உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

சிலப்பதிகாரம் — நாடகக் காப்பியம்

காட்சி 31 · 31 / 38

[நடக்கிறாள்]

[கோவலன் கண்கள் குளமாகின்றன]

அத்தான்! என்னென்னவோ சொல்கிறீர்கள், எனக்குப் பயமாயிருக்கிறது!

[அழுதவாறு தழுவிக் கொள்ளுதல்]

பயப்படாதே கண்ணகி! நமக்கு நல்ல காலம் வருமென்று நீதானே எனக்குச் சொல்லிக் கொண்டே இருக்கிறாய்?

[தழுதழுத்த குரலில்]

கட்டாயம் நல்லகாலம் வருமத்தான்...வரும்!

சரி, நேரமாகிறது!

[கண்ணகி ஒரு சிலம்பைக் கழற்றிவிட்டு, இன்னொன்றைக் கழற்றப் போகும்போது]

கண்ணகி இரண்டையும் விற்க வேண்டாம்! ஒன்றை மாத்திரம் கொடு!

ஒன்று மட்டுமா?

ஆமாம்; ஒரு சிலம்பு உன் காலிலேயே இருக்கட்டும்! அந்த ஒற்றைச் சிலம்பு ஒலி யெழுப்பும் போதெல்லாம்...உத்தமியாம் உனக்குக் கேடு நினைத்த இந்த உன்மத்தனின் உள்ளத்திலே ஆயிரமாயிரம் சம்மட்டியடிகள் விழுந்து கொண்டே இருக்கட்டும்!

அற்பனே! அறிவற்ற பதரே! ஆவிநிகர் மீனியாளே ஆளவிட்ட கரும்பாக்கி, அணு அணுவாய்ச் சித்திரவதை செய்திட்ட கொடும் பாவி! கொலைகாரா! என்றெல்லாம் அந்த ஒற்றைச் சிலம்பு என்னைக் கவி பாடட்டும்; அதைப் புவி கேட்கட்டும். இந்தப் புன்மதியாளனுக்கு அப்போதாவது புத்தி வரட்டும்; கண்ணகி, புத்தி வரட்டும்!

அத்தான்! உங்கள் நீல விழி சிந்துகின்ற நீர்த்துளியால் கோலமுகம் நனவதற்கோ பாவி நான் வழி சொன்னேன்? கவலைப் படாதீர்கள் அத்தான்! நம்பிக்கை நிறைந்த எதிர்காலம் நம்மை நோக்கி ஒளி விடுகிறது.

நான் போய் வரவா கண்ணே!

[தன் கண்களையும் அவன் கண்களையும் துடைத்துவிட்டு] எங்கே! கவலைப்படாமல்,

மகிழ்ச்சியோடு, எங்கே! எங்கே! என்னை மயக்க வைக்கும் அந்த மந்தகாசப் புன்னகை! ஒரு முறை யத்தான்!

[புன்முறுவலுடன்] கண்ணகி!

அத்தான்! சீக்கிரம் திரும்பி வாருங்கள்!

மாதவி வீட்டுக்குப் போனது போல் வராமலே போய்விடுவேன் என்று பயப்படுகிறாயா?

அதுதான் திரும்பிவந்து விட்டார்களே...

சரி கண்ணகி! நேரமாகிறது.

அத்தான் அதிகப் பழக்கமில்லாத ஊர். பத்திரமாகப் போய் வாருங்கள்!

குழந்தைக்குச் சொல்வதுபோல் சொல்கிறாயே?

அதையும் சொல்லத்தானே போகிறேன்!

குழந்தைக்கா! ஊம்; வரட்டுமா கண்ணகி!

[கேலியாக]

அத்தான்!

கண்ணகி!

[குரவைக் கூத்து ஆரம்பமாகி விட்ட ஒலி கேட்கிறது]

குரவைக் கூத்து ஆரம்பமாகிவிட்டது உனக்கு அழைப்பு வந்துவிடும். வருகிறேன்.

அஞ்சுகம் வெளியீடு, சென்னை-6 — பதிப்பாண்டு அச்சிடப்படவில்லை