உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

அணையா விளக்கு அண்ணா

பகுதி 7 · 7 / 13

மூக்கு, முலை அறுத்தெரிந்த மும்மூர்த்திகளின் அவதாரம்

மூத்த மூர்த்தியாம் இராமனும், அவன் தம்பி இலக்குவனும்

இரக்கமுள்ள தெய்வங்களாம்

அயலான் மனைவி சீதை என்பதற்காக

அவளைத் தொடாமல் ஆஸ்ரமத்துடன் தூக்கிப் பறந்த

இராவணன் மட்டும் இரக்கமற்றவனோ?

உமது அகராதியில் இரக்கம் என்பதற்கு

தாருகா வனத்து ரிஷி பத்தினிகளிடம் தவ முனிவர்கள்

கூட்டணி வைத்து, கொட்டம் அடிப்பது தான் இரக்கம் என்று

பொருள் கூறுவீரோ?

அதனை ஏற்காதவர் எவராயினும் அவரை

இரக்கமற்ற அரக்கர் என்பீரோ?

அகலிகையின் கற்பை அபகரித்த அமரர் கோன்

இந்திரனும் - அவனாலே அகலிகைக்

கல்லாகக் கிடக்க நேரிட்டதும்

இந்திரனின் இரக்க முள்ள செயல் என்று

இயம்புகின்றீரா பெரியீர்? எனக் கேட்டு

தலை தொங்கப் போடுமளவுக்கு

நிலை குலைய செய்தது அண்ணா நீ அன்றோ?

இருடிகள், மகான்கள், ஈஸ்வர அவதாரங்கள்;

இரக்கமுள்ள இதயம் பெற்றவரா

எனக் கேட்டு - நீதி தேவனையே மயங்கி விழச் செய்த

வழக்கறிஞன் நீ - புதிய நக்கீரப் புலவன் நீ!

சிறுத்தொண்டர் மனைவியிடம் சிவபெருமான்

பிள்ளைக் கறி கேட்டு - அதனை

அள்ளி உண்ட செயலுக்கு;