மணிமகுடம்
காட்சி 33 · 33 / 47
(அவள் வருதல்)
பார்த்துக்க இதோ இருக்காரு! பொம்மை ராஜா!
எங்கம்மா வந்தே? மந்திரி எஜமான் பாத்துட்டு வரச் சொன்னாகளாக்கும்!
ஆமாம்!
போய்ச் சொல்லு! இருக்கேன்னு - எஜமானை வெளியே கிளம்ப வேண்டான்னு சொல்லு - ஊர்ல ஏக ரகளையாயிருக்கு.
ஆகட்டும்.
சரி நான் போய், தலையிலே ரெண்டு சொம்பு தண்ணி ஊத்திக்கிறேன் - குளிச்சி நாலு நாளாச்சு - உடம்பெல்லாம் அரிக்குது! உடையெல்லாம் மாத்திக்கணும் - இந்த உடை நமக்கு லாயக்குப்படுமா?
போயி, குளிங்க, குளிங்க!
(அரசன் போகிறான், உலகப்பன் வஞ்சியிடம் நெருங்குகிறான்.)
சரி, சரி? என்னைப் பார்த்து ஒன்றும் சிரிக்கவும் வேண்டாம் - என் மனதை எரிக்கவும் வேண்டாம்!
உன் மனதை எரிக்கிறேனா? அது என்ன அடுப்பா? அல்லது விறகா? நான் எரிப்பதற்கு!
நான் எவ்வளவு கவலையோடு இருக்கிறேன்! அதைப்பற்றி அக்கரை கொஞ்சமாவது இருக்கிறதா?
அக்கரையில்லாமலில்லை அழகீ - இக்கரையிலே சிறிது இடைஞ்சல் - அவ்வளவுதான்!
சக்கரை போலப் பேசி விட்டால் போதுமாக்கும்?
சிக்கலை வளர்க்காதே - சீக்கிரம் செய்தியைச் சொல்...
நேற்று இரவு தோட்டத்து வாசலிலே காத்துக் காத்துக் காலும் ஒடிந்து விட்டது - கண்ணும் பூத்து விட்டது.
ஆ - கால் ஒடிந்தது - கண் பூத்தது, ஐயோ அப்படியானால் நடக்கவும் முடியாது - பார்க்கவும் முடியாதே - வஞ்சீ கண்ணிலே பூ விழுகிற வியாதியை முற்றவிடக் கூடாது - பிறகு பார்வையே பட்டுப் போய்விடும்!
கேலி செய்கிறீர் - தாலி கட்டப் போகும் காதலனுக்காக, நான் அந்த வேலி ஓரத்திலே தவித்து நின்றது கடவுளுக்கு மட்டுந்தான் தெரியும்.
அய்யோ - கடவுளுக்குத் தெரிந்தால் சும்மாயிருக்க மாட்டாரே! கண்ணன் அவதாரத்தில் அங்கு வந்திருப்பாரே?
அப்படி வந்திருந்தாலும் பரவாயில்லையே...
என்ன?
அவரையே உம்மிடம் தூது அனுப்பியிருப்பேன்!
அதானே பார்த்தேன்! அர்ச்சுனனுக்காகத் தூது சென்ற ஆபத்பாந்தவராயிற்றே... அவர்! கண்ணே வஞ்சி.. கவலையை விடு.. (அருகே சென்று)
ஊஹும்... என்னைத் தொடவேண்டாம்?
அடத் “தேடி வந்த வஞ்சி மானே.. மோடி செய்யாதே வீணே” என்று பாடட்டுமா?
பாடலால் ஊடல் தீருமா?
ஆடலால்?
ஊஹும்
கூடலால்
(வஞ்சி கண்ணை மூடிக் கொண்டு சிரிக்கிறாள்.)
ஆகா விரல் இடுக்கின் வழியே, விழியைச் செலுத்தும் வெண்முத்துச் சிரிப்புக்காரி, சிங்காரி - ஒய்யாரி எங்கே - செந்தாமரை போல் சிவந்திருக்கும் உன் உள்ளங்கைகளை என்னிடம் கொடு!
