உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

அண்ணா கவியரங்கம்

பகுதி 14 · 14 / 16

நடந்ததங்கே—

இனி உலகில் வேலையில்லை என்று

துரைராஜ் (அண்ணா வேடம்)

விஷமருந்தி மாண்டு போவான்

அவன் மீது அவன் தோழன் சாம்பசிவம்

(அது நான் தான்)

அலறி வீழ்ந்து ஐந்தாறு நிமிடங்கள் கதறவேண்டும்

அன்றைக்கு எனக்கந்த

நாடகம் புதிதானதாலே;

மாண்டது வேடமென்று எண்ணாமல்

மறைந்தது அண்ணா என்ற நினைப்பாலே

(தவறான நினைப்பாலே)

உணர்ச்சி பாய்ந்து

உருண்டெழுந்தேன்—எழுதிய உரைநடையை

ஒப்புவித்து விட்டு உடன் எழுந்து நாடகத்தை

முடிக்காமலே

சொந்த வசனம் அரைமணி நேரம் பேசுகின்றேன்;

அண்ணாமேல் வீழ்ந்து வீழ்ந்து—

அப்பாடா—கடைசியிலே—திரையும் விட்டார்—

நானும் முடித்தேன்—

அய்யோடா என்றெழுந்தார் அண்ணா; தன்

தோளைப் பிடித்தவாறு—

என்ன என்றோம் எல்லோரும்;

இவன் அழுதழுது என் தோளில்

அமுக்கி விட்டான்—இதோ பார்

வீக்கம் வலி உயிர் போகுது என்றார்—

சிரித்துக்கொண்டே!