உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
ஒரே முத்தம்/காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 20
நாடகங்கள்

ஒரே முத்தம்

காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 20 · 20 / 33

அன்று என்னைக் காப்பாற்றினாரே, அவர்.

அளவுக்கு மீறிவிட்டாய் பொன்னி. ஆபத்தை வரவழைத்துக்கொள்ளாதே!

என்னப்பா சொல்கிறீர்கள்?

சொல்வது! கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போலச் சொல்லியும், நீ கெட்டுப்போகவே துணிந்துவிட்டாய்.

என் வாழ்வு கெடும்படி அவர் விடமாட்டாரப்பா!

உம். உன் தலையெழுத்தை யார் மாற்றமுடியும்? எங்கேயோ வழியிலே வந்தவன் அவராம், இவராம், விடமாட்டாராம்!

வழியில் வந்தவரல்ல. அவர் யார் தெரியுமா?

யாராயிருந்தால் என்ன? உன் சாதியும், அவன் சாதியும் ஒத்துக்குமா?

எங்கள் உள்ளங்கள் ஒத்துவிட்டன.

அப்படித்தான் முதல்லே அளப்பான்! அப்புறம் ஆள் போன இடம் தெரியாது போய்விடுவான்.

அவர் வாக்குத் தவறமாட்டார்.

அரிச்சந்திரனுக்கும்!

அரசகுமாரர் அப்பா!

அரச குமாரனா? ஆ! பொன்னி! கெட்டாய்! அசத்தியம், அரச குடும்பத்தோடே பிறந்தது.

அப்படிச் சொல்லாதீர்கள். அரசாட்சியின் மேல் சத்தியம் செய்திருக்கிறார்.

அரசாட்சியாவது, சத்தியமாவது. அத்தனையும் நடிப்பம்மா, நடிப்பு! அரசாட்சியின் மீது ஆணையிட்ட இவர் யார்? அரசாங்கம் சாஸ்திர சம்பிரதாயங்களுக்குக் கட்டுப்பட்டது.

சாஸ்திரத்திலே, சாதி கெட்டவளைக் கல்யாணம் செய்யக்கூடாதென்றால்? உம்...... என்ன நடக்கப் போகிறதோ!

(விபீஷணன் சிப்பாய் இருவர் வருதல்)

மலையன் நீர்தானே?

ஆமாம்.

இந்தக் கிராம அதிகாரிதானே?

ஆமாம். ஏன்?

நீரும் உமது மகள் பொன்னியும், உடனே விபீஷணர் மாளிகைக்கு வரவேண்டும்.

ஏன்?

விபீஷணர் உத்தரவு.

[சிப்பாய்கள் நகர]

ஒன்றும் புரியலையே...உம். புறப்படு பொன்னி!

(திரையில் ஒரு இருள் மீண்டும் ஒளி, அதே காட்சியில் குமரியும் புத்தனும் வருகிறார்கள். புத்தன் சுற்று முற்றும் பார்க்கிறான். அதைக் கண்டு சந்தேகமுற்று)

யாரைத் தேடுகிறீர்கள்?

யாரையுமில்லை. இளைப்பாறலாம்.

(குமரியும் புத்தனும், வேறு உடைகளில் இருத்தல் குமரி சாதாரணப் பெண்ணாகவும். புத்தன் சாதாரண மனிதனாகவும் காட்சியளித்தல்)

கரடு முரடான பாதை! இளவரசே! கவிஞர்கள் காட்டுப் பாதைக்கு ஏதோ உவமானம் சொல்வார்களே!

ஆமாம். வாழ்க்கைப் பாதை!

அது வைத்துக் கவிஞர் சொல்வது நான் கேட்டது வெளிநாட்டுக் கவிஞரின் உவமானம்.

காட்டுப் பாதைக்கு உவமானம்! உம்... காதல் பாதையைச் சொல்வார்கள்.

அதுவும் இவ்வளவு கஷ்டமாக்கும்.

இதைவிடக் கஷ்டம்.

உறுதி என்னும் குதிரையில் சென்றால்?

உடைப்பெடுத்த காட்டாறுகள், கரை புரண்டோடும்.

கடமை என்னும் கட்டுமரத்தில் ஏறிக்கொண்டால்?

பேதமென்னும் பெருங்காற்று வீசும்.

பிராணத்தியாகம் செய்யவும் தயாராகிவிட்டால்?

காதலில் தோல்வியும், வாழ்வில் நாசமும் வந்து சேரும்.

அந்தக் காதலர்களின் புகழ், அணையாத ஜோதியல்லவா?