உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
மணிமகுடம்/காட்சி 31
நாடகங்கள்

மணிமகுடம்

காட்சி 31 · 31 / 47

இதயராணி...

இதயராஜா...

கண்மணி...

கண்ணாளா.

அன்பே..

இன்பமே...

(நினைவு அலைகள் ஓய்கின்றன. அல்லி மயக்கம் தெளியாமலே படுத்திருக்கிறாள். அரசன் முன் அமர்ந்திருந்த ஆசனத்திலேயே அமர்ந்திருக்கிறான் - நினைவு அலை ஓய்ந்து எழுகிறான் - அவள் கட்டிலண்டை போகிறான் - அல்லி புரண்டு படுக்கிறாள். முகத்திலே தண்ணீர் தெளிக்கிறான். அல்லி எழுந்து உட்கார்ந்து அரசனைத் திகைப்புடன் பார்த்து சுற்றும் முற்றும் பார்க்கிறாள்.)

என்ன பார்க்கிறாய்? ஏன் திகைக்கிறாய்? ‘கதைகளில் வரும் கதாநாயகிகள் திக்குத் தெரியாத இடத்தில் விடப்படும்போது - நான் எங்கேயிருக்கிறேன் - என்று வசனம் பேசுவார்களே; அதுபோலப் பேசத் தோன்றுகிறதா - நீ எங்கிருக்கிறாய், தெரிகிறதா? இதோ தகதகவென ஜொலிக்கும் மஞ்சள் நிறப்பட்டுத் திரைகள்! அதை அசைத்து விளையாடும் இளந்தென்றல் காற்றை வரவேற்பதற்கென அமைந்த வைரமிழைத்த பலகணி! பலகணி வழியே பார்வை செலுத்தினால் பால் நிலவிலே வர்ணங் காட்டி, சிரிக்கும் ரோஜாக் கொல்லை!

முல்லைத் தோட்டம்! அவை தந்த மலர்மஞ்சம்! மயிலாசனம்! மாணிக்க நாற்காலி! மரகதச் சிலைகள்! பாதாமிட்ட பால்! பழம்! ரசம்! ஊண்! தேன்! இவைகளத்தனையும், இது மணிமாற ராஜனின் மாளிகை என்பதை உனக்குச் சொல்லவில்லையா?

அரசே நல்லவேளையாக... இங்கிருக்கும் அத்தனை பொருள்களுக்கும் பேசும் சக்தி கிடையாது...

பேசும் சக்தி இருந்தால்?

விக்கிரமாதித்தன் சிம்மாசனத்துப் பதுமைகள் போல ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்லும்.

உதாரணமாக...?

ஒன்றல்ல; ஓராயிரம் காட்டமுடியும். அதோ, செத்துப் போன யானையின் எலும்பு - சிலையாக மாறியிருக்கிறது? ஆனால், வர்ண விளக்குகளாய் - வைரப் பதுமைகளாய் சொர்ணச் சிம்மாசனங்களாய் மாறிக் கிடக்கும் இவைகள் எல்லாம் - சாகாத மனிதர்களின் எலும்பு என்பதை மறந்து விடக் கூடாது! மன்னர் பிரானே - யானையாவது தன்னுடைய தந்தத்தை அப்படியே தந்திருக்கிறது உமக்கு? மனிதனுடைய தந்தம் ஓடாகத் தேய்க்கப்பட்டல்லவா, இந்த உப்பரிகை உயர்ந்திருக்கிறது!

புரியவில்லை, ஒன்றும்!

மன்னிக்கவும் - இது செவிடன் காது சங்கு மகாராஜா! அதிருக்கட்டும் - என்னை இங்கு அழைத்துவர வேண்டிய காரணம்?

மயக்கம்!

என்ன?

எனக்கல்ல!

பிறகு யாருக்கு?

கேட்பவருக்குத்தான்! கத்திக்குத்து - அதன் காரணமாய் மயக்கம் - நடந்ததெல்லாம் நினைவிருக்கிறதல்லவா?

நினைவிருக்கிறது - அதற்காக நான் இங்கு வர வேண்டிய அவசியம்?

மணிமகுடத்தின் மன்னனையே காப்பாற்றியிருக்கிறாய் - அதற்கு நன்றி தெரிவிக்க வேண்டாமா?

தேவையில்லை நன்றி எனக்கு! விடை கொடுங்கள் வருகிறேன்!

பெண்ணே!

என் பெயர் அல்லி!

(திடுக்கிட்டது போல் நடித்து)

அல்லி - அல்லி- அடங்காப்பிடாரி அல்லி!

அவளல்ல - அது அர்ச்சுனன் மனைவி!

தெரியும் - புரட்சிக்காரி அல்லி நீ - பொன்னழகன் கூட்டத்தைச் சேர்ந்தவள் - என்னைக் கொல்ல வந்த சதிக் கூட்டத்திலே ஒருத்தி!

புரட்சிக்காரிதான் - பொன்னழகன் கூட்டத்தைச் சேர்ந்தவள்தான் - ஆனால் சதிகாரி அல்ல!

சதிக்கூட்டத்தின் தலைவி!

சதிக் கூட்டத் தலைவி, உம்மைச் சாவிலிருந்து மீட்டிருக்க மாட்டாள்!