சிலப்பதிகாரம் — நாடகக் காப்பியம்
காட்சி 23 · 23 / 38
[அவன் வாயைப் பொத்தி]
மாதர்குல மாணிக்கமே! ... தமிழ் மறை காத்து...மீனோக்கும் இன்பப் பெருமாட்டி நீ யிருக்க...மாதவியாம் விலை மாதின் வசப்பட்டேன்...அவள் வாச மலர்க் கூந்த வீச வையகமே அடிமையென எண்ணி விட்டேன்...அந்த மோசம் நிறை மூதேவி...என் குடும்பப் பாசம் அறுத்தாள். தேசமெல்லாம்...தெருவெல்லாம் இழிந்துரைக்க...தேகமிருந்தும் உயிரில்லாப் பாண்டமாக...என்னே ஆக்கிவிட்டாள்!
அத்தான்! என் தங்கை அவள்! அவள் ஒன்றும் சொல்லாதீர்கள், அத்தான்! குழந்தை மணிமேகலை சுகந்தானே?.... அத்தான்!....
குழந்தை மணிமேகலை... குவிந்திருந்த பொன்மணிகள்; தங்கக் குன்று நீ...அணிந்திருந்த நகைகள் எல்லாம்...கொட்டிக் கொட்டி...நான்பெற்ற இன்பத்தில் விளைந்ததன்றே அந்தக் குழந்தை!...பாவச்சின்னம்!...
விலைகொடுத்துச் சுவை பார்த்த காதல் விருந்தின் அடையாளம்! கணிகை வீட்டில் உன் கணவனுக்கு ஏற்பட்ட களங்கந்தான் கண்ணகி; அந்தக் குழந்தை!
அய்யோ....அப்படியெல்லாம் சொல்லாதீர்கள்....மணிமேகலை மாதவிக்குப் பிறந்தாலும்....என் குழந்தை!...என் குழந்தையத்தான் மணிமேகலை!
என் தெய்வமே! நீ என் மதிப்புக்குரியவள்! மரியாதைக் குரியவள்! என்னை மன்னித்துவிடு...உன் இதயத்தை உணர முடியாத இந்த இழிமகனை மன்னித்துவிடு கண்ணகி...
அத்தான்!....
கடல் வாணிபத்தில் தமிழருக்கு ஈடில்ல என்ற புகழ் என்னுலே பெருகிறது...இன்றே...உடல் வாணிபத்தில் ஈடுபட்ட ஒருத்தியிடம்...அறிவிழந்தேன்; அளவிட முடியாத பொருளிழந்தேன்; புலம்புகிறேன்...ஏழையாக!...
[கண்ணகியிடம்]
என் செல்வமே!....பூம்புகார்ப் பெருவணிகன் என்ற பெயர் போயிற்று...புயல்தனிலே படகாடும்...கரைபேற வழியில்லை...அலை மோதும் கடல் மாதா வயிற்றுக்குள் போய் விடுவோம். வா...வா...
என் கண்ணு அந்த முடிவு? ஆனை உயரம் அடுக்கி வைத்த தங்கம் உண்டு என் தாய் வீட்டில்...நாம் எடுத்துக் கொண்டால் தடை சொல்ல யாருண்டு?....
ஆருயிரே!.... மாமன் கை பார்த்துப் பிழைக்கின்றவன் என ஊர் பேசும்; மானம் போகும்!....வேண்டாம், வேண்டாம்!
நெல் மணியை அளப்பது போன்று அளக்கின்றார் முத்துக்களே தங்கள் தந்தை, அவர்கூட ஆதரவு காட்டுவதற்கு மறுப்பாரோ அத்தான்?...
தனியாக வாழ்வதற்குத் தகுதியுண்டு என எண்ணிப் பொருள் கொடுத்தார் தந்தை! அதைத் தொலைத்துப் புதுத் தொல்லை கொடுப்பதற்கு மனமே இல்லை! மானம் வேறு இருந்தால் சொல்! இல்லையேல் மரணந்தான் மேல்!
நானிருக்கும் வரையினிலே சோகத்தால் வாடாதீர்!....என் காற் சிலம்பு இரண்டு உண்டு; கழற்றித் தருகிறேன். விற்றுவிட்டால், புதிதாக வாணிபத்தைத் தொடங்கலாம் அத்தான்!
சிலம்பு! சிலம்பை விற்பதா? அய்யோ...கண்ணகி...இந்த வார்த்தையை என் காதுகள் கேட்கும் காலமும் வந்ததே...உன் கால் அழகு செய்யும் அந்தச் சிலம்புகள்...இந்தக் காமுகன் இதுவரை கழற்றுமல்...கடைசியாக விட்டு வைத்திருக்கும் அந்த ஆபரணத்தை...விற்றுவரச் சொல்லுகிறாயா? கண்ணகி!
கவலைப்படாதீர்கள்....நான் சொல்வதைக் கேளுங்கள்....தங்களுக்குப் பயனில்லாமல்...அழகுக்காக எனக்கு ஆபரணமா? விற்று வாருங்கள்! மீண்டும் நமக்கு நல்ல காலம் கட்டாயம் வரும்...சொல்வதைக் கேளுங்கள்....அத்தான்!
கேட்கிறேன்!....ஆனால் பூம்புகார்லேயே சிலம்பை விற்பது அவமானமல்லவா?
பிறகு?...
நம்மை யாரும் அடையாளம் காண முடியாத பாண்டிய நாட்டுக்குச் செல்லலாம். அங்கே மதுரைத் தல நகரில் சிலம்பு நல்ல விலைக்குப் போகும்!
தங்கள் விருப்பப்படியே செய்யுங்கள்...மதுரைக்கு நானும் தங்களோடு வருகிறேன்.
வா, இனிச் சாகும் வரையில் அணுப்பொழுதும் உனைப் பிரிய மாட்டேன் கண்ணகி!
அத்தான்!
இன்றைக்கே யாருக்கும் தெரியாமல் புறப்பட வேண்டும்....பயணம் தயார் செய்வோம்!
[மாதவி, தன் அறையில் குழந்தை மணிமேகலையுடன், சோர்ந்து போய் உட்கார்ந்திருக்கிறாள்...வசந்தமாலை வருகிறாள்]
வசந்தமாலே! என்ன ஆயிற்று? பார்த்தாயா அவரை?
அப்போதே சொன்னேனே விளையாட்டு வினையாகுமென்று; கேட்டாயா? கோவலனும் கண்ணகியும் மதுரைப் பக்கம் போய்விட்டார்களாம்...தேவந்தி சொன்னாள்!
ஆ!....போய் விட்டாரா? மணிமேகலை...உன்னையும் என்னையும் பிரிந்து உன் அன்புத் தந்தை, ஊரை விட்டே போய் விட்டார்; என் செல்வமே! வாரி அணைத்து...“வெண்ணைப் புது நிலவே...என்னைச் சொல் உதிர்க்கின்ற தமிழ்க் கனியே” என்றெல்லாம் முத்தமாரிப் பொழிவாரே! அவர் உன்னையும் என்னையும் வெறுத்து...இந்தப் பாவியிருக்கும் பூம்புகாரிலேயே இருக்கக் கூடாதென்று போய்விட்டாராம்... “அப்பா!”
என்று எப்போது அழைப்பாய்...“அம்மா” என்று என்னைக்கு வாய் திறப்பாய் என்று ஆவலோடு கேட்டுக் கேட்டுத் துடித்த உன் தந்தை, உன் செந்தமிழ்மழலையைச் சுவைக்க விருப்பமில்லையென்று உன் தாயைச் சுடுநெருப்பில் எரிந்து விட்டுப் போய் விட்டாரம்மா...போய்விட்டார்!
மாதவி, என்ன இது? என்னமோ கட்டிய கணவன் கைவிட்டுப் போனது மாதிரிக் கதறுகிறாய், அழுகிறாய்?....
போதும் தாயே...போதும்!....உங்கள் வயிற்றிலே வந்து பிறந்ததற்கு நான் அனுபவிக்கும் கொடுமை போதும்...இனியும் என்னைக் கொடுமைப்படுத்த வேண்டாம்...
