உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
மணிமகுடம்/காட்சி 43
நாடகங்கள்

மணிமகுடம்

காட்சி 43 · 43 / 47

என்ன சொல்லுகிறீர்கள்?

முன்பே சொன்னேனே, உதாரணம் என்று! யாரை யார் நம்ப முடிகிறது அல்லி? - கண்களைக் கூட எவ்வளவோ பாதுகாப்பாகத்தான் வைத்திருக்கிறோம் - அவயவங்களிலேயே முதலிடம் அதற்குத்தான் தருகிறோம் - தூங்கும் போது கூட இமைக்கதவால் மூடி, துரும்பு விழுந்து துன்பத்தைக் கூட அதற்குத் தர மனமின்றி அவ்வளவு அருமை பெருமையாக அரவணைத்துக் காப்பாற்றுகிறோம்! ஆனாலும் அந்தக் கண்ணிலே - உள்ளுக்குள்ளே ஒரு சிறு கோளாறு ஏற்பட்டாலும் போதும்!

அப்பப்பா! உபத்திரவம் தாங்க முடிகிறதா? மனிதன் தப்புவதுதான் சாமான்யமாயிருக்கிறதா? அதனால்தான் போலும் கண்களையும் பெண்களையும் ஒப்பிட்டுக் கூறுகிறார்கள்? இரண்டும் அழகானவை! அதுபோல இரண்டும் ஆபத்து நிறைந்தவை!

உங்கள் பேச்சு அர்த்தமற்றது என்று நான் கூற மாட்டேன்? ‘உதாரணத்திற்காக’ - என்பதையும் நான் நம்பத் தயாராயில்லை! எதையோ மறைக்கிறீர்கள்! மறைக்காமல் சொல்லுங்கள்!

நான் ஏன் மறைக்க வேண்டும்? மங்கையராகப் பிறந்து மன்னனைக் காதலித்தால் அல்லவா - மக்கள் மன்றத்திலே விசாரணையின் போது மறைக்க வேண்டும்!

ஓகோ! கலாராணியைப் பற்றிப் பேசுகிறீர்களா? ஆமாம் - அவளை நாமென்ன மன்ற உறுப்பினராகவா ஆக்கியிருக்கிறோம்? நம் மன்றத்திலே ஒரு கைதி அல்லவா அவள்? ஐந்தாம் படை - துரோகி என்பதெல்லாம் அவளுக்கு எப்படிப் பொருந்தும்?

என்னமோ சொன்னேன்! யாருக்குப் பொருந்துகிறதோ அவர்கள் அதைப் பொருத்திப் பார்த்துக் கொள்ளட்டும்! ஆனால் ஒன்று! அல்லி! ஐந்தாம்படை வேலையினால் இந்த மன்றத்தை அழித்து விடலாம் என்று மட்டும் யாரும் கனவு காண வேண்டியதில்லை! மக்கள் மன்றம், இன்று அழியலாம்! பொன்னழகனும் அவன் தோழர்களும் தூக்கு மேடையிலே உரிமைக்குரல் எழுப்பியபடி ஊசலாட நேரிடலாம். ஆனால், நாளை மறுநாள் - அதற்குப் பிறகு - மக்கள் மன்றமே தோன்றாது என்று எந்த ஆதிக்க வெறியனாவது மனக்கோட்டை கட்டினால் நிச்சயம் ஏமாந்தே போவான்!

அல்லி! இனியொரு முறை பேச சந்தர்ப்பம் கிடைத்தால், அந்த முட்டாள் அரசனிடம் இதை ஞாபகப்படுத்த மறந்து விடாதே!

என்ன? அரசனை நான் சந்திப்பதா?

ஆமாம்! நீதானே சொன்னாய்? - அவனைக் காப்பாற்றிய அன்றைய தினம் அவன் உன்னோடு பேசிக் கொண்டிருந்தான் என்று!

அரசனைக் காப்பாற்றியதைப் பற்றி அடிக்கடி நினைவூட்டுகிறீர்கள்! அதை ஒரு பெரிய குற்றமாகக் கருதுகிறீர்கள் போலும்! அது தவறானால், மன்றத்தின் தீர்ப்புக்கும், தண்டனைக்கும் தலைவணங்கத் தயாராயிருக்கிறேன்!

அதை நானும் தவறாகக் கருதவில்லை - மன்றமும் கருதவில்லை! அரசனைக் காப்பாற்றியதென்ன? நீ அவனோடு காதல் கீதம் பாடினாய் என்று யாராவது சொன்னால் கூட நான் தவறாகக் கருத மாட்டேன்!

புரிகிறது தலைவரே - புரிகிறது! உங்கள் புதுமையான போக்கிற்குக் காரணம் புரிகிறது! தனிப்பட்ட கோபத்தைத் தங்களைப் போன்ற தலைவர்கள், இப்படிப் பொதுவான இடங்களில் தணித்துக் கொள்ளக் கூடாது என்பதை தயவாகக் கேட்டுக் கொள்கிறேன்!

என்னம்மா பேசுகிறாய்...? மக்கள் மன்றத்துத் தலைவனிடம் பேசுகிறோம் என்பதை மறந்து விடாதே! மன்னனிடமல்ல; ஞாபகமிருக்கட்டும்!

ஞாபகமிருக்கிறது! நன்றாக ஞாபகமிருக்கிறது. தலைவரே! தங்கள் சகோதரி போல் பாவித்த என் மீது சதிப் பேச்சுக்களை வீசுவதின் மர்மம் என்ன? நான் என்ன குற்றம் செய்தேன்? அதைச் சொல்லுங்கள்! மக்களின் நல் வாழ்வுக்காக - பொன்னழகின் தலைமையிலே அணிவகுத்து நடப்பது என்ற உறுதியிலே இருந்து எள்ளவும் தவறியவளல்லவே இந்த அல்லி! மரண மேடையா? மன்னன் ஆணையா? - எதுவாயினும் தகர்த்தெறிந்து போர்க்கொடி உயர்த்தும் புரட்சிக் கொள்கையிலே இருந்து அணுவும் பின்வாங்கியதில்லையே இந்த அல்லி!

பிறகேன் தலைவரே - என் மீது இந்த அபாண்டமான குற்றச் சாட்டுகள்? அக்கிரமமான பழிகள்? வேண்டாம் - இப்படியெல்லாம் பேசாதீர்கள்! (அழுகிறாள்) உங்கள் தங்கை - இதுபோன்ற தாக்குதல்களைத் தாங்க மாட்டாள், தலைவரே - தாங்க மாட்டாள்!

உன் மீது நம்பிக்கை வைக்கச் சொல்லுகிறாயா அல்லி? நம்பித்தான் இருந்தேன்! இந்த உலகத்திலே யாரையும் விட அதிகமாக உன்னைத்தான் நம்பியிருந்தேன். நம்பியவனைத்தான் நடு ஆற்றில் விட்டு விட்டாய் அல்லி!

எதைப்பற்றி பேசுகிறீர்கள் என்று புரிகிறது - தலைவரே! உங்களை நான் சந்தித்த நாள் முதல் சகோதரனாகவே, கருதுகிறேன்!

ஆமாம்! எனக்கு அது தெரியாமல்தான் போய்விட்டது! பொன்னழகனைச் சகோதரனாகவும், புவியாளும் மன்னனைக் காதலனாகவும் எண்ணுகிற ஒரு சதிகாரி எனக்குத் தங்கையாக வந்திருக்கிறாள் என்பது தெரியாமல்தான் போய்விட்டது!

ஆ! அய்யோ! அரசனின் காதலியா நான்! அக்கிரமமான குற்றச்சாட்டு! இந்த வார்த்தைகளை உடனே திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்...!

முடியாது!

ஏன் முடியாது? என்னையும் அரசனையும் தொடர்புபடுத்தி அநியாயமான பொய்யைச் சொல்வதற்கு என்ன ஆதாரமிருக்கிறது?

ஆமாம், அல்லி குற்றவாளி என்பதற்கு தலைவர் என்ன ஆதாரங் காட்டுகிறார்?

நானே நேரில் கண்டேன்!

அதற்கு சாட்சி?

நானேதான்!

வாதியே சாட்சியாக வரும் விசித்திரம் எந்த வழக்கு மன்றத்திலும் கிடையாது! அல்லியம்மாள் மீது வேண்டுமென்றே சாட்டுகிற குற்றச்சாட்டை நாங்கள் மறுக்கிறோம்!

ஆமாம், சரியான சாட்சியமில்லாமல், சதிக் குற்றம் சாட்டுவதை அனுமதிக்க முடியாது! முன்பொரு முறை இப்படித்தான், புதுமைப்பித்தனை சந்தேகப்பட்டு அவனது நெருங்கிய தொடர்பையே நமது மன்றம் இழந்து விட்டது என்பதை இப்போது ஞாபகப்படுத்துகிறோம்!

தலைவரே!, அல்லி ஒரு அசட்டுப் பெண் என்று கூறுங்கள்; கேட்டுக் கொள்கிறேன்! அகம்பாவக்காரி என்று அழையுங்கள்; ஆத்திரப்படவில்லை! பிடிவாதக்காரி என்று பேசுங்கள்; பெரிதுபடுத்திக் கொண்டிருக்க மாட்டேன்! பேதை - முட்டாள் - பேய்க்குணம் படைத்தவள் - பெண்ணல்ல, பிசாசு - இப்படியெல்லாம் பேசுங்கள்; ஆனால், இந்த மன்றத்திலே நாய் போல பணியாற்றிய என்னை - நம்பிக்கைக்குப் பாத்திரமில்லாதவள் என்று மட்டும் கூறாதீர்கள்!

துரோகிப் பட்டம் சூட்டுவதைவிடத் தூங்கும் போது கல்லைப் போட்டுக் கொன்று விடுங்கள்..! என்னையா துரோகி என்கிறீர்கள்? இந்த மன்றம் வலிவும் பொலிவும் அடைய வாழ்க்கையைத் தத்தம் செய்திருக்கிற என்னையா துரோகி என்கிறீர்கள்? கல்லடியும் சொல்லடியும்பட்டுக் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவைகளைக் கனவிலும் மறவாது உயிரைத் திரணமாக மதித்து உங்களோடு அணிவகுத்து நிற்கும் - இந்த அபாக்கியவதி அல்லியா துரோகி? (அனைவரையும் பார்த்து)...

நீங்கள் சொல்லுங்கள் தோழர்களே - அல்லி, துரோகியா? - அல்லி துரோகியா? - அல்லும் பகலும் அனவரதமும் உங்களோடு போர்க்கொடி பிடித்து அலையும் இந்த அல்லி துரோகியா? அல்லி துரோகியா? அல்லி துரோகியா?

இல்லை! இல்லை!! இல்லை!!!

ம்.. பரவாயில்லை! தற்போதைக்கு அல்லி ஜெயித்து விட்டாள்! காலம் வரட்டும் - காரிருள் மறையும்... உண்மைக் கதிரவன் நிச்சயம் தோன்றுவான்!

(கவிஞர் வந்தபடி) கதிரவன் தோன்றுவதற்குள் நம் கதியெல்லாம் அதோகதிதான்!

கவிஞரே!

மக்கள் மன்றம் தடை செய்யப்பட்டு விட்டது - சட்ட விரோதமாக்கப்பட்டு விட்டது!