உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

சிலப்பதிகாரம் — நாடகக் காப்பியம்

காட்சி 21 · 21 / 38

கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாதொழிதல் கயற்கண்ணாய்! மன்னு மாதர் பெருங்கற்பென்று அறிந்தேன், வாழி; காவேரி!

அதுதான், அழகான பாடல்...சுவையான இசை...ஆனால்...

என்ன மாதவி?

பாட்டின் பொருளில்...

பொருளில்...? சந்தேகமா...? காவேரி வாழ்த்துப் பாடினேன். காவேரிக்கு உரியவனை கரிகாற் சோழன்...கங்கையையும் வெற்றி கொண்டான்...அப்படி அவன் வடநாட்டில் படையெடுத்து கங்கையைத் தன்னோடு சேர்த்துக்கொண்டதைக் கண்டு...முதல் மனைவியான காவேரி அவனோடு கோபிக்கவில்லை...பிணங்கவில்லை...இது கற்புள்ள பெண்களின் இலக்கணம்...அப்படிப்பட்ட கற்புடைய காவேரி நதியே...நீ வாழ்க...என்பதே கருத்து!

ஓகோ...சரி...காவேரியிருக்கும் போது கங்கையைச் சேர்த்துக்கொண்டவன்...உங்கள் பாட்டின்படி அத்துடன் நிற்கவில்லை...

[இசையுடன் பாடிக்காட்டி]

“மன்னும் மாலை வெண்குடையான் வளையாச் செங்கோலது வோச்சிக் கன்னி தன்னைப் புணர்ந்தாலும், புலவாய், வாழி; காவேரி!”

ஆமாம்...பாடினேன்...காவிரியிருக்கக் கங்கையைக் கூடியவன் அதோடு நிற்காமல் பாண்டியரை வென்று...கன்னியாகுமரியையும் சேர்த்துக் கொண்டான். அதைக் கண்டு காவிரியும் வெறுப்படையாமல்...பிணங்காமல்...இருந்த கற்புக்கரசி காவேரியே...நீ...வாழ்க!

சரிதான்!...கணவன் கங்கையோடும் கூடுவான்...குமரியோடும் ஒருவன்...அதைக் காவேரி போலப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமோ? அதுதான்! இந்தப் பாடல் உங்கள் பாதுகாப்பிற்காகப் பாடினீர்களோ? கண்ணகியைவிட்டு மாதவி...பிறகு மாதவியை விட்டு...

[குறுக்கிட்டு]

மாதவி!...தவறாகப் பொருள் கொள்ளாதே!...நான் பாடியது கரிகாலன் பெருமையையும்...காவேரியின் வளத்தையும் எடுத்துக் காட்டத்தான்!...

[யாழை வாங்கி]

இதோ...நான் பாடுகிறேன்...

[பாடுகிறாள்]

மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை அதுபோர்த்துக், கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி!

கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்த வெல்லாம், நின் கணவன் திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன்! வாழி! காவேரி!...

இதோ?...காவேரி மங்கை வளங்குறையாமல் இருப்பதற்குக் காரணம் அவள் கணவன் சோழனுடைய செங்கோலின் சிறப்புதான்! கணவன் பண்போடு நடப்பதால்...காவேரி சிரித்து மகிழ்ந்து செழிப்புத் தருகிறாள். இதுதானே உன் பாட்டின் கருத்து?...அதாவது...காதலன் அன்போடு இருந்தால் காதலியும் அன்போடு இருப்பாள். எனக்கு உன்மீது அன்பு குறைந்தால்...உனக்கும் என்மீது அன்பு குறைந்து...பிறகு அந்த அன்பு வேறொருவரிடம்...

[குறுக்கிட்டு, கோபமாக]

அதுதான்!... நன்றியிருக்கிறது, நீங்கள் பாட்டுக்குப் பொருள் கூறும் அழகு!...

[யாழைக் கீழே வைத்துவிட்டு எழுந்து போகிறாள்]

மாதவி!

[அழைத்தவாறு, பின்னால் போகிறான்]

[மாதவி வேகமாகப் போகிறாள்....“மாதவி, நில்” எனப்பின்னால் விரைகிறான் கோவலன்...

அங்கே வலைகளுக்கிடையே ஒரு செம்படவப் பெண் நின்றுகொண்டிருக்கிறாள். அவளைக் கோவலன் பார்க்கிறான், செம்படவப்பெண் கோலத்தில், மாதவியே மீன் உருவமைப்பது போல் தெரிகிறது அவனுக்கு! அப்படி ஒரு கற்பனை அவன் உள்ளத்தில் எழுகிறது.]

ஆகா! தேன் நிறைந்த நீலோற்பலப் பூவின் தண்டுகொக்க கையிலேந்திப் புலால் உண்ண வரும் பறவைகள் ஓட்டுகின்ற இந்தப் பாவையின் கண்களோ மிகக் கொடியன!

ஆகா! பொழில் தரும் நறுமலர்! பழுத்து திருமொழி! முழுமதி புரைமுகம்!

[மாதவி நின்று கவனிக்கிறாள். கோவலன் செம்படவப் பெண்ணை, மாதவி பெணக் கற்பனை செய்தவாறு]

அடடா...நகை நட்டு எதுமின்றி எழில் சொட்டும் பருவத்தாள்! பூகை பொத்த கொடிபோல நெளிந்தாடும் உருவத்தாள்! இடையோ ஒருபிடி.க்கும் காணை இளம்பிடி! இதற்கருகிலே தேன் ஒருபடி! இல்லை, இவளுக்கு குறைவையென்னும் புகழ்பெற்ற முல்லை!...பேச்சிலோ கிள்ளை! இவள் விடுமோ காதல் தொல்லை!

[பாடுகிறான்]

திரைவிரி தரு துறையே திருமணல் விரி இடமே... விரைவிரி நறுமலரே! மிடைதரு பொழிலிடமே— மருவிரி புரிகுழலே— மதிபுரை திருமுகமே! இரு கயல் இணைவிழியே என இடர் செய்தவையே!

[பாடிக்கொண்டு அருகே போகிறான். அருகே சென்றதும் அவள் மாதவி யல்லள்...செம்படவப் பெண் என்று தெரிகிறது...அவளும் மிரண்டு வேறுபக்கம் போகிறாள்...

அதுகண்ட மாதவி, அதிகக் கோபமுற்று வசந்தமாலையிடம் சென்று...]

அஞ்சுகம் வெளியீடு, சென்னை-6 — பதிப்பாண்டு அச்சிடப்படவில்லை