் வளர்த்த தம்பியர்கள்
அவன் தந்த தமிழ் எடுத்து
இவண் வந்தோம் இதுதான் உண்மை
கவண் விட்டுக் கிளம்புகின்ற கல்போலக்
குறி பார்த்துச் சொல் வீசும் கவிவாணர்
பொருநை நதிப் பெருக்கனைய சுவை கொட்டும்
கருணை ஆனந்தப் பெரும் புலவர் போர்ப்
பரணி பல பாடியவர்—தமிழ்க் கவிதைத்
தரணியிலே தனக்கோர் இடம் அமைத்துக் கொண்ட
தகைமையாளர் தண் என்ற உளம் படைத்தார்—
என்,
தனி நண்பர்—கனி அன்பர்
