மணிமகுடம்
காட்சி 45 · 45 / 47
நான் பேசவில்லை! இதோ, இந்தக் கடிதம் பேசும்! இது யார் எழுதியது தெரியுமா? மணிமகுடபுரியின் உண்மையான அரசன் மணிமாறன் எழுதியது! படியுங்கள் - எல்லாம் புரியும்!
(சீமான் படித்துவிட்டு)
என்ன மன்னர் முன்பே வெளியேறி விட்டாரா?
ஆமாம்.. ஆமாம்..! சந்தேகமேன்? - என் பேச்சையும் கேட்க வேண்டாம் - மந்திரி பேச்சையும் கேட்க வேண்டாம். (அரசனிடம்) அவனையே கேளுங்கள்! ஏய் நீ உண்மையான அரசனா? மந்திரி உண்டாக்கிய அரசனா? மறுக்காமல் சொல்! உம்..!
சாமி, சாமி! என்னை விட்டுடுங்க! நான் உண்மையான ராஜா இல்லேதான்!
கேட்டீர்களா? - இன்னும் கேளுங்கள்! இந்தப் போலி அரசனை வைத்துக் கொண்டு கல் நாட்டு விழாவிலே பொதுமக்கள் முன்னிலையில் அதிகாரமனைத்தும் தன் பெயருக்கு மாற்றிக் கொள்ள அமைச்சர் திட்டம் போட்டது உண்மையா, இல்லையா?
நம்பாதீர்கள் - எல்லாம் பொய்!
ஏய் நீ சொல்! உண்மைதானே?
ஆமாங்க - உண்மைதான்! ராஜா மாதிரி நடிடான்னு, மந்திரிதான் சொன்னாருங்க!
என்ன, மந்திரியாரே - விழிப்பு?
விழிப்பு ஒன்றுமில்லை - அரசன் ஓடிவிட்டான்! இந்தச் செய்தி நாட்டிலே பரவினால் குழப்பம் ஏற்படுமே என்றுதான் இப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்தேன்!
அந்த ஏற்பாட்டைச் செய்ய உமக்கு என்ன அதிகாரமிருக்கிறது? சீமான்கள் சபையை ஏமாற்றியிருக்கிறீர்! இது பெருங் குற்றம்! போலி மனிதன் ஒருவனுக்கு பொன்னாபரணம் பூட்டிப் பொம்மலாட்டம் நடத்தியிருக்கிறீர் - மிகப் பெரிய குற்றம்! யாரும் செய்யத் துணியாத சதி! சீமான்கள் சபை, இவரை உடனே கைது செய்ய வேண்டும்!
(அனைவரும்)
ஆமாம் - கைது செய்யத்தான் வேண்டும்!
ம்.. உலகப்பா... நடக்கட்டும்!
(மந்திரி கைது செய்யப்படுகிறார்.)
(அரசனைக் காட்டி) இந்தப் போலி அரசனையும் காராக்கிரகத்தில் தள்ளிக் கடுந்தண்டனை விதிக்க வேண்டும்!
பிரபுக்களே! என்னைக் கைது செய்வதற்கு முன்பு ஒரு வார்த்தை! சிறிது நேரம் பேச எனக்கு அனுமதி வேண்டும். சில உண்மைகளை இங்கு வெளியிட விரும்புகிறேன்!
நீயோ பொய்யன் - புளுகன் - போலி மனிதன்! உன்னிடம் ஏதடா உண்மை?
நான் பொய்யனுமல்ல - புளுகனுமல்ல - போலி மனிதனுமல்ல! நானே உண்மையான அரசன்!
என்ன?
நம்பாதீர்கள் - நம்பாதீர்கள்! இவன் ஒரு நடுத்தெரு நாராயணன் - குப்பை மேட்டுப் பயல்! இவனைக் கொண்டு போய் கோபுரத்தில் ஏற்றியது இம்மந்திரி! அவ்வளவுதான்! இவன் மன்னனுமல்ல; மண்ணாங்கட்டியுமல்ல!
நான் போலி அரசன் என்பதற்கு என்ன ஆதாரமிருக்கிறது, பத்திரிகாசிரியரே?
ஒரே ஆதாரம் - உனக்கு எழுத்துத் தெரியாது! கையெழுத்துப் போடவும் கையாலாகாதவன் நீ! அரசனைப் போல உனக்கு கையெழுத்துப் போடத் தெரியாததால்தான் - முதல் நாள் சீமான்கள் சபையில் சித்தங் கலங்கியவனைப் போல நடிக்கச் சொன்னார் மந்திரி!
சபை இவனை நம்பிக் கெட வேண்டாம்! இவன் அரசனேயல்ல! அரசனாயிருந்தால் கையெழுத்துப் போடட்டும்; பார்ப்போம்!
கையெழுத்து! ஒன்று போதுமா? ஓராயிரம் வேண்டுமா? இந்தா!
(கையெழுத்துக்களை சிறு சிறு தாள்களில் மளமளவென்று போட்டுப் பறக்க விடுகிறான்.)
கையெழுத்து மட்டும் போதாதென்றால் இதோ இன்னும் ஆதாரம் (மார்பைத் திறந்து) நான்தான் மணிமாறன் என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரம்! மருதலாங்கானத்து சோழன் மணிமுடிக்காரியோடு போர் தொடுத்த போது ஏற்பட்ட காயத்தின் அடையாளம்! களந்தந்த வடு! போர்த் தழும்பு! போதுமா ஆதாரம்? இன்னும் வேண்டுமா?
போதும் - போதும்! அரசே! எங்களை மன்னித்து விடுங்கள்! அரிஹரநாதரின் பேச்சை நாங்கள் இனியும் நம்ப மாட்டோம்!
(குருநாதரின் கையளாக இருந்த கைதி)
ஆமாங்க! குருநாதரும், இந்த அரிஹரநாதரும் சேர்ந்துதாங்க அரசரைக் கொல்லும்படி என்னை அனுப்பினாங்க!
அய்யகோ! ஓரே பொய் மயம் ஜகத்! நாளைக்கே என் பத்திரிகையில் இதற்கெல்லாம் மறுப்புக் கொடுக்கிறேன்!
