மணிமகுடம்
காட்சி 44 · 44 / 47
என்ன?
ஆ - மக்கள் மன்றத்துக்குத் தடையா?
அதுமட்டுமல்ல, இரவோடு இரவாக ரகசியமாகக் கூடியிருக்கும் சீமான்கள் சபையில் நம் அனைவரையும் நாளைக் காலையில் கைது செய்ய உத்திரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது!
ஆ!
கைது செய்ய உத்தரவு?
அதோடு முடியவில்லை - அடக்குமுறை தர்பார்! நினைக்கவே நெஞ்சம் வெடிக்கிறதப்பா - புதுமைப் பித்தனின் பிணத்தைக் கொண்டு வருபவருக்குப் பரிசளிக்கவும் ஏற்பாடாகி விட்டது!
ஆ!
கண்ட இடத்திலே அந்தக் காம வீரனை யார் வேண்டுமானாலும் சுடலாம்!
அய்யோ! அவரையா? - சுடுவதா? கவிஞரே உடனே அவசரமாக நாம் காரியத்தில் இறங்க வேண்டும் - தோழர்கள் தங்களுடைய அபிப்பிராயத்தை வெளியிடலாம்.
அபிப்பிராயம் என்ன? தலைக்கு மேல் வெள்ளம் வந்து விட்டது! இனி அரசனின் தலையைக் கிள்ளி எறிய வேண்டியதுதான்!
ஆமாம், அதுதான் சரி!
சரியான யோசனை! காலையிலே அவசரச் சட்டம் வெளியாவதற்கு முன்பு - மன்னனின் மரணச்செய்தி வெளியாக வேண்டும் - கிழக்கு வானத்து சிகப்பை, கிள்ளி எறியப்பட்ட அரசனின் ரத்தச் சிகப்பு தோற்கடிக்கவேண்டும்! மல்லிகை பரப்பிய மஞ்சத்திலே - செம்பருத்தி இதழ்கள் சிதறிக் கிடப்பது போல அரசனின் செங்குருதி சிதறிக் கிடக்க வேண்டும்! ம்.. புரட்சி அத்தியாயத்தின் சிறப்பாயிரத்தை எழுத ஆரம்பியுங்கள்!
எழுத ஆரம்பிக்கலாம் - எழுத்தாணியை முதலில் எடுப்பது யார் என்று தெரிய வேண்டுமே? இன்றிரவே அரசன் பிணமாக வேண்டும்! அந்தக் காரியத்தைச் செய்ய ஆள் யார்? அது தெரிய வேண்டாமா?
ஏன் வழக்கம் போல் சீட்டுக் குலுக்கிப் போடுவோம்! யாருடைய பெயர் வருகிறதோ - அவர்கள் அரசனைக் கொல்ல வேண்டும்!
(அல்லியிடம் திரும்பி) தலைவின் சம்மதம் எப்படியோ?
நான் தயார்! சீட்டுக் குலுக்கிப் போடுங்கள்! இன்று அரசன் சாகாவிட்டால் நாளை புதுமைப்பித்தன் சாக வேண்டும் - பிறகு நாம் சாக வேண்டும், நாமும் அவரும் தப்ப வேண்டுமானால், அரசன் சாவதே நல்லது! கவிஞரே, சீட்டுகள் தயாராகட்டும்!
இதோ தயார்.
(கொண்டு வருகிறார்)
உம்.. குலுக்கிப் போடுங்கள்!
(கவிஞர் குலுக்கிப் போடுகிறார் - ஒருவன் எடுக்கிறான் அதைப் பிரித்து கவிஞர் படிக்கிறார் - பயங்கர இசை.)
அல்லி! அல்லிதான் அரசனைக் கொல்ல வேண்டும்!
(தோழர்கள் கரகோசம்.)
இப்போதே நான் தயார்! தோழர்களே, விடை கொடுங்கள்! கவிஞரே - வெற்றியோடு திரும்புகிறேன்! தலைவர் அவர்களே - தங்கள் சந்தேகத்தை நீக்கத் தகுதியான சந்தர்ப்பம் உடனடியாகக் கிடைத்து விட்டது எனக்கு! வருகிறேன் - வணக்கம்!
ம்... போய் வா அல்லி! இந்தா!
(என்று கைத்துப்பாக்கியை எடுத்துத் தருகிறான் - அதை அவள் வாங்கிக் கொண்டு புறப்படுகிறாள்.)
(தோழர்களிடம்) தோழர்களே - அல்லியின் மீது எனக்குள்ள சந்தேகம் இன்னும் நீங்கியபாடில்லை! வாருங்கள்; நாமும் அவளைத் தொடர்ந்து செல்வோம்! அல்லி நம்மை ஏமாற்றி விட்டால், நாமே - இன்றிரவே அரசனைத் தீர்த்துக் கட்ட வேண்டும்! புறப்படுங்கள்!
(புறப்படுதல்)
(சீமான்கள் சபை - அரசன், அமைச்சர், சீமான்கள், கைதி, உலகப்பன்)
குருநாதர் இவ்வளவு பெரிய மோசக்காரர் - சூழ்ச்சிக் காரர் என்று எனக்குத் தெரியாது! அவர் செய்த அக்கிரமத்திற்குச் சரியான தண்டனை, அவராகவே அளித்துக் கொண்டார்!
போதுமய்யா, மந்திரியாரே - நிறுத்தும்! நீர் என்ன பெரிய ஒழுங்காம்? சீமான்களே! செத்துப் போன குருநாதரை குற்றவாளி எனக் கூறும் இந்த அமைச்சர் யார் தெரியுமா? ஊர் பெயர் தெரியாத வழிப்போக்கனைப் பிடித்து அரசனைப் போல ஜோடித்து அவனைத் தன் இஷ்டப்படி ஆட்டி வைக்கும் மாயாவிதான் இந்த மந்திரியார்!
பொய், பொய்..! அரிஹரநாதர் பேசுவது விபரீதமான பொய்!
(அரிஹரநாதரிடம்) என்னய்யா உளறுகிறீர்? ஏன் மன்னரையும் மந்திரியையும் இழித்துப் பேசுகிறீர்?
