உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
மணிமகுடம்/காட்சி 37
நாடகங்கள்

மணிமகுடம்

காட்சி 37 · 37 / 47

இப்போது நீ என்ன சொல்கிறாய்?

புதிதாக என்ன சொல்லப் போகிறேன்! நான் இங்கு வந்த நாள் முதல், என்னுடைய ஒவ்வொரு அசைவுகளும், உங்களிடம் சொல்லியிருக்கிறேனே - நான் என்ன நினைக்கிறேன் எதையெண்ணி ஏங்குகிறேன் என்பதை யெல்லாம் இன்னுமா சொல்லவேண்டும்?

அரண்மனை ஜாதி என்பது சரியாக இருக்கிறது பார்! சேர்ந்த பழகிய ஒரு தோழியைக் காணவில்லை - என்ன ஆனாளோ தெரியவில்லை - நீ இப்போதுதான் காதல் கீதம் பாட வருகிறாய்.

அல்லிக்காக நான் கவலைப்படாமலா இருக்கிறேன்?

உனக்கு எப்படியம்மா கவலை வரும்? அவள் தான் உனக்குப்போட்டி என்று கருதுகிறாயே.

இல்லையே! அவள் என்னோடு போட்டி போட்டுக் கொண்டு நான் காதலிக்கும் மனிதரையே அவளும் காதலிப்பதாகத் தெரியவில்லையே!

உன்னிடம் சொன்னாளா அல்லி!

சொல்ல வேண்டுமா...? ஒரு பெண் இன்னொரு பெண்ணை சுலபத்தில் புரிந்து கொள்ள முடியும்!

தப்புக் கணக்கு! அல்லி என்னுடையவள்! அதை மாற்ற யாராலும் இயலாது!

அப்படியானால் என்னை வெறுக்கிறீர்கள்! அதுதானே உண்மை!

வெறுக்கவில்லை, கலாராணி! ஆனால் என் எண்ணம் முதலில் சென்றது அல்லியின் மீதுதான்! அதை மாற்ற இயலுமா? காதல் இலக்கணத்திலே அப்படி ஒரு விதிவிலக்கு இருக்கிறதா - தயவு செய்து என்னை மன்னித்து விடு. கலா.. போ.. போய்த் தூங்கு! நானும் தூங்கப் போகிறேன்!

(என்று விளக்கை அடக்கி விட்டுப் படுத்துக் கொள்கிறான். கலா போகிறாள். சிறிது நேரத்தில், அல்லி உள்ளே வந்து விளக்கைத் தூண்டுதல் - பொன்னழகன் திடுக்கிட்டெழுந்து ‘அல்லி’ என அலறுதல்.)

அல்லி! வந்து சேர்ந்தாயா? என்ன நேர்ந்ததோ என்று துடித்துப் போனேன்! அய்யோ காயம் பலந்தானா?

(காயத்தைத் தொட்டுப் பார்க்கிறான் - சகஜமாக கையை அவள் மீது வைக்கிறான்.)

பலமொன்றுமில்லை - தப்பிவிட்டேன்!

உன்னைத் தேடி நம் ஆட்களை எல்லாம் அனுப்பியிருக்கிறேன்! ஆமாம், எங்கே ஒளிந்திருந்தாய்!

அரண்மனையில் அடைக்கப்பட்டேன்!

என்ன?

ஆமாம், புதுமைப்பித்தன் வராவிட்டால் தப்பியிருக்க முடியாது!

புதுமைப்பித்தனா?

ஆமாம் - அவர்தான் என்னை ரகசியமாகத் தப்ப வைத்தார்!

அப்பா! இந்தப் புதுமைப்பித்தன் பெரிய திறமைசாலி தான்! எதிரிகளின் கோட்டைக்குள்ளேயே புகுந்து வெற்றிமாலை சூடுகிறான் மனிதன்.. அல்லி இப்போது புதுமைப்பித்தன் எங்கே? எனக்குப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது.

அவருக்குத்தான் ஓய்வே இல்லையாம்! அதோடு நம் மீது ஏற்பட்ட மனச்சங்கடம் இன்னும் தீரவில்லையாம்!

பாவம் - நாம் தான் தவறு செய்துவிட்டோம்! நல்ல மனிதனை சந்தேகித்து மக்கள் மன்றத்தின் பலத்தைக் குறைத்துக் கொண்டோம். புரட்சியின் உருவம் என்றால் அது புதுமைப்பித்தனுக்கே சாரும்!

அவர் உங்களையும் அப்படித்தான் சொல்லுகிறார்!

அப்படியா? சந்தோஷம் உம் அல்லி மிகவும் களைத்துப் போயிருக்கிறாய், எல்லா விஷயங்களும் காலையில் பேசிக் கொள்வோம் - தூங்கு முதலில்!

உம் சரி! ஆமாம் நான் அரசனைக் காப்பாற்றினேன் என்று ஏதாவது... தவறாக யாராவது?

சொன்னார்கள்! அதற்கெல்லாம் நான் சமாதானம் சொல்லி விட்டேன்! மக்கள் மன்றத்தின் மீது பழி வராமல் பாதுகாத்தாள் என்று நமது கவிஞர் ஒரு பிரசங்கமே செய்து விட்டார்!

கவிஞர் எங்கே?

அவர் வழக்கம் போல உளவறியப் போயிருக்கிறார்! மீதியைக் காலையில் பேசிக் கொள்ளலாம், தூங்கு அல்லி..! ஏன் இங்கேயே படுத்தையிருக்கிறது... தூங்கேனே நான் வெளியில் படுக்கிறேன் காற்றோட்டமாக..!

(அல்லி படுக்கையில் படுக்கிறாள்)

அலட்டிக் கொள்ளாதே! கையை அதிகமாகவும் அசைக்கக் கூடாது! ஓய்வு நிறையத் தேவை...