மணிமகுடம்
காட்சி 27 · 27 / 47
(கிரீடத்தைப் பார்த்தபடி) உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ, ராஜபோகத்திலே, அதிகாரத்திலே உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ? (பாட்டை முடித்து) ஏ! கிரீடமே நவரத்தினங்களும், முத்துக்களும் வைத்து இழைக்கப்பட்ட தங்கக் கூரையே! என் தலைக்கு நீ ஒரு பாறையே!
(என்று கிரீடத்தை தன் தலையில் வைத்துக் கொள்கிறான்... அமைச்சர் கையிலே இருக்கும் பாதுகைகளைப் பார்க்கிறான்.)
(அமைச்சரிடம்) இது என்ன அதிசயம்! மந்திரியாரே - பாதுகையை கையிலே போட்டுக் கொண்டு நிற்கிறீர்? ஓகோ! பாதுகை என்றதும், கையிலே மாட்டிக் கொண்டீரோ - மகா புத்திசாலி அய்யா நீர் - இது பாதக்கை! அதனால், பாதத்தில் மாட்டிக் கொள்ளும் - பாதுகையே - பாதுகையே!
(என்று பாடுகிறான்)
(எழுந்து) அமைச்சரே!... அரசரின் நிலை எனக்கு மனக்கிலேசம் தருகிறது.. காணச் சகிக்கவில்லை. உடனே அழைத்துப் போக ஏற்பாடு செய்யுங்கள்!
(அதைக் கேட்டு விட்டு) ஏ... உலகம்!
அரசே!
யார் அது? அந்தப்பிராணி யார்?
அவர்தான்பிரபு, நமது குருநாதர்.
குரு - நாதர் - ஓ - குரு என்ற பெண்மணிக்கு இவர் நாதரோ? - அது என்னடா, பெண்ணுக்குப் போய் குரு என்று பெயர் வைத்திருக்கிறார்கள்?
இல்லை பிரபு - குருநாதர் என்றால் பெரிய மகான்!
ஆங்! (ஆச்சரியமாக) யானை பெரிசு!
இல்லை சிறந்த பக்திமான்!
யாருடா இவன்? யானையா என்று கேட்டால் மான் என்கிறான் - மான்! ஏ மானே! (குருநாதரிடம் போய்) வள்ளிமானே! ஒரு புள்ளிமான் - (என்று கேலியாகப் பாடுதல்) ஆகா - அமைச்சரிடம் ராஜ்யத்தை ஒப்புவித்து விட்டு காட்டுக்கல்லவா வந்திருக்கிறேன் - அப்படியானால் இந்த மான் - வள்ளி மானுமல்ல, புள்ளிமானுமல்ல, இது மாயமான் மாரீச மான்! இது ராமா! ராமா! என்று கத்தும் - (உலகப்பனைப் பார்த்து) ஏ லக்ஷ்மணா! பக்தியோடு கத்துகிறது என்று ஏமாந்து விடாதே!
எடு வில்லை! தொடு கணையை!
(என்று வாளை உருவி உலகப்பனிடம் நீட்ட, உலகப்பன் வாளைத் தொடுகிறான்.)
ஏய் தொடு கணையை, என்றால், கணையைத் தொடுகிறாயா நீ! தொடுக்க வேண்டும், என்று அர்த்தமடா, முட்டாளே!
(தயவாக) அரசே! குருவைக் கேலி செய்யாதீர்கள்! அவாள் பெரியவாள்!
என்னிடமிருப்பது என்ன; சின்ன வாளா? இதுவும் பெரிய வாள் தான்! அதுவும் போர்வாள்! யார் தடுத்தாலும் பாயக் கூடிய போர் வாள்! (வாளை சுழற்றிக் கொண்டே ஆடியபடி) ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ என்று பாடுகிறான்.
அமைச்சரே! மன்னர் பிரானை இப்படி வேடிக்கை பார்ப்பது வேதனையாக இல்லையா? உடனே அழைத்துச் செல்லுங்கள் - ஏய் உலகப்பா! என்ன செய்கிறாய்?
உலகப்பனா ஆடுகின்றாய் உலகப்பா! ஆர்ப்பாட்டக்காரர் இதை ஒப்பாரப்பா! (சீமான் சபையைப் பார்த்து) தேடப்பா ஒரு வழியை என்று சொன்னேன் - இந்த செகத்தப்பன் யோசித்து சித்தம் சோர்ந்தான்! (கம்பீரமாக) இந்நிலையில் இருப்பதனால் உலகப்பா - நீ புதுக்கணக்குப் போட்டு விடு! பொருளையெல்லாம் பொதுவாக எல்லார்க்கும் குத்தகை செய்!
(இந்த சமயம் அமைச்சரும், குருநாதரும் அரசனை அழைத்துச் செல்லும்படி சைகை காண்பிக்கின்றனர்.)
வாருங்கள் பிரபோ - உடனே சென்று பொருளையெல்லாம் பொதுவாக்க, குத்தகை செய்து விடுவோம்.
(அரசனை அழைத்துப் போக ஒரு வீரன் வணங்கி நிற்கிறான். அவனைப் பார்த்தவுடன் அரசன் நடுங்குகிறான்.)
பயப்படாதீர்கள் பிரபு! இவர் உங்கள் வீரன்!
என்னது? பயமா? நானா பயப்படுகிறேன்? (குருநாதரை ஜாடை காட்டி) இந்த சிறு நரியைக் கண்டு இந்த சிங்கம் அஞ்சுவதா?
“அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே உச்சி மீது வானிடிந்து வீழ்ந்த போதும் அச்சமென்பதில்லையே!”
(என்று உரத்த குரலில் பாட, உலகப்பனும் வீரனும் அரசனை உள்ளே இழுத்துச் செல்கின்றனர். கூடியிருப்போரெல்லாம் ‘இச்’ சென்ற பரிதாப ஒலியை எழுப்புகின்றனர்.)
(பைத்தியம் போல நடித்து அரசன் உலகப்பனால் அழைத்துச் செல்லப்பட்டபின்)
மாண்புமிக்க சீமான்களே! பகவானின் அருள் பெற்ற செல்வர்களே! இந்த மணிமகுடபுரி சாம்ராஜ்யத்தில் பாவச் செயல்களின் தொகை பெருகி விட்டது! காவி அணிந்தோரைத் தூற்றி வாழும் கூட்டமும் அதிகரித்து விட்டது! அதன் பலனைத் தான் சற்று முன்னர் நாம் இந்தத் திருச்சபையிலே கண்ணால் கண்டோம்!
மக்கள் செய்யும் பாவம், மன்னவன் தலையில் விழுகிறது. மக்கள் தலைவனன்றோ, மன்னவன்! எம்பெருமானைப் பிடித்த கோபாக்கினி தான் கோவேந்தனின் பித்த முதிர்ச்சிக்குக் காரணம். இனியும் இந்த ராஜ்யத்தில் நாத்திகம் பேசுவோரையும் நாத்தழும்பேறியோரையும் அனுமதித்துக் கொண்டேயிருந்தால், இப்போது மன்னனைப் பிடித்திருக்கிற இந்த நோய் பின்னர் ஒவ்வொரு சீமானையும் பிடித்து வாட்டும் - அதன் பிறகு ஒவ்வொரு பிரஜையையும் பிடித்து வருத்தும்!
அவ்வளவு ஏன்? ஆண்டவனே, திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளாக மாறி மணிமகுடபுரி சாம்ராஜ்யத்தையே அழித்து விடுவார் - என்னைத் தவிர!
உண்மைதான் - குருநாதர் சொல்வது உண்மைதான்! கோயில் கட்ட உடனே கல் நாட்டு விழா செய்து, ஆண்டவன் கோபத்தை தணிக்க வேண்டும்!
ஆமாம்! அதை நான் ஆமோதிக்கிறேன்.
