ஒரே முத்தம்
காட்சிகள் (30 + நகைச் சுவைப் பகுதி 3) 11 · 11 / 33
எஜமானி! நம்மிடமிருந்த சதிக் கடிதங்கள் புத்தனிடம் சிக்கிவிட்டன.
புத்தனா? என்ன உளறுகிறாய்?
ஆர்! இளவரசர் மாறுவேடத்தில் துப்பறிகிறார். தெரு நடனக்காரி வேடத்தில் ஒரு பெண் கடிதங்களை அபகரித்திருக்கிறாள். (விபீஷணன் மனதில் புயல்.)
சித்ரா! சரியான துரோகம் செய்துவிட்டாய். உம். சிங்கத்தின் குகைக்குள்ளேயே சதிநடந்துவிட்டது. சதியை நடத்தியவள் என் மனைவி எதிரியின் கையாள். பத்தினிபோல் வேஷம் போட்ட பாசாங்குக்காரி.
வீண் பழி.
விஷத்திடாகமே! பேசாதே! விபசாரிகூடத் தன் கணவனை இப்படிக் காட்டிக் கொடுக்கமாட்டாள். என் வாழ்வுக்குத்துணை என்று வந்த வஞ்சகி! என் வாழ்வையே இருளாக்கி விட்டாய் துரோகி!
துரோகி! நான் துரோகியா?
யாரைக் கேட்கிறாய்? உன் கழுத்தில் பிரகாசிக்கும் அந்தத் தாலியைக் கேள்! முகத்தில் பூசியிருக்கிறாயே! அந்த மஞ்சளைக் கேள்! நெற்றியில் பொறித்திருக்கிறாயே அந்தப் பொட்டைக் கேள்! யாரைக் கேட்டாலும் ஒரே பதில், கணவனைக் காட்டிக் கொடுத்தவள். துரோகி!
சுவாமி! நான் காட்டிக்கொடுக்கவில்லை.
கடிதங்களை மட்டும் எடுத்துக் கொடுத்தாய் சித்ரா! நீ இந்த வேலை செய்வதைவிட விஷத்தை என் உணவில் கலந்திருக்கலாம். நான் தூங்கும்போது என் தலையைத் துண்டித்திருக்கலாம். அல்லது அன்பாக உன்னோடு கொஞ்சும் போது என் நெஞ்சை நெறித்திருக்கலாம்.
சுவாமி! எனக்கு ஒன்றுமே தெரியாது!
தெரியாது. தெருப்பாடகி போல இரவெல்லாம் என்னோடு நடித்திருக்கிறாயே, இதுகூடத் தெரியாதா?
நடித்தது உண்மை, ஆனால்......
கடிதங்களைக் கைப்பற்றவில்லை கைகாரி!
அவள் களவாடியிருக்கலாம். நான் கவனிக்கவில்லை.
இரவு, என் ஆசையில் குறுக்கிட்டு அதை அரும்பிலேயே அழித்தாய் தங்க வீணையை மீட்டும்போது அதன் தந்திகளை அறுத்து விட்டாய். அவளைத் தப்பி ஓடச் செய்தாய்.
உங்கள் காமவெறியில், களங்கமற்ற ஒரு மலர், கருகிவிடாமல் காப்பாற்ற நினைத்தேன்.
ஆம். மலரைக் காப்பாற்றினாய். மணவாளனைக் காட்டிக் கொடுத்தாய். வேறு பெண்ணை விரும்பினேன் என்பதற்காகத்தானே இந்த விபரீதங்கள்?
சுவாமி!..... (அழுதல்)
பழங்காலப் பத்தினிகளின் பண்புகளைப் படித்துப் பார். ரோகம் பிடித்த கணவனின் மோகம் தணிப்பதற்காக அவனைத் தாசி வீட்டுக்குத் தூக்கிச் சென்ற நளாயினி எங்கே? நாக சர்ப்பத்திலும் கொடிய நீ எங்கே?
மன்னித்து விடுங்கள்.
மன்னிப்பதென்ன, மகுடத்தைக் கைப்பற்ற சதி செய்ததாக நாளை என் மேல் வழக்கு. மரண தண்டனை அதற்குத்தீர்ப்பு.
(அழுகை)
ஏன் அழுகிறாய்? என்னை உயிரோடு காண வேண்டுமானால் கடிதங்களை மீண்டும் கைப்பற்றவேண்டும்.
அப்படியானால்......
இனி ஆலோசிக்கவே நேரமில்லை. இளவரசன் கையில் சிக்கியிருக்கிற ஒவ்வொரு எழுத்தும் என்னைக் குற்றவாளியாக்கும் சாட்சிவாய்ந்தவை. உம்......உன் சாகசம் என் ஊஞ்சலாக்கும் பலிபீடம் என்பதை நான் உணரவே முடியவில்லை.
நெஞ்சில் வேலால் குத்தவேண்டாம். உங்கள் கையாலேயே என்னைக் கொன்றுவிடுங்கள்.
நீ ஏன் சாகிறாய்? நான் தூக்கு மேடையில் நிற்பதைப் பார்த்துப் பரவசமடைய அவசரப்பட்ட நீ ஏன் சாகிறாய்? சதி செய்த குற்றத்திற்காக, என் சதைத் துணுக்குகளை நாய் நரிகளுக்கு விருந்தாகப் போட்டுப் போவதைப் பார்த்துச் சந்தோஷமடைய எண்ணிய நீ ஏன் சாகிறாய்? புருஷன் தொலைந்தால் புத்தன் மடியில் புது ஆனந்தம் காணலாமெனக் கனவு கண்டுகொண்டிருக்கும் நீ ஏன் சாகிறாய்?
(சித்ரா காதை பொத்திக்கொண்டு அழுகிறாள்.)
பாசாங்கு! வெறும் பாசாங்கு! உண்மையாகவே என் வாழ்க்கையில் உனக்கு நல்லெண்ணமிருந்தால், கடிதங்கள் மீண்டும் என் கையில் கொண்டுவந்து கொடுப்பாய்ப்போல்.
என்னால் முடியுமா?
முடியும். காலன் வாயிலிருந்து கணவனை மீட்ட சாவித்திரியின் தியாகத்தை நினைத்துப்பார். முடியும். ஏன்? இரவு தெரு நடனக்காரியை விடுவிக்கக் கையாண்டிருக்கிறாயே சாகசம், அதை நினைத்துப்பார் முடியும். உன் சக்தியும் புரியும்.
இதோ போகிறேன். கடிதங்களோடு திரும்புவேன்.
(சித்ரா செல்ல)
(தனக்குள்) நளாயினி-சாவித்திரி! நல்ல சமயத்தில் நினைவுவந்த நல்ல கதைகள்! இல்லாவிட்டால் இவள் போவாளா? பெண்களை ஏமாற்றப் பொருத்தமான கதைகள்! ஆனால்..........
(சிந்தையில் ஆழ்கிறான்)
(மாலை நேரம். குமரி பாடிக் கொண்டிருக்கிறாள். சித்ரா பல்லக்கில் வருகிறாள். இருவரும் சந்தித்துவிடுகிறார்கள்)
மின்னல்!
அம்மா! எங்கே இந்நேரத்தில்?
அடுத்த கிராமத்தில் தாயார் வீடு, அழைத்திருக்கிறார். அதற்காகப் புறப்பட்டேன். பாதையில் இருட்டிவிட்டது.
புலி அதிகம் அம்மா!
ஆமாம். என்ன செய்வது?
அம்மா! காலையில் போகலாம்.
நானும் அதைத்தான் நினைத்தேன். ஆனால் தங்குவது?
