உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

அணையா விளக்கு அண்ணா

பகுதி 3 · 3 / 13

“கூடங்குளம்” வந்து விட்டால் கூடி விடும் மின் உற்பத்தி - பின்

கவலையில்லை மக்களுக்கென்று - பிரதமரும், சோனியாவும்

உறுதியாகச் சொன்ன பிறகும்; அந்த உண்மையினை ஏற்காமல்

ஊர் கூட்டித் தமிழ்நாடு இருளாகிவிடுமென்று தம்பட்டம் அடிக்கின்றார் -

நாளைக்கு வெளிச்சம் வந்தால், நம்மோடு சேர்ந்து “தன்னால்” தான்

வந்ததென்பார் -

நமக்கேன் அவர்களுடன் வம்பு; அந்த அணையும் விளக்குகளை விடுத்து

“அணையா விளக்காம்” அண்ணா

அழைக்கின்றார்; அங்கு செல்வோம்!

வாரீர்!

அண்ணனே!

எங்கள் உயிரே!

உணர்வே!

இனமானக் கோவே!

எழுச்சியின் வடிவே!

எண்ணங்கள் மலரும்

எழிலார் சோலையே!

எஃகுக் கம்பிகளாம்

இனிய தம்பிகளின் இதயத் துடிப்பே!

(முதல் நூற்றாண்டு தொடக்கம் உனக்கு - ஆனால்

அறுபதுக்கு முன்பே முடிந்ததே ஆயுள் கணக்கு?

அழகு தமிழ்ப் பேச்சில்

அருவிகளை வென்றவன் நீ!

ஆங்கிலச் சொல்மழையோ - உன்

ஆற்றலுக்கு ஆலவட்டம்!

எழுத்துக் கற்கண்டுகளை மலையெனக் குவித்தாய்!

எறும்பென மாறி நாங்கள் அவற்றைச் சுவைத்தோம்!