ஆந்தையும் அரசனும்!
பகுதி 7 · 7 / 8
தப்பாமல் நெருங்கிற்று—தளர் வுற்றான்
“எப்போதும் உளமிருந்த பிசிராந்தை
இப்போது வருவாரா காண்பதற்கு?”
எனக் கேட்டார் அருகிருந்தோர்.
வரமாட்டார் எனச் சொன்னார்—இவர்
வடக்கிருத்தல் சேதி அவர் அறியார் என்றார்.
ஆந்தையார் ஊர் அதிகத் தொலைவில் என்றார்.
அதனாலே வருவது இயலாதென்றார்.
இதுகேட்டு
இயலரசன் இடித்துச் சொல்வான்
“என்பெயரைத் தனக்கிட்டு அழைத்துக் கொள்ளும்
இனிய நண்பரவர்—நற்பண்பின் ஊற்று.
நான் வடக்கிருக்கும் செய்திகேட்டு
நாளையோ இன்றே வந்தே சேர்வார்—ஒரு
வேளையும் என்னை மறவார் என்பேன்.”
கவிமன்னர் ஆந்தைமீது
காணாமல் காதல் கொண்ட
புவிமன்னர் பேச்சுக்கேட்டு
ஊமையானார் உழுவலன்பர்.
* *
புலவர் பொத்தியாரும் வந்துவிட்டார்
புனித நண்பனுடன் வடக்கிருக்க!
வளவனவன் தடுத்துச் சொன்னான்;
நிலவுமுக நின் மனைவி நிறைமாதக்காரி—அவள்
குலவு மொழிப்பிள்ளை பெற்றபின்னர் வந்து
உடன் இருப்பீர் என்று கூறப் பொத்தியார் ஒப்பிச்
சென்றார்!
