அணையா விளக்கு அண்ணா
பகுதி 1 · 1 / 13
அண்ணா கவியரங்கம் என் தலைமையில்
சீர் பெற, சிறப்புற நடப்பதற்கு வாழ்த்திட வந்திருக்கும்
இனமானப் பேராசிரியப் பெருந்தகைக்கும் -
எரிமலைப் பெரியார் காண விரும்பிய
எழுச்சி யுக வழித் தோன்றல்
இளவல் வீரமணியாருக்கும் -
மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுக்கும்
அருமைச் சகோதரர் ஆர்.எம்.வீ. அவர்களுக்கும்
நீதியரசர் பெருமக்களுக்கும்
மானமிகு தமிழ்ப் பெருஞ் சான்றோர்க்கும்
மகளிர் குலத்தினர்க்கும்
மாணவத் தம்பியர்க்கும்
கல்வியாளர்க்கும், கலையுலகத்தினர்க்கும்
தொழிலாளத் தோழர்கட்கும் - நான் கூறும்
இனிய வாழ்த்துக்களையும், வணக்கங்களையும்
ஏற்றுக் கொள்க என வேண்டுகிறேன்.
நூற்றாண்டு விழா தொடக்கம் அண்ணாவுக்கு என்றால்
காற்றாண்டு கொண்டு வந்து குவித்த கார் மேக மெல்லாம்
அன்பு மழையாய்ப் பொழியும்
பண்புப் பயிராய் விளையும்!
அறிவுப் புனலாய்ப் பெருகும் -
அனலிடை மெழுகாய் உருகும்;
ஆங்கோர் ஏழையின் கண்ணீர் கண்டுவிடின்!
மின்சாரத் தட்டுப்பாடு என்பதாலே
“சம்சாரம்” சொல்லுகின்றாராம்; கணவனிடம்
மெழுகுவர்த்தி வாங்கி வருக; என்று -
