சிலப்பதிகாரம் — நாடகக் காப்பியம்
காட்சி 29 · 29 / 38
அரசியாரின் சிலம்பைப் பத்திரமாகத்தான்...பாதுகாப்பான இருப்புப் பெட்டியில் வைத்துப் பூட்டித், திறவுகோலையும் நானே வைத்திருந்தேன். இன்று காலை பெட்டியைத் திறந்தால், சிலம்பைக் காணவில்லை அரசே; காணவில்லை!
காணவில்லையா? ம்...காணவில்லை என்ற செய்தியைச் சொல்லவா இங்கு வந்தீர்? பெட்டியில் பூட்டிய சிலம்பு எங்கே போகும்? பொற்கொல்லரே! உமக்கு யார் மீது ஐயப்பாடு?
நான் யாரைச் சொல்லுவேன்? என்னிடம் வேலை பார்க்கும் நூறு கொல்லர்களில் நான் யாரைக் குறிப்பிட்டுச் சொல்வது மன்னவா!
சரி, நூறு கொல்லர்களையும் நாளை நமது நீதி மன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தும்! நானே விசாரணை செய்து கள்வனைக் கண்டு பிடிக்கிறேன்.
உத்தரவு, மன்னவா! என்னை மன்னிக்கவும்; வருகிறேன்.
ம்!
[பொற்கொல்லர் போகிறார்]
[கண்ணகி அடுக்களையில் சமையல் வேலையில் ஈடுபட்டிருக்கிறாள். கோவலன் வாட்டமாக அமர்ந்திருக்கிறான். கண்ணகி கோவலனிடம் வந்து]
அத்தான்!
ம்!
ஏன் வாட்டமாயிருக்கிறீர்கள்?
மீண்டும் வாணிபத்தைத் தொடங்குவதற்கு என்ன வழி யென்று தேடிக் கொண்டிருக்கிறேன்!
மதுரையில் நம்முடைய உறவினர்கள் நிறைய இருக்கிறார்கள்; கொற்கை முத்துக்கள் விற்றுக் கோட்டைபோல் வீடு கட்டிக் கொண்டிருக்கும் அவர்கள் யாரும் நமக்கு உதவி செய்ய மாட்டார்களா?
என் தந்தையிடமோ...உன் தந்தையிடமோ கூடப் பெற வேண்டாமென்ற உதவியை, உறவினர்களிடம் போய்ப் பெறுவதா?
வேறு வழி?
பாண்டி மண்டலத்தில் வாணிபம் செய்ய வழியில்லாமல் இல்லை? தொண்டி, கொற்கைத்துறைமுகங்களிலேயிருந்து சங்குகளும், முத்துக்களும், எலி மயிரினால் செய்யப்பட்ட பட்டு நூல் ஆடைகளும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. சங்கை அறுத்து வளையல் செய்யும் தொழில்; தங்கநிற ஆடை நெய்யுந் தொழில்; உப்பு விளைவிக்கும் தொழில்! இப்படிப் பலதொழில் உண்டு பாண்டியத்தில்! எந்தத் தொழிலில் ஈடுபடவும் பொருள் வேண்டும்!
அத்தான்! நான் ஒரு வழி சொல்லுகிறேன், கோபிக்கமாட்டீர்களே?
என்ன கண்ணகி?
என் திருமணப் பரிசாக ஐம்பதாயிரம் கழஞ்சு பொன்னுக்கு வாங்கித் தந்தீர்களே; அழகான காற்சிலம்புகள்! அவைகளில் ஒன்று...
சிலம்புகளையா? கண்ணகி! சிலம்புகளை விற்பதா? அய்யோ; இந்த வார்த்தையை என் காதுகள் கேட்கும் காலமும் வந்ததே! மத்தளம், சங்கு, முரசுகள் முழுங்க, மன்னர் பவனிபோல் வெண் பொற்குடையின் வரிசைகள் விளங்க, மணவிழா கண்டு சுவை மிகு நாளில் அணிந்த சிலம்பை அழிப்போம் என்று, ஆருயிரே; நீ சொல்லியதற்கு...நானே காரணம்! நானே காரணம்!!
தங்களுக்குப் பயனில்லாமல் அழுகக்கேன் ஆபரணம்?
உன் கமல மலர்ப் பாதங்களில் கணீர் கணீர் என ஓசை யெழுப்பி, இந்தக் கயவன் இதுவரையில் கழற்றுமல்
வீட்டு வைத்திருக்கும் ஆபரணம் அது ஒன்று தான் என்று இடித்து இடித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறதே; அந்த சுந்தரச் சிலம்பையா விற்றுவரச் சொல்லுகிறாய்?
அய்யோ...எப்படிப்பட்ட கஷ்ட காலம் வந்து விட்டது!
நீங்கள் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யவில்லை. நீங்கள் கஷ்டப்படவே மாட்டீர்கள்!
எல்லாவற்றையும் சேர்த்துத்தான் உனக்குப் பெரிய தீங்கு செய்து விட்டேனே, கண்ணகி!
போனதை யெல்லாம் நினைத்து மனத்தைப் புலம்ப விடாதீர்கள்!
கண்ணகி!
வாருங்கள் சாப்பிடலாம்! வெகு நாட்களாயிற்று, என் கையால் சமைத்து உங்களுக்கு உணவு பரிமாறி! வாருங்கள்!
[அவன் கைதொட்டு அழைக்கிறாள்.]
[எழுகிறான்.]
