நச்சுக்கோப்பை
காட்சி 11 · 11 / 18
அடுத்த மாசம் கொடுத்து ஆகற காரியமில்ல. அப்படியின்னு எங்க ஆத்ல உள்ள அரிசியை எடுத்து செய்றேன். பிறகு நீங்க கொடுத்திடுங்கோ.
அப்ப சரி. போயிட்டு வாங்க.
வரும்போது உங்காத்திலேயே சாப்பிட்டு வந்துடுங்கோ.
ஏன் சாமி?
அங்கே பிராமணனுக்குத்தான் போடணும். சூத்ராளுக்குக் கிடையாது.
சாப்பாட்டுக்கு என்ன குறைச்சல் சாமி! பகவான் கிருபையாலும் தங்களுடைய ஆசீர் வாதத்தினாலும் நிறைய இருக்கிறது.
அப்ப சரி. நான் வர்றேன்.
போயிட்டு வாங்க.
(அய்யர் போதல். நொண்டி வருகை. பாட்டு)
ஐயா!
யாரடா நீ?
நொ. காலையிலிருந்து பட்டினி ஐயா!
யாரடா என்று கேட்டால், பட்டினி ஓலை வாசிக்க வந்து விட்டாயே! யாரடா நீ?
ஐயா! நான் ஒரு நொண்டி! பிச்சைக்காரன். வயிற்றுக்கு இல்லை. ஏதாவது கருணை செய்ய வேண்டும்.
ஏண்டா வர்றவன் போறவனுக்கு எல்லாம் சத்திரமா கட்டிவைச்சிருக்கேன். போடா வந்தவழியே.
அதிகமான பசி ஐயா!
போகிறாயா! உதைக்கட்டுமா?
போய் விடு என்றால் போகிறேன். உதைக்க வேண்டாம்.
பிச்சை எடுக்கிற கழுதைக்குப்பேச்சு வேறு? மரியாதையாகப் போகமாட்டாய்.
அய்யனே! நீர் ஒரு பெரிய தர்மகர்த்தா என்று கேள்விப்பட்டு வந்தேன். இங்கு அதர்மம் தலை விரித்தாடுவது எனக்குத் தெரியாது. நஞ்சுக்கு அமிர்தம் என்று பெயரிட்டிருப்பதை நான் அறியேன்.
தர்மத்தைப் பத்தி ரொம்ப தெரிஞ்ச கழுதை! போடா.
திமிரான் பேச்சு! இது உமது குற்றமல்ல. உமது பண்படாத அறிவின் குற்றம். சிந்தனை என்ற வயலுக்கு ஆராய்ச்சி என்ற நீர் பாய்ச்சும். பகுத்தறிவுப் பரம்படித்து, உயர்வு தாழ்வு என்ற மேடுபள்ளங்களைச் சமப்படுத்தி மூட மதி என்ற களைகளை முற்றிலும் அகற்றும். விவேகம் என்ற விளைவு ஏற்படும். அப்பொழுது தெரியும். தர்மம் எது அதர்மம் எது என்று. நல்ல எண்ணம் என்பது நமக்குக் கடவுளாக இருக்கையில் கோவில் ஏன்? உழைக்கக் கை கால்கள் இருக்கையில் ஊரார் சொத்தை உறிஞ்சுபவனுக்கு இலவச போஜனம் ஏன்?
டேய்! என்னடா நினைச்சி பேசற! கொஞ்சம் கூட மரியாதை தெரியல. ஒரு பிச்சைக்காரப் பயல் என்ன என்னடா பேசறது. உதைச்சிடுவேன். உதைச்சி பிச்சிடுவேன் பிச்சு. என்னடா பெரிய வேஷம் எல்லாம் போடுறே.
ஐயா! நானு வேஷம் போடுகிறேன். நானு காவி யணிந்து காமியாக வாழ்கிறேன். நீறு பூசி நீச்சத் தன்மையையா வளர்க்கிறேன். என் உள்ளத்திலெழும் அலைகளே என் உதடுகளின் அசைவாய் இருக்கிறது. வயிறு கேட்டதையே வாய் கூறுகிறது. இதுவா வேஷம்? நன்று! நீர் வேஷம் போடுகிறவனை அறியவில்லை போலும்! அதிலே கிடந்து சொக்குகிறீர். என் போன்ற ஏழைமக்களிடம் கடு மொழிகளைக் கக்குகிறீர். இனியாவது உண்மையை உணரும். அறிவு உலகம் உமக்கு வழிகாட்டுமாக.
(பாட்டு. போதல்)
இந்த அயோக்கியப் பயல் என்னவோ பேசிட்டுப் போயிட்டான் கடவுளே.
(பழனி வருகை)
எல்லாம் அவன் செய்த அயோக்கியத்தனம் தான்.
என்னடா? அயோக்கியத்தனம்?
வேறென்ன? பாட்டாளியையும் பணக்காரனையும் படைத்தது அவன் செயல்தானே? உழைப்பாளியையும் உண்டு களிப்பவனையும் உண்டு பண்ணியது உயரிய செயல் என்பது உமது கருத்தா? பஞ்சத்தால் பாட்டாளி வாடவும், மஞ்சத்தில் பணக்காரன் மதுர கீதம் பாடவும் ஆன நிலையை உண்டு பண்ணியது உமது ஆண்டவனின் செயல் அல்லவா? கோவில் கும்பாபிஷேகத்திற்கு 5000- ரூபாய்! பிராமண போஜனத்திற்கு 10000 ரூபாய்! இதற்கெல்லாம் பணத்தை வாரி இறைத்திடுறீரே, இடிந்து விழும் குடிசையிலே மடிந்துபோகும் பாட்டாளியைக் காப்பாற்ற மது செல்வம் பயன்பட்டதா- பரலோகம் கிடைக்கும் என்ற கனவைத் தவிர?
ஏ தம்பி! நமக்கு ஏண்டா இந்த ஊர் வம்பு? நல்ல பிள்ளையின்னு பேர் எடுடா!
அப்பா!
ஏண்டாப்பா.!
நான் நல்ல பிள்ளைன்னு பேர் எடுக்க விரும்பவில்லை. பகல் வேடக்காரனிடம் பட்டம் வாங்கவும் எனக்குப் பிடித்தமில்லை. என் அறிவுக்கும் ஆற்றலுக்கும் எது நல்லது என்று படுகிறதோ அதை நான் செய்தே முடிப்பேன். தயங்கவும் மாட்டேன். என்னைக் கண்டு இந்தச் சமுதாயம் பல்லைக் கடிக்கிறது. அது பல்லைக்காட்டும் நாள் அண்மையில் வருகிறது. அப்பா! என்னைக் கேளாமல் சாந்தாவை அழகப்பனுக்கு அளித்தீரே, அவள் எழுதி இருக்கும் கடிதத்தைப் பாரும்.
என்னடா எழுதி இருக்காள்? கடுதாசி வந்திருக்கா? படி, படி. கேட்போம்.
(படித்தல்) அன்புள்ள அண்ணா! வணக்கம், நான் இவ்விடம் சுகமாகத்தான் இருக்கிறேன். என் வாழ்வில் வளமையைப் பெருக்கவேண்டிய வயதில் வளைவை ஏற்படுத்திவிட்டார் தந்தை. எனக்கு அமைந்த கணவர் நல்லவர் என்று நினைத்துச் சிறிது நாள் மகிழ்ந்திருந்தேன் கடைசியாக வெறுக்கப்பட்டேன். என் கணவர் குடிகாரர்-குடித்தனக்காரரல்ல! மதுவின் மடியில் கிடந்ததால் இப்போது அவருக்குப் பெருநோய் பிடித்துவிட்டது. பிழைக்க முடியாத ஆபத்து.
விடுதலையில்லா விபத்து. எத்தனை தொல்லைகள் வந்தாலும் பொறுமையாக நட என்பது அப்பாவின் பொன் மொழியாக இருக்கலாம். ஆனால், நளாயினி காலமல்ல இது. உடனே பதில். இப்படிக்கு சாந்தா.
நீதான் படித்துவிட்டு வர்ணனை வேலை செய்கிறாய் என நினைத்தேன். சாந்தாவும் தேவலைபோலிருக்கே ஆமாம். நீ என்னடா பதில் எழுத?
உங்கள் நெஞ்சம் என்ன இரும்பு நெஞ்சமா? நான் என்ன பதில் எழுதுவது? மணியப்ப முதலியார் மகன் ஒரு உணர்ச்சியற்ற மரக்கட்டையாக வாழ்கிறான் என்ற பதிலைத்தான் எழுதமுடியும், பணம்...பணம்....பணம். அவளைக் கெடுத்தது.
