மணிமகுடம்
காட்சி 40 · 40 / 47
நாமிருவரும் - வெளிப்படையாக - கணவன் மனைவியாக - கடமை புரியும் தம்பதிகளாக வாழும் நாள் எப்போதோ?
விரைவிலே கிடைக்கும் அந்த பாக்கியம்!
கண்ணாளா!
அல்லி - இதயராணி!
என் ராஜா... இதயராஜா! புறப்பட்டுமா?
உயிரை எடுத்துக் கொண்டு செல்வட்டுமா என்று கேள்!
உயிரை இங்கே விட்டு விட்டு செல்வட்டுமா?
(இருவரும் ‘கண்ணே, மணியே’ என்று தழுவியபடி பிரிதல் - அல்லி வர பொன்னழகன் பதுங்கிப் பார்த்தல்)
(முணுமுணுத்தபடி) அல்லி தான் அல்லியே தான்.
(அல்லி போய்விடல்.)
அவன் யார்? அந்தப் புது மனிதன் யார்? ராஜா என்று கூப்பிட்டாளே - அந்தக் காதல் ராஜா யார்? தெரிந்து கொள்ளாமல் திரும்ப மாட்டேன்...
(அவன் புதுமைப்பித்தனை தொடருகிறான்.)
(புதுமைப்பித்தன் - உலகப்பன் சந்திப்பு - உடை மாற்றிக் கொண்டு அரசனாவது - இருவரும் போதல் - போன பிறகு பொன்னழகன், இருவரையும் தொடர்ந்து செல்கிறான்.)
(அரண்மனைப் பின்புறத்தில் நுழைகிறான் அரசன் - அவனைத் தொடர்ந்து வந்தபடியிருக்கிறான் பொன்னழகன்)
(உலகப்பனிடம்) உலகப்பா - அல்லியிடம் நாளைக்கு எப்போது சந்திப்பு என்று சொல்ல மறந்து விட்டேன்!
அதனால் என்ன பிரபு! அல்லியம்மாளே தேடிக் கொண்டு வந்துவிடுவார்கள்! நீங்கள் இருவரும் இப்படி தோட்டம் தரவில் சந்திப்பதை விட, அல்லியம்மாளை நமது அந்தப்புரத்திற்கே அழைத்து வந்து விடலாம்!
உம்... நானும் அல்லியும் இணை பிரியாது வாழப் போகிற காலம் வராமலே போய்விடுமா என்ன? வரத்தான் போகிறது!
(பேசிக் கொண்டே போகிறார்கள், பொன்னழகன் கவனித்து நிற்கிறான்.)
(தனக்குள்) அரசன் - மணிமாறன்! மணி மகுடத்தின் அதிபதி. அவனது காதலி அல்லி! விரோதியின் காதலி! பகைவனின் வெள்ளாட்டி! துரோக சொரூபம்! பெண் வடிவத்திலே வந்த ஐந்தாம்படை! மக்கள் மன்றத்திலே ஒரு சூன்யக்காரி! சூழ்ச்சியின் உருவமா? என்னையே என்னால் நம்ப முடியவில்லையே! வேவு பார்த்து வருவதாக வெளியே கிளம்புகிறாள் - இங்கே வேந்தனோடு குலவுகிறாள்! வெள்ளாட்டுத் தோலிலே வேங்கை!
விபரீதம்! விபரீதம்! தவிர்க்க முடியாத விபரீதம்! மக்கள் மன்றம் அழிந்தது! மணிமாறன் வென்றான்! மணி மாறன் வென்றான்! பொன்னழகா! உன் புரட்சி முழக்கமெல்லாம் பொடிப் பொடியாகி விட்டது! புயலாக நுழைந்து விட்ட பாலைவனையை நம்பிக் கெட்டேன்! நாட்டைக் காட்டிக் கொடுக்கும் நாசகாரியிடம் ஏமாந்தேன்! ஏமாந்தேன்! இனி என்ன செய்வேன்? என் லட்சியமெல்லாம் மண் தானா? ஈடேற முடியாத கொள்கைத்தானா மக்கள் மன்றத்தின் கொள்கை? இல்லை.. இல்லை?
இப்போதே இதற்கு முடிவு காணுகிறேன்! அல்லி, சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்லுகிறேன்! சூதுக்காரி! உன்னை சுக்கல் சுக்கலாக ஆக்குகிறேன்! பொறுத்திரு பொன்னழகா பொறுத்திரு!
(போகிறான்.)
(சீமான்கள் சபை, அரசன், குருநாதர், அரிஹரநாதர், அமைச்சர்மற்றும் மக்கள் ஓர் புறத்தில் கவிஞர் - குருநாதர் பேசுகிறார்.)
சீமான்களே! குருநாதர் கூறியதனைத்தும் கேட்டீர்கள்! மணிமகுடபுரியின் க்ஷேமலாபங்களை கருதியும் மன்னரின் பாதுகாப்புக் கருதியும் - பொன்னழகன் கும்பலைக் கைது செய்யும்படியும் மக்கள் மன்றத்தைத் தடை செய்யும் படியும் ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டுகிறேன்.
சீமான்கள் சார்பில் அதை நான் வரவேற்கிறேன்!
(சீமான்கள் கோஷம்)
சந்தோஷம் - பொன்னழகன் கூட்டத்தைத் தடை செய்து, அவர்களைக் கைது செய்யும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறி விட்டது? ஒருவனைக் கூட்டிக் கொல்வதற்கு உத்தரவளிக்கும் உரிமை அரசரைச் சார்ந்ததாகும். ஆகவே புதுமைப்பித்தனைப் பற்றிய உத்தரவை அரசரே வெளியிட வேண்டுகிறேன்!
அரசர் மறுக்கப் போகிறாரா என்ன? அரசே தயக்கமின்றிச் சொல்லுங்கள் - அந்தத் தலைகனத்தவர்களைத் துப்பாக்கி முனையில் நிறுத்தச் சொல்லுங்கள்!
ஆமாம் - அதுதான்சரி!
உண்மைதான்! அவன் ஒழிக்கப்பட வேண்டியது நியாயந்தான்! அரசனை ஒழிக்க வந்தவனை, அரசாங்க சட்டம் ஒழித்தே தீரவேண்டும்! அரசர் ஆணைக்குச் சபை காத்திருக்கிறது!
சீமான்களே - உங்கள் விருப்பம் போலவும் - குரு நாதர், அமைச்சர் ஆகியோரின் விருப்பம் போலவும் - புதுமைப்பித்தனை சுட்டுக் கொல்ல உத்தரவிடுகிறேன்.
(சீமான்கள் கரகோஷம், கவிஞர் ஆவேசத்தோடு அதை விட்டு அகலுகிறார்.)
புதுமைப்பித்தன் பிணத்தைக் கொண்டு வருகிறவர்களுக்கு - குருநாதர் கூறியது போல - பத்தாயிரம் மோகராக்கள் பரிசளிக்கப்படும் என்று பறை மூலம் தெரிவிக்கவும் உத்தரவிடுகிறேன்!
