அணையா விளக்கு அண்ணா
பகுதி 5 · 5 / 13
அறிஞர் பெருந்தகை சுந்தரனாரும்,
ஆசிய ஜோதி நேரு பிரானும்
அழுத்தமாய் வைத்த ஆதாரங்களைப்
பொருத்தமாய் எடுத்துரைத்துக்
கருத்துரை வழங்கிய காஞ்சித் தலைவனே;
அன்று முதல் தானே நீ என்றும்
அணையா விளக்கானாய் திராவிடப் பண்பாட்டைச்
சூழ்ந்த இருள் விலக்க -
அய்யா பெரியாரின் அறப்போருக்கு வாளாக வாய்த்தவனே;
அய்யன் குறள் போல அண்ணா உன் உருவம் -
கம்ப ரசமும், ரோமாபுரி ராணியும் காட்டும் உன் பருவம் - எனினும்;
ஆரியமாயை கண்டால் அடித்து விரட்ட உயரும் உன் புருவம்!
இதிகாச புராணமாய் இறைவன் அவதாரக் கதைகளாய்
இலக்கியம் ஒரு காலத்தில் இருந்தது தமிழருக்கு
இருப்பினும் நீ வந்த பின்தான்
இயக்கினோம் அதனை; வீர காவியமாய் - காதல் ஓவியமாய் -
இப்புவி அறிந்திட; ஆய்ந்து தெளிந்திட! அறிவு மணம் கமழ்ந்திட!
அய்யா தந்த துணிவும், அண்ணா நீ தந்த தெளிவுமன்றோ
சங்கத் தமிழுக்கு விளக்கமளிக்கவும் -
தங்கக் குறளுக்குத் தக்கதோர் உரை எழுதவும்
ஒல்காப் புகழ் பெற்ற
தொல்காப்பியத்தை ஊர் மன்றில் உயர்த்திக் காட்டவும்
துணிவை எனக்குத் தந்ததென்பேன் -
சிலப்பதிகாரச் செல்வி கண்ணகியின் புகழ் மிக்கப் “பூம்புகார்”க்
காவியம் படைத்திடவும் - கடற்கரையில் சிலை அமைத்திடவும் -
வைத்த சிலையை வாஸ்து சாத்திரக்காரர் வலுவில் அகற்றியபோது
பைத்தியக்காரச் செயல் என்று அவர்களை கண்டித்திடவும்
