உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

சிலப்பதிகாரம் — நாடகக் காப்பியம்

காட்சி 30 · 30 / 38

[உணவு படைக்கிறாள். கோவலன் சாப்பிடுகிறான்.]

சமையல் எப்படி யிருக்கிறது?

வழக்கத்தைவிடக் கொஞ்சம் அதிகமாகவே சுவைக்கிறது! கண்ணகி! இதுதான் உன்னுடைய கடைசிச் சமையல்!

ஏன்?

மீண்டும் வாணிபம் தொடங்கி விட்டால், உன்னைப் பிறகு சமைக்க விடமாட்டேன். சமையலுக்கு ஒரு தனி ஆள்! நாமிருவரும் தனி உலகம்! சரிதானே?

[கண்ணகி வெட்கித் தலை குனிந்தவாறு...]

சரி சரி! அதற்குள் கோட்டை கட்டாதீர்கள்! சாப்பிடுங்கள்!

[கண்ணகி வெற்றிலையில் சுண்ணாம்பு தடவுதல்; மடித்தல்; கணவனுக்குத் தாம்பூலம் தருதல்]

சிலம்பு விற்ற பொருளில் வாணிபத்துக்குத் தேவையானது போக மீதியில் உங்களுக்கு வேண்டிய பட்டாடைகளும், அணிமணிகளும் வாங்கி வாருங்கள்! நீண்ட நாட்களாகிறது; உங்களுக்கு நான் அலங்காரம் செய்து அழகு பார்த்து!

[கேலியாக]

ம்!

[நாணத்துடன்]

ம்!

[அப்போது ஐயை உள்ளே ஓடிவந்து]

அண்ணா! அண்ணா!

என்னம்மா?

அண்ணியையும் அழைத்துக் கொண்டு போய்விடாதே, தலிநகருக்கு!

ஏன்?

நாங்களெல்லாம் குரவைக் கூத்து நடத்தப் போகிறோம்...அதை அண்ணி பார்க்க வேண்டுமென்று எனக்கும் என் தோழிகளுக்கும் ஆசை!

கண்ணகி என்னோடு வருவதா யில்லயம்மா! நான் மாத்திரமே தலைநகருக்குப் போகிறேன். உங்கள் குரவைக் கூத்தைக் குதூகலமாக நடத்துங்கள்!

சரியண்ணே! அண்ணி! தயாராக இருங்கள்; கொஞ்ச நேரத்தில் வருகிறோம், அழைக்க!

[கண்ணகி தலையசைக்க, ஐயை போய் விடுகிறாள்.]

கண்ணகி! நான் தலைநகருக்குப் புறப்படுகிறேன்!

இதோ!

[என்று சிலம்புகளைக் கழற்றப் பார்க்கிறாள். தடுத்து]

வேண்டாம் கண்ணகி! அய்யோ...நீ சிலம்பில் கைவைத்தது என் தலையைத் துண்டிப்பது போல் இருக்கிறது!

நான் சொல்வதைக் கேட்க மாட்டீர்களா அத்தான்? நாம் ஆரம்பிக்கும் வாணிபம் வளரத் தொடங்கிவிட்டால் இதுபோல் எத்தனையோ சிலம்பு வாங்கிக்கொள்ளலாம்!

[என்று கழற்றப் போகிறாள்]

இரு இரு கண்ணகி! சிலம்புகள் உன் காலில் இருக்கும் போதே ஒரு முறை நடந்து காட்டு! அந்தக் காட்சியைக் கடைசித் தடவையாக நான் பார்த்துக் களிக்கிறேன்.

அத்தான்?

ஆமாம் கண்ணகி! சிலம்பை விற்று விட்டால் பிறகு அந்தக் காட்சியைக் காண முடியுமா? எங்கே, நட! நட கண்ணே!

[கண்ணகி கண்களில் நீர்!]

அஞ்சுகம் வெளியீடு, சென்னை-6 — பதிப்பாண்டு அச்சிடப்படவில்லை