அண்ணா கவியரங்கம்
பகுதி 15 · 15 / 16
இப்போதும் நினைத்துக் கொண்டால்—
தனியாக சிரிக்கின்றேன் நான்—
போகட்டும் வேடிக்கை விட்டொழித்து;
புதுமை மிகு அரசியலில் புகுந்திடுவோம்—
எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றே
எழுதிப் பேசி—அது கேட்டு வந்தவரை அணைத்தபடி
தம்பியுடையான் படைக்கஞ்சான் எனக் கூறி;
எதிரிகளைக் கண்ணியமுடன் ஏறெடுத்து உற்று நோக்கி;
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்றே;
சாதித்துக் காட்டிய
சாரநாத்துப் புத்தன் இவன்;
சாத்வீகக் காந்தி இவன்;
சகமெல்லாம் ஒப்புகின்றார்; இங்கு சில
சடலங்கள் மட்டும் வயிறு உப்புகின்றார்;
எரிச்சலாலே!—
அவர் தொலையட்டும்;
அண்ணா
அரசியலில் கண்ட வெற்றி—
அவனியெங்கும் போற்றும் வெற்றி—
அமைச்சராக ஆன வெற்றி—அப்போதும்
அடக்கத்தைக் காட்டும் வெற்றி—நல்
அமைதிதனைப் பேணும் வெற்றி—இதற்கெல்லாம்
எடுப்பாக அகன்ற நெற்றி—
—இந்த வெற்றியெல்லாம்
விளைந்த விதம் எவ்வாறென்றே
வியந்திருக்கும்
தமிழுலகம் விளக்கம்
