அண்ணா கவியரங்கம்
பகுதி 3 · 3 / 16
விழிமலர்கள் வேலாகும்—வாளாகும்
தீங்கொன்று தமிழ்த் தாய்க்கு வருகுதென்றால்
கால் மலர்கள் வாடிடினும் அவர் கடும்பயணம்
நிற்காது!
கை மலர்கள் பிணைத்து நிற்கும், தம்பியரை, கழகத்தை!
அம்மலரே எதிரிகளை மன்னித்து
நெற்கதிர் போல் தலைநாணச் செய்துவிடும்—
மக்களாட்சி மலர் குலுங்க
சமதர்மப் பூ மணக்க
தாய் மொழி தமிழே வாழ்வுப் பொழிலாக
ஆடிவரும் தென்றல்
நாடி வரும் பூமுடியே! புகழ் முடியே! உமைத்
தேடிவரும் வாழ்த்துக் குவியலிலே—தினம்
பாடி வரும் வண்டாக நான் பறப்பேன்,
உனைக் காக்க எனைத் துறப்பேன்.
என்;
ஒரு கோடித் தமிழ் இளைஞர் பாடுகின்ற பாட்டுக்குப் பெருந்தலைவன்
இதோ;
ஈராயிரம் ஆண்டின் முன்னும் இன்று போல்
இளையவளாய் இருந்திட்ட தமிழாம் அன்னை
நூறாயிரம் கோடி என ஆண்டு பல வாழ்வதற்கு
நூலாயிரம் செய்திட்ட புலவர்களை ஈன்றாள் எனினும்;
கலைமகளாம் நம் அன்னை வள்ளுவனைத்
தலைமகனாய்ப் பெற்றெடுத்தாள்.
மலர் என்றால் தாமரை தான்
மன்னன் என்றால் கரிகாலன்
நூல் என்றால் திருக்குறளே
