உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

அணையா விளக்கு அண்ணா

பகுதி 2 · 2 / 13

அந்தக் காலத்தில் அடர் இருளில் அடுக்களை வேலை முழுதும் பார்த்து

ஆட்டுக்கறி, கோழிக்கறி சமைத்து வைத்துப் பரிமாறி

அன்புக் கணவனை கொஞ்சி மகிழும் வரை

அகல்விளக்கே துணையென்று இருந்த நிலை மாறி;

மின் விளக்கு ஏற்றாமல்; புன்னகை பூக்காது எனும்

புதிய நிலை பெற்றுள்ள இந்தக் காலம் வரை

வாழ்கின்ற மாந்தருக்கு மின் விளக்கு, மெழுகுவர்த்தி எல்லாமே ஒன்று தான்!

அகில இந்தியக் கட்சி என்று தேசிய வண்ணத்தை பெயரில்

கொடியில், கொள்கையில் இணைத்துக் கொள்ளும் பிற இயக்கங்கள் கூட

அடிக்கடி அதனை மறந்து விட்டு தமிழ்நாட்டில் மட்டுமே அரசியல் நடத்துகின்ற

அதிசயத்தைக் காணுகின்றோம் -

அதற்கோர் சான்றாக அடியேன் கூறுவேன் -

மின் சக்தி பற்றாக்குறை என்பது தமிழகத்தில் மட்டுமல்ல;

மராட்டியத்திலும் மற்றும் பல மாநிலங்களிலும் கூட

அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் மின் தடை உண்டு!

அங்கெல்லாம் சாலை மறியல், கடையடைப்பு என்று

அரசியலை அதற்காக வளைப்போர் இல்லை -

இங்கு தான் ஏடுகள் சிலவற்றுக்கு அதுவே வேலை...

கேலிச் சித்திரங்கள் கிண்டல் துணுக்குகள் -

அரசுடன் சேர்ந்து அவதி போக்கிட ஒத்துழைக்கும் உணர்வு;

அறவே இல்லை; அணுவளவும் இல்லை; ஆர்ப்பாட்டம் போர்ப் பாட்டு -

அரசியல், அரசியல்....

எல்லாமே அரசியல்....

ஒளி வந்த பிறகும் ஊரிலும் நகரிலும் ஒரே இருட்டு என்கின்றார்

முதலில் அந்தக் கனதனவான்களுக்காக; ஒரு

கண்ணொளித் திட்ட முகாம் நடத்தவேண்டும் போலும்!

(பலத்த கைதட்டல்)