சிலப்பதிகாரம் — நாடகக் காப்பியம்
காட்சி 18 · 18 / 38
உண்மையாகவா?...
நிச்சயமாக...இன்று போகிறேன். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு எனக்கும் போக வேண்டும் போலிருக்கிறது....
இந்த அந்தணரைப் பிரிவதற்கே அந்த அம்மை அப்படி அழுதாளே; அழகின் வடிவமான தங்களைப் பிரிந்து அக்காள் எவ்வளவு வேதனைப்படுவாள்...அய்யோ அக்காள் கண்ணீர் விட்டால்...அது என் வயிற்றில் இருக்கும் கருவைக் கூடப் பாதிக்கும்!
மாதவி! இப்படியெல்லாம் என்னை பயமுறுத்திப் பணியவைக்க வேண்டாம். நான் கட்டாயம் போய் வருகிறேன். சரிதானே?
அத்தான்!...
மாதவி...வா!...
அத்தான்!...நீங்கள் வரவே மாட்டீர்களா?...என்னை அடியோடு மறந்து விட்டீர்களா; என் தேவே! எரிமலையின் பெருமூச்சை என்மீது திருப்பிவிட்டீர்களா?...
ஈட்டியிலே கூர்பார்க்க என் இதயந்தான் கிடைத்ததோ! அத்தான்! உங்கள் முத்தார மார்பினிலே முகம் புதைத்துக் கிடப்பதற்குத்; தடந்தோளில் தலை சாய்த்துத் தமிழ்ச் சுவையைப் பருகுதற்குத் தடையேன் அத்தான்!....உற்றாரும் பெற்றோரும் உறவு முறுகின்றார்; உண்மையில், உறங்காமல் உங்கள் துணைவி குமுறுகின்றாள். ஒருமுறை வாருங்கள் அத்தான்...! ஒளிமுகம் காட்டுங்கள் அத்தான்...! அத்தான்! வரமாட்டீர்களா? இந்த ஏழையிடம் இரக்கம் காட்டமாட்டீர்களா?
அத்தான்!....
[மாதவி வீட்டில் குழந்தைக்கு நன்னிராட்டு விழா...மிக்க குதூகலமாக நடைபெறுகிறது...
குழந்தையைத் தொட்டிலில் இட்டு, மாதவியும் தோழியரும் பாடுதல்.
பாட்டினிடையே...கோவலன் வரவே... குழந்தையைத் தூக்கி, அவனிடம் தருகிறாள். அவன் குழந்தையை முத்தமிடுகிறான்.]
குழந்தைக்குப் பெயர் சூட்டுங்கள்!
பெயரா?...
[குழந்தையைப் பார்த்து]
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்த நற்கூட்டே! பொதிகைமலை விட்டெழுந்து, சந்தனத்தின் பூந்தாது வாரி வருகின்ற இன்பத் தென்றலே! குழலியும் யாழையும் வெல்லுகின்ற குறளியும் வெல்லும் உன் குறுஞ்சிரிப்பு! கோவலன் குலக் கொடியே; மங்கையர் இனத்துக்கு நீயோர் மணி! உன் காலசைவு கையசைவு எல்லாமே கவி! எல்லாம் மேகலை!...மேகலை!...மேலானகலை!- அதனால் நீ மணிமேகலை!...வாழிய மணிமேகலை!!....
[மணிமேகலை என்ற பெயரை வைத்து அனைவரும் வாழ்த்துப் பாடுதல்.
கோவலன், மாதவி, வசந்தமாலை, எல்லோரும் தான தருமங்கள் உற்சாகமாகச் செய்தல்! ஒரே கொண்டாட்டம்! கூத்து! பாட்டு..]
[வீதியில் ஒரு மதங்கொண்ட யானை ஒரு மறையவனைப் பிடித்தல்...
பலரும் ஓட்டம்!
ஒரே அல்லோலல்! கோவலன் ஓடிவந்து மிக்க கஷ்டப்பட்டு யானையை அடக்கி வெற்றி பெறுகிறான். அனைவரும் கோவலனுக்கு மாலையிட்டுக் கொண்டாடிப் புகழ்கிறார்கள்.....
மாதவி, ஓடிவந்து அணைத்துக்கொள்கிறாள்.]
[கண்ணகியிடம் தேவந்தி விழா விவரம் கூறுகிறாள்]
அந்த யானையைக் காள்கண்ட தளபதிகள் கூட அடக்கமுடியாதாம்; உன் கணவர் அடக்கி விட்டார்! ஊரெல்லாம் புகழ்கிறது அவரை !
தமிழரல்லவா ?... தேவந்தி! அவர்மீது காயமொன்றும் படவில்லையே?...
[அழுகையும், புன்னகையும் போட்டியிட]
அய்யோ, என்ன கவலை? காயம் பட்டால் ஆற்றுவதற்குத்தான் மாதவி இருக்கிறாளே ?...
மாதவி!... மாதவி!!... என் தங்கை பாக்கியசாலி!!....
[கண்ணீர் பெருக்கெடுக்கக் கோவலன் படத்தின்மீது சாய்கிறாள்.]
[பல உட்காட்சிகள் அடங்கியது]
(புகார் நகரில் இந்திரவிழா ஆரம்பமாகிறது. புலிக்கொடி வான்நோக்கி ஏற்றப்படுகிறது. யானை மீது முரசம்... நகரெங்கும் விழா எடுக்கின்றனர்... பழந்தமிழ் மன்னன் இந்திரனின் பெரிய சிலையொன்று புலியின்மீது சவாரி செய்வது போல வானத் தொடும் அளவு கோபுரம்போல் உயர்ந்து நிற்கிறது.
இமயமலையின் உச்சியிலே கரிகாலன் நிற்பதுபோல ஒரு பெரிய சிலை வானளாவி நிற்கிறது.
பட்டி மண்டபம், முத்துப் பந்தர், தோரண வாயில் எங்கெங்கும் கொண்டாட்டம்.
கடற்கரையில் கப்பல்களின் அணிவகுப்புக் காட்சி....
மகளிர், ஆடவர், ஆட்டபாட்டம். பல இடங்களில், பல வகைகளில், கொண்டாட்டங்கள்!)
மாதவிக்குக் கோவலன் அலங்கரித்து விடுகிறான்... ஆங்குள்ள அணிகளில் எது சிறந்தது எனத் தேர்ந்தெடுத்து அவளுக்கு அணிவிப்பதே பெரிய வேலையாகிவிடுகிறது அவனுக்கு!
கோவலனுக்கும் மாதவி அலங்கரித்து விடுகிறாள்... இருவரும் அழகே உருவினராய்ப் புறப்பட்டு.....
கூடத்தில் தொட்டிலில் கிடக்கும் மணிமேகலையைத் தூக்கி முத்தமிடுகிறார்கள்...
மணிமேகலை சிரித்து வளர்ந்திருக்கிறாள்...
