உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கவிதைகள்

ஆந்தையும் அரசனும்!

பகுதி 3 · 3 / 8

புல்லலூர் எயிற்றியனார் நண்பரானார்.

புலவர்களைக் காணுவதும்—பேணுவதும்—

புலமைதனைப் பாடுவதும் பொழுதெல்லாம்

இனிக்குதென்று புகன்றுவந்தான்—நட்பைப்

புகழ்ந்து உவந்தான்!

* *

நட்பு என்பது நஞ்சு கலப்பது

நல்லவர் இதயம் நோக மிதிப்பது

கட்புலன் தாண்டிக் கயமை உரைப்பது—இந்த

அற்புத மனைத்தும் இன்று நடப்பது!

பொற்புடைத் தமிழர் வாழ்வினில் அன்று

கற்புடை நட்பு மிளிர்ந்தது நன்று.

கண்டு கேட்டுண்டுயிர்த்து—பூச்

செண்டு தமிழை அளித்த கவிகள்—மன்னன்

நண்பர் களானது விந்தையுமல்ல ;

காணாமல் ஓர் புலவர்—சோழக்

காவலனின் நண்பரானார்—அன்புத்

தேனாறு பெருக்கெடுத்து—அந்த

இருவரிடை பாய்ந்த தம்மா!

மீனார்ந்த பாண்டி நாட்டுக் கொடி நிழலில்

மிளிருகின்ற ஊர் ஒன்று;

பிசிர் என்று அழைக்கின்ற மூதூர்

பெரும்புலவர் ஆந்தையார் பிறந்திட்ட பேரூர்.

பெற்றோர் இட்ட பெயர் ஆந்தையார் என்பர்

பேரும் ஊரும் சேர்ந்து பிசிராந்தையுமானார்

கற்றோர் பலரும் களித்து மகிழ்ந்திட

நற்றாய்த் தமிழை நாட்டில் பரப்பினார்.