உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
மணிமகுடம்/காட்சி 32
நாடகங்கள்

மணிமகுடம்

காட்சி 32 · 32 / 47

ஆமாம்! (குழப்பம்) பிறகு கொல்ல வந்தது யார்தான்? உங்கள் கூட்டத்திலே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விளைவல்லவா அது!

கொடிக்கால் நகரில் கோயில் கூடாது என்பதுதான் எங்கள் தீர்மானமே தவிர, கொலை வெறித்தாண்டவமல்ல!

அப்படியானால் அரசன் சாகக் கூடாது, என்பதிலே ஏன் அவ்வளவு அக்கரை உனக்கு?

அதுவும் தவறு! அரசன்மீது ஆசையோ - அக்கரையோ அல்ல! அபவாதமும், வீண் பழியும் எங்கள் மன்றத்தைச் சேருமே என்ற அச்சம்தான்! அதனால்தான்!... அதனால்தான் மன்னவரே, பாய்ந்துவந்த கத்தியைத் தடுத்தேன். மணிமகுடம் ஒரு மாபெரிய உத்தமரை இழந்து விடுமே என்ற மனப்பதட்டமல்ல, அதற்குக் காரணம்!

நான் நினைத்ததுதான் தவறு - இரக்க சிந்தை உள்ளவளாக்கும் - மனிதப் பண்புகற்றவளாக்கும் - தியாகப் பெண்களின் வழி நடப்பவளாக்கும் - தேசப்பிதாவுக்கு வந்த ஆபத்தை தடுக்க முனைந்திருக்கிறாள் தியாகவல்லி என்று மகிழ்ந்தேன்! மகிழ்ச்சி, மறைந்து விட்டது. மக்கள் மன்றத்தின் பெருமையை நிலைநிறுத்த, அதற்குக் களங்கம் வராமல் காப்பாற்ற, சுருக்கமாகச் சொன்னால் சுயநலத்தின் காரணமாக என்னைக் காப்பாற்றியிருக்கிறாய் நீ!

இல்லை.. இல்லை.. ராஜபக்தியின் காரணமாகத்தான் இந்தச் செயல் புரிந்தேன் என்று கூறி, செங்கோலேந்தியின் சிரிப்பைப் பரிசாகப் பெற நான் விரும்பவில்லை! எனக்குத் தேவை, மன்னரின் புன்னகை அல்ல! மாநிலத்து மக்கள் அழாமல் இருந்தால், அது ஒன்றே போதும்!

மக்கள் அழாமலிருக்க பிரார்த்தனை செய்கிறாயா?

இல்லை முயற்சிக்கிறேன்!

மனிதன் அழுது கொண்டுதான் பிறக்கிறான், ஏன் தெரியுமா?

சிரித்துக் கொண்டு வாழ்வதற்காக!

எப்போதுமே சிரித்துக் கொண்டிருந்தால், இளிச்சவாயன் என்பார்கள்.

தங்களை யாரும் அதுபோல் சொல்வதில்லையே?

அரசன் அழுவதே இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா? என் நெஞ்சிலே காதை வைத்துக் கேள் - ஒப்பாரி சத்தம் உன் காதைத் துளைக்கும்!

புது நாடுகள் கிடைக்கவில்லையே என்ற புலம்பலுக்கும் - பழைய கஞ்சிக்கும் வழியில்லையே என்ற கதறலுக்கும் வித்தியாசம் நிறையவுண்டு வேந்தரே!

அதென்னமோ - எல்லோரும் எப்போதும் சிரித்துக் கொண்டேயிருக்க முடியாது என்பது என் சித்தாந்தம்!

நான் மனித சமுதாயம் முழுவதையும் குறிப்பிடுகிறேன்! எல்லாருக்கும் வாழ்வு கிடைத்தால் - வளம் பங்கிடப்பட்டால் - செழிப்பும், சிரிப்பும் ஜெகத்தின் சம சொத்தாகி விடும்!

சமசொத்து - சமமாகப் பங்கிடுவது - இந்த அரண்மனையை இடித்து, ஆளுக்கு ஒரு கல் கொடுக்க வேண்டும் - இல்லையா?

ஏன் மரத்தடியிலே வைத்துக் கன்னத்தில் போட்டுக் கொள்ளவா? அரசே... உடைமை பொது என்றால் அரண்மனையை நொறுக்கி ஆளுக்கொரு கல் கொடுப்பதல்ல! அரண்மனை நிச்சயமாக இருக்கும்... ஆனால் ஒரு மன்னருக்கு மட்டும் நிழல் தரும் இடமாக இருக்காது! நாட்டின் எதிர்கால மன்னர்கள் அனைவருக்கும் பயிற்சியளிக்கும் அறிவுக் கலாசாலையாக இருக்கும்! அரசே.... இடித்து எடுக்க வேண்டிய கல், அரண்மனை! சுவற்றிலே இல்லை... அங்கு உலவும் அதிகாரிகளின் இருதயத்திலே இருக்கிறது!

அது இடிக்கப்பட வேண்டும்... நொறுக்கப்பட வேண்டும்... தூள் தூளாக்கப்படவேண்டும்.

(உலகப்பன், அரசனிடம் அமைச்சர் அழைப்பதாக ஜாடை காட்டவே, அரசன் புறப்பட்டு)

சரி. சரி..! உன் கொள்கையை என்னுடைய அரச பதவி ஒப்புக் கொள்ளாது.. நான் வருகிறேன்!

நான்?

நீ...? நீ இங்கேயே இருக்க வேண்டியதுதான்! நாளைய தினம் அல்லது மறுநாள் விசாரணை இருக்கிறது; அது வரை, இது உனக்கு சிறைச்சாலை மாதிரிதான்!

இதுதான் நன்றி தெரிவிக்கும் அழகோ?

அரண்மனைக்காரர்கள் அழகே தனி அழகுதான்! அல்லி - ஜாக்கிரதை கட்டுக்காவல் அதிகம் - தப்பி ஓட முயலாதே - தலைபோய்விடும்.

(அரசன் போகிறான். அல்லி, தனியாக - எதுவும் புரியாமல் உலவுகிறாள் - தரையில் படுக்கிறாள் - விளக்கை சிறிது அடக்கி விட்டு.)

(அரண்மனையில் வேறிடம் அரசன் உலகப்பன் இருவரும்)

என்ன உலகப்பா... ஏன் அதற்குள் அழைத்தாய்; சுவையான கட்டத்தில்.

சுவையான கட்டம் ஒன்றுமில்லையே பிரபு - எட்டி நின்று பேசிக் கொண்டுதானே இருந்தீர்கள்!

எட்டி நின்று பேசினாலும் எட்டிப் பேச்சல்ல - வெட்டிப் பேச்சுமல்ல!

வெல்லக்கட்டிப் பேச்சாக்கும்! அரசே! தாங்கள் இருக்கிறீர்களா, என்று பார்த்து வருமாறு, அமைச்சர் வேலைக்கார வஞ்சியை அனுப்பியிருக்கிறார்!

அவளை ஏன் அனுப்பியிருக்கிறார்?

ஊரிலே குழப்பமாயிருக்கும் போது மந்திரி வெளியே கிளம்புவாரா? அதனால் அவள் வந்திருக்கிறாள்; இவளிடம் முகத்தைக் காட்டுங்கள்! ஏ, வஞ்சி, வஞ்சி, இங்கே வா!