அணையா விளக்கு அண்ணா
பகுதி 10 · 10 / 13
என்று உறுதிபட நீ மொழிந்ததும் -
என் நெஞ்சில் நிலையாகி விட்டதால் தானே; அண்ணா -
நான் வளர்த்த “கடா” என் மார்பில் பாய்வதையும்
நன்றி மறந்து என் முதுகில் குத்துவதையும்
என்னால் தாங்கிக் கொள்ள முடிகிறது -
ஆனால்; கண்ணீரும் செந்நீரும் சிந்தி வளர்த்த கழகத்தை
எதிரிகட்குக் காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களின் இழி செயலை
எப்படியண்ணா தாங்கிக் கொண்டு; உயிர் வாழ முடியும்?
அண்ணா; நீ இருக்குமிடம் தேடி யான் வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தைத் தந்திடண்ணா என்று
நான் கேட்ட போது
இந்தா தம்பி யென்று நீ தந்த இதயம்
“மறப்போம்; மன்னிப்போம்” எனும் அந்த
மணிவாசகத்தையே உச்சரித்துக் கொண்டிருக்கும் -எப்போதும்!
துறப்போம் தூய லட்சியத்தை என்ற பேச்சுக்கு மட்டும்
இந்த இதயத்தில் என்றும் இடமில்லை என்பதை
உலகிற்கு உணர்த்திடுவோம்.
அன்று தமிழகத்தை வளப்படுத்தும் திட்டங்களுக்குப் போராடத்
தடந்தோள் உயர்த்துவதாகத் தமிழர்களை ஏமாற்றியவர்கள்; இன்று;
தாசானு தாசர்களாய் மாறிவிட்டார்
சேதுவே வேண்டாமென்கின்றார், செப்படி வித்தைக்காரர்!
சினம் கொள்ளல் தீதன்று; சேதுவும் அதனால் வரும் - தமிழ்
நிலச் செழிப்பும் தரை மட்டமாவதைத் தடுப்போர் கண்டு;
சிங்கத்தின் கூட்டமன்றோ; சிறு நரிகள் சூழ்ச்சிக்கா; தலை வணக்கம்!
பொங்குற்ற புலிகள் முன்னே புல்லியர்க்கா ஆர்ப்பாட்டம்?
எங்குற்றான் என் தமிழன்?
செங்குத்துத் தூணைப் போல் நிற்கின்றானா?
