உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

அண்ணா கவியரங்கம்

பகுதி 2 · 2 / 16

கமழ் மணப் பாவில் மீண்டும் பிறந்திட

உலகத் தமிழர் மாநாடு கூட்டி

யாதும் ஊரே யாவரும் கேளிர்—என

உறவினை வளர்க்கும் புறப்பணிக் குழுவினர்

வழங்கிய அழைப்பால்

பூம்புகார் நகரம் வந்துளர் கவிஞர்

தலைவன் நானாம்...

அமைச்சர் நினைவை சில மணித்துளி துறந்து

அருங்கலை ஆர்வ நெஞ்சைத் திறந்து

ஆர்த்திடும் விடுதலை முரசினைக் கேட்க;

அனுமதி நல்கிய அனைவர்க்கும் நன்றி

தாயகத்து விடுதலைக்குத் தமை ஈந்த

தகைமையாளர் பலரைக் கண்டோம்; அந்தத்

தாயகத்து விடுதலையின் போர்த்தலைவர் பெரியாரின்

தளபதியாய்

தமிழ் மொழியின் விடுதலைக்கு

தமிழ்க் கலையின் விடுதலைக்கு

தமிழ்ப் பண்பின் விடுதலைக்கு

தளராது பாடுபட்டுக்

கொட்டு முரசெனக் கூறுகின்ற அண்ணாவை

எட்டுக் கவிஞர் இங்கே பாடுகின்றார்

நான் பாடாமல் விடலாமோ?

பூவிதழின் மென்மையினும் மென்மையான

புனித உள்ளம்—அன்பு உள்ளம்—

அரவணைக்கும் அன்னை உள்ளம்—அவர்

மலர் இதழ்கள் தமிழ் பேசும்—

மா, பலா, வாழை யெனும் முக்கனியும் தோற்றுவிடும்.