மணிமகுடம்
காட்சி 35 · 35 / 47
இதற்கெல்லாம் பயப்பட்டலாமா? செம்படவர்கள் கடல் அலைக்குப் பயந்தால்?
என்ன இருந்தாலும் உங்களுக்குத் துணிவு அதிகம்! இரவு நேரத்தில் அரண்மனைக்குள்ளே நுழைந்து - அதிருக்கட்டும். நான் அங்கேயிருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?
(சமாளித்து) தெரியாதா? நான்தானே உன்னை... ம்.. ம்.. தொடர்ந்து கொண்டேயிருக்கிறேன். கல் நாட்டு விழாவில் குழப்பம் ஏற்பட்டதும் மந்திரி முதலியோர் ஓடிவிட்டனர்! அரசன், உன்னைத் தூக்கிக் கொண்டு அரண்மனைக்கு வரச் சொன்னான் அதிருக்கட்டும்; அல்லி - நீ அரசனைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் என்ன வந்தது?
என்னமோ, எனக்கே தெரியவில்லை! அரசனது முகத்தைப் பார்த்ததுமே, எனக்கு ஏதோ ஒரு வித உணர்ச்சி ஏற்பட்டது. மின்னல் போல மறுகணம் அவர் மீது கத்தி பாய்ந்தது; நான் என்னை அறியாமலே தடுத்து விட்டேன். அதுவும் நல்லதாய்த்தான் போயிற்று - அரசன் மாண்டிருந்தால் - பழி, மக்கள் மன்றத்தின் மீதல்லவா விழும்!
ஆமாம்: ஆனால் ஒன்று! பொன்னழகன் முதலியோருக்கு நீ செய்த காரியம் பிடிக்காதென்றே நினைக்கிறேன்.
பிடிக்கா விட்டாலும் - மக்கள் மன்றத்திற்கு ஆபத்து வரக் கூடாது என்பதிலே அவர்களுக்கும் அக்கரை இருக்கிறதல்லவா? அதனால் என் மீது குற்றம் சாட்ட மாட்டார்கள்!
சரி, அல்லி! நான் வருகிறேன்! நீயும் புறப்படு!
எங்கே போகிறீர்கள்? ஆமாம் நீங்க இப்போது எங்கேயிருக்கிறீர்கள்? என்ன செய்கிறீர்கள்?
இப்போது, இங்கே- உன்னுடன் பேசிக் கொண்டிருக்கிறேன், இங்கிருந்து எங்கே போவேனோ தெரியாது?
தங்கள் எதிர்காலத் திட்டங்கள்...?
எத்தனையோ உண்டு. மணிமகுடத்துக்கு நான் தான் சொந்தக்காரன் என்பது உனக்குத் தெரியுமா, அல்லி!
எந்த மணிமகுடத்துக்கு
மணிமகுடம் பத்திரிகைக்கு! நாட்டுக்கு அல்ல! இப்போதைய எனது முயற்சி அதுதான்! ஏட்டின் மூலம் நாட்டு மக்களின் மனதைப் பண்படுத்தலாமென்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது - அல்லி என்னைப் பற்றிப் பொன்னழகனுக்கு என்ன அபிப்பிராயம்!
அவர், உங்கள் மீது அளவு கடந்த பிரியம் வைத்திருக்கிறார் - முதலில் சந்தேகப்பட்டதற்காக அடிக்கடி வருந்துகிறார் - உங்கள் பெயரைச் சொன்னாலே அவருக்குத் தனி ஆனந்தம்!
அப்படியா மிகவும் நன்றி!
உங்களைப் பற்றி பொன்னழகனின் அபிப்பிராயத்தை மட்டும் கேட்டீர்களே; நான் என்ன அபிப்பிராயம் வைத்திருக்கிறேன் என்று கேட்டீர்களா?
கேட்காமலே சில விஷயங்களைப் புரிந்து கொள்ளும் சக்தி உண்டு எனக்கு!
அப்படியானால் உங்களுக்கு மனம் இருக்கிறது!
அது இருப்பதால்தான் மக்களைப் பற்றி நினைக்க முடிகிறது!
அந்த மனதில் - புயல், புகைச்சல், போர், பூகம்பம் இப்படி மாறி மாறி வேதனைகளை மட்டுமே வாட்டமிட்டுக் கொண்டிராமல் - தீக்குப் பதிலாக தென்றலும் நுழைய வேண்டுமல்லவா?
புரிகிறது எனக்கு! நீரின்றி வறண்டு கிடக்கும் நாக்கிலே ஒரு துளி தேன் விழுந்தால் - அதன் சுவையே வேறு தான் என்கிறாய், இல்லையா?
இருவர் எண்ணமும் ஒன்றாகத்தானிருக்கிறது! ஆனால்...?
யார் முதலில் வெளிப்படுத்துவது என்பதிலே சிறிது வேறுபாடு இருக்கிறது!
‘இருந்தது’ என்று சொல்லுங்கள்!
அல்லி!
ஆங்..!
(நாணங் கலந்த இருவர் உணர்ச்சி - புதுமைப்பித்தன் அவளைத் தொடுகிறான். அல்லியும் அவனை நெருங்குகிறாள். இருவரும் சிறிது நேர ஊடல் நிகழ்ச்சிகள்.)
எங்கே, என்னைப் பார்! பாரேன்! ஆகா... கணல் மட்டுமே கிளம்பும் இந்தக் கண்ணிலே, என்று கருதியிருந்தேன்! என்னைக் கவரும் காந்தமும் உண்டு என்று இப்போது தான் புரிந்து கொண்டேன் கண்ணழகி! அன்று, கொடிக்கால் நகரில் கோடையிடி பெண் வார்த்தைகளைக் கொட்டிய இந்த இதழ்களிலே, இவ்வளவு மென்மையிருக்கிறது என்று எனக்குத் தெரியாது மின்னலே...!
நீங்கள் மட்டும் என்னவாம்? எரிமலை என்று வர்ணித்தார்கள் உங்களை! எனக்கு நீங்கள் ஆனந்த அருவியாக அல்லவா இருக்கிறீர்கள்? கோடை வெய்யில் என்றார்கள்; குளிர் நிலவுங்கூட என்பதை இப்போதுதானே புரிந்து கொண்டேன்!
அல்லி
என்ன?
நம்முடைய போராட்டத்திற்கு இந்தக் காதல் முட்டுக்கட்டையாக இருந்து விடக் கூடாது!
