உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
ஒரே முத்தம்/காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 21
நாடகங்கள்

ஒரே முத்தம்

காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 21 · 21 / 33

காதலர்கள் என்றால் சரி. தனியே ஒரு ஜீவன், காதலுக்காக வாழ்வைக் கருக்கிக் கொள்வது பைத்தியக்காரத்தனம்.

அந்த ஜீவனைத் தனியே தவிக்கவிடுவது?

தவிப்பு அவர்களாகத் தேடிக்கொள்வது? அதற்கு யார் பொறுப்பாளி?

மனதிற்குக் கடிவாளம் போடுவது சாமான்யமில்லை.

மற்றவர் மனதை மாற்ற நினைப்பதும் அப்படித்தான்.

காதல், காந்தம் என்கிறார்கள். உள்ளங்களை ஒன்றாக இணைக்கும் கயிறு என்கிறார்கள். எல்லாம் பொய்யா?

எல்லாம் உண்மை. ஆனால் காதலன் காதலியைக் கைவிட்டு விட்டால், அவளுக்கு இதெல்லாம் பொய்யாகிவிடும்.

அப்படியானால், நீங்கள் காதலியைக் கைவிட மாட்டீர்களே? (சந்தோஷமாய்)

அதெப்படி முடியும்? கடல் பாலைவனமானாலும், கதிரவன் பனிக்கட்டியானாலும், என் காதலியைக் கைவிட மாட்டேன்.

(ஆவலாக) அத்தான்! (தழுவச் செல்ல)

தூ! விடு என்னை. நீ பெண்ணா? அல்லது பிரம்ம ராட்சசி என்பார்களே, அதுவா? காமவெறி தலைக்கேறி ஒரு ஆடவனை வலுவில் அணைக்கும் நீ ஆண்கள் இருக்கும் உலகத்திலே இருக்க அருகதையற்றவள்!

மன்னித்துவிடுங்கள். கேவலம், ஒரு விபசாரியைப் பேசுவதுபோலப் பேசாதீர்கள். என் காதல்! பிரம்மராட்சசப் பேயாட்டமல்ல, இதயத் துடிப்பு! அதை எடுத்துச் சொன்னது குற்றமா? அணை போட்டுத் தடுக்க முடியாத ஆசை வெள்ளம். அதில் தத்தளித்த இந்த அபலையின் மனஅலைகள், காதல்! காதல்! என்று ஒலிக்கின்றன. காதலைக் காட்டியதற்கு இவ்வளவு கர்ணகடூரமான சொற்களா? இன்பபுரியின் இளவரசரா இப்படிப்

பேசுவது? என் நெஞ்சாரக் காதலித்தவரா என்னை நெருப்பில் தள்ளுவது? வேண்டாம். இந்த அனாதையைக் காப்பாற்றுங்கள்.

பேசாதே!

[திரையில் இருள். அடுத்த காட்சித் தோற்றம்]

தீண்டத் தகாதவர்கள் உயர் ஜாதிக்காரனுடன் உட்கார்ந்தால், சாம்ராஜ்ய சட்டப்படி என்ன தண்டனை?

சிறையில் தள்ளுவார்கள்.

உறவாடினால்?

சிரச்சேதம்.

விபசாரத் தொழிலில் ஈடுபட்டால்?

சித்ரவதை!

இத்தனை குற்றங்களும் நீங்கள் செய்திருக்கிறீர்கள்.

(மலையன் பொன்னி திகைப்பு)

மகளின் அழகை முதலாக வைத்து, மதிப்புள்ள குடும்பங்களின் வாலிபர்களை மயக்கி, மானமற்ற விபசாரத் தொழில் செய்திருக்கிறீர்.

விபசாரமா?

வேறென்ன, வியாபாரமா?

கடவுளே! இதென்ன காலம்? என் மகள் விபசாரியா?

இல்லை, பதிவிரதை! சாஸ்திரப்படி இந்தக் குற்றத்திற்கு நரகலோக தண்டனை. சாம்ராஜ்ய சட்டப்படி மரண தண்டனை.

எங்களைக் கொல்லும் ஆசையிருந்தால், அக்கினி குண்டத்தில் போட்டாவது பொசுக்கிவிடுங்கள், இந்த அபாண்ட வார்த்தைகளால் கொல்லாதீர்கள்.

வேசி! வீரம் பேசுகிறாய். பொன்னி! நீ பேசுவது அரசப் பிரதிநிதியிடம். அதை மறந்துவிடாதே.

அரசராகவே இருக்கட்டும். அக்கிரம வார்த்தைகளே ஒரு ஆண்டியும் கேட்டுக்கொண்டிருக்க மாட்டான்.

உம்..... கேட்க வேண்டாம்! இந்த ஜந்துக்களிடம் பேசுவது என் கௌரவத்திற்கு குறைவு. இவனைக் கொண்டு போங்கள்!

(சிப்பாய்கள் இழுத்துச் செல்ல)

அப்பா! அப்பா!...

அப்பா!... மாமா!... என்று அழை, (பொன்னி பொங்குதல்) பரந்த சாம்ராஜ்யத்தில் உங்கள் சாண் வயிறு நிரம்ப வேறு வழி இல்லையா? வாலிபத்தை வாடகைக்கு விடுவதைக் காட்டிலும் வீட்டுக்கு வீடு பிச்சை எடுத்து வாழலாமே. (பொன்னி ஆத்திரம் உச்சம்) அழகு, இளமை இவைகளை ஆண்டவன் வியாபாரம் செய்யவா படைத்தான்? பொன்னி! உனக்கு மானம் என்று ஒன்று இருக்கிறதா?

இல்லை! இருந்தால்..... இந்த வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருக்க மாட்டாள்.

(விபீஷணன் சிரிப்பு)

(சிரித்து) என்னைச் சித்ரவதை செய்யவேண்டாம்.

சித்ரவதை! நீயல்லவா என் இருதயத்தைச் செதில் செதில்களாகப் பிளந்து சித்ரவதை செய்திருப்பவள்! உன் பரிதாபத்தைக் காணும்போது எனக்கே பரிவு உண்டாகிறது. நீ செய்த குற்றம், பயங்கரமானது. நீ அனுபவிக்க வேண்டிய தண்டனை அதைவிட பயங்கரமானது!

இந்த வார்த்தைகளைவிடவா?

உன் வனப்பை வெட்டித்தள்ள நான் விரும்பவில்லை. பாவம் வறுமையின் கஷ்டம், உன் வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டாய். நீ என்ன செய்வாய்? தந்தையே தரகனாக இருக்கும்போது.

போதும், என் தந்தை தங்கக் குன்று. அவரைத் தகாத வார்த்தைகளால் தாழ்த்த வேண்டாம்.

இல்லை. உங்கள் இருவரையுமே உயர்த்துவதாக உத்தேசம்.

உயர்த்துங்கள்! இந்த துன்மார்க்க மொழிகளை விட நீங்கள் உயர்த்தும் தூக்குமரம் எவ்வளவோ மேல்!

தும்பை மலர் போன்ற உன் மேனியைத் தூக்கு மரத்திலா தொங்கவிடுவேன்? என் உப்பரிகையிலே உல்லாசமாயிருக்கலாம்.