ஆந்தையும் அரசனும்!
பகுதி 8 · 8 / 8
* *
அன்பும் அறமும் நிறைந்த மன்னன்
என்பும் தோலும் இளைத்தது மென்மேல்
கண்கள் இருண்டன
கால்கள் சுருண்டன
கைகள் ஓய்ந்தன
காதொலி மாய்ந்தது
பேச்சும் நின்றது
மூச்சும் திகைத்தது
எண்ணம் மட்டும் எங்கோ அலைந்தது.
மன்னன் மனதில் ஆந்தையின் நினைவு—
வண்ணப் புலவர் வருவார், வருவார்—
கன்னல் தமிழைத் தருவார்—தருவார்—
என்றே கருதி
அடைந்தான் இறுதி!
கலைந்தது சுருதி!
குலைந்தது இசையும்!
சுடுசொல் அறியாச் சோழ வேந்தன்
நடுகல் ஆனான் நாட்டோர் புகழ!
பலகல் தாண்டிப் பாவின் வேந்தர்
பாண்டியநாட்டு ஆந்தையும் வந்தார்.
மாண்ட மன்னர் கல்லைக் கண்டார்
மீண்டும் வாழ விரும்பேன் என்றார்
ஈண்டு எனக்கோர் இடம் உளதென்று
ஆண்டு களைத்த அரசின் கல்முன்
நீண்டு படுத்து வடக்கிருந்தாரே
ஆண்டுகள் கோடி வாழ்கின்றாரே!
