மணிமகுடம்
காட்சி 23 · 23 / 47
(சிரித்து) தவறான கணக்கு ராணுவத் தலைவரே, மிகத் தவறான கணக்கு! பெண்கள் வெறும் மஞ்சத்து ராணிகள் மட்டுமல்ல; நெஞ்சத்தில் புயலேற்று விட்டால், கொஞ்சத்தில் விடமாட்டோம்; உம் போன்றோர் அதிகாரம் பஞ்சாய்ப் பறக்கும்வரை! ஏணை ஆட்டமட்டும் கற்றதில்லை இந்தக் கை! வெறியர்களின் ஆணையை உடைக்கவும் கற்றிருக்கிறது! கலை காட்டி, நாட்டின் நிலை காட்டும் அழகு சுந்தரிகள் மட்டுமல்ல பெண்கள்; உன் போன்ற கொடியோர்கள் தலைகாட்டினால் அதை நொறுக்கி எறியவும் தெரிந்தவர்கள்.
“வீரப் பெண்மணிகள் ஒரு நாட்டின் வெற்றித் திருவிளக்குகள்” என்பதை பெண் என்றால் மாய மெனக் கூறும் பித்தனாம் உங்கள் குருநாதர்தான் மறப்பார் - வாள் பிடிக்கத் தெரிந்தவரே! நியாய மறக்காதீர்! வெட்கம்! வெட்கம்!
போதும் உன் பிரசங்கம்!
நண்பனே - பிரசங்கமாகத்தான் தெரியும் - பின்னடைந்து போனவரின் புண்ணடைந்த நெஞ்சிலிருந்து புறப்படும் அழுகுரல் - பிரசங்கமாகத்தான் தெரியும் - யாருக்கு? காதுகளின் கர்ண பேரிகை கிழிந்து விட்ட காட்டு ராஜாக்களுக்கு! கனகமணிக் கட்டிலையும், அமுதமொழி மாதரையுமட்டுமே கண்டு கண்டு கண்களிலே சதை வளர்த்து விட்ட சல்லாப சுந்தரர்களுக்கு - ஏழைகளின் ஆவேசக் குரல், வீழ்ந்து போனவர்களின் உரிமை முழக்கம், பிரசங்கமாகத்தான் தெரியும்.
இவன் என்ன உளறுகிறான்! 2. வீர: இல்லை கத்துகிறான்!
கழுதைக்கு கற்பூர வாசனை தெரியாதுதான் அப்பனே! பிரசங்கம் - உளறல் - கத்தல் - தூஷணை - இந்தக் கேடயங்களால் விடுதலைக் கணைகளை அதிக நாள் தடுத்துக் கொண்டிருக்க முடியாது.
சரி இப்போது எங்கே வந்தீர்கள்? என்ன செய்வதாக உத்தேசம்?
எங்கள் சொந்தக்காரர்களை, அண்ணன், தம்பி, அக்காள், தங்கை, அப்பா, அம்மா அனைவரையும் காப்பாற்ற வந்தோம் - ஆயிரம் வீட்டுக்காரர்களை அவதியிலிருந்து விடுவிக்க வந்தோம் - சுருக்கமாகச் சொல்லட்டுமா? இந்த சுருண்டு போனவர் மீது பாயும் உங்கள் போன்ற குரப்புலிகளை தடுத்துநிறுத்த வந்தோம்.
அரசாங்கத்திற்கு எதிராக?
இல்லை.. அநியாயத்துக்கு எதிராக!
ஆண்டவனுக்கு விரோதமாக?
இல்லை.. அன்புத் தோழர்களாக!
எம்மைத் தடுக்க முடியாது உங்களால்! உம்... நடக்கட்டும்!
அதையும் பார்ப்போம்.
(என்று அல்லி கைகளை விரித்தபடி எதிரே நின்று)
எங்களையெல்லாம் பிணமாக்கி விட்டு அந்த ஏழைகளைத் துரத்துங்கள். உம்! நடத்துங்கள், நீங்கள் கைகொண்ட நல்ல காரியத்தை-
வீரர்களே! திரும்பி விடுங்கள் - மன்னனிடம் சொல்லுங்கள் - மக்கள் போக மறுக்கிறார்கள் என்று! கொடிக்காலை அழித்து கோயில் எழுப்புவது - எவ்வளவு எதிர்ப்புக்குரிய செய்தி என்பதை அரசன் உணரட்டும் - ஆட்சி பீடம் உணரட்டும்!
முடியாது - ஏனப்பா நிற்கிறீர்கள்? (மற்ற வீரர்களை நோக்கி) இவர்களையும் அடித்துத் துரத்துங்கள்.
(பொன்னழகன் - அல்லி முதலியோர் அடி வாங்குகிறார்கள். அல்லிக்கு தலையிலே ரத்தம் வழிகிறது - இவைகளையெல்லாம் புதுமைப்பித்தன் ஒரு பக்கமிருந்து கவனிக்கிறான். அவன் கையிலே சிறிய துப்பாக்கி இருக்கிறது. ஒரு வீரன் பொன்னழகனை முதுகுப் பக்கமாக குத்த வருகிறான். அப்போது புதுமைப்பித்தன் அந்த வீரனைச் சுட்டு வீழ்த்தி பொன்னழகனைக் காப்பாற்றிவிட்டு மறைந்து விடுகிறான். வீரர்கள் அதிர்ச்சியடைந்து கீழே விழுந்த வீரனைத் தூக்குகிறார்கள்.
குழப்பம் அதிகமாகிறது. பொன்னழகனும், அல்லியும் வீரர்களால் அதிகமாகத் தாக்கப்பட்டு விழுகிறார்கள். குடிசைகள் நாசமாகின்றன. மக்கள் ஓட்டம், வீரர்களின் பயங்கரமான சிரிப்பு.)
(மந்திரிவீடு - மந்திரி குணசீலர் ஆயாசத்தோடு வஞ்சியிடம்)
ஒரே குழப்பம் - ஒரே குழப்பம்! கலாராணி எங்கு போனாள்? என்ன ஆனாள்? யாரிடம் சிக்கினாள் எதுவுமே தெரியவில்லை, இதுவரையில்! நான் அதற்காகக் கவலைப்படுவதா; அரசாங்கத்தை எதிர்த்து நாலாபுறங்களிலும் கிளம்பி விட்ட புரட்சி சக்திகளைப் பற்றிக் கவலைப்படுவதா? மக்கள் உள்ளத்தையே ஒரு எரிமலையாக மாற்றுகிறான், அந்த புதுமைப்பித்தன்! அந்த எரிமலை வெடிக்குமானால் அந்த நெருப்புக் குழம்பிலே உருகிப் போய், மறைந்து விடும் என் அதிகாரம் - அந்தஸ்து - அமைச்சர் பதவி - எல்லாமே!
பிரபு - கடற்கரையில் இருந்து கொண்டு, உப்புக்கு அலையலாமா? தங்களின் கவலைகள் அத்தனைக்கும் மருந்தாக இருக்கிறார் குருநாதர். அவரால் முடியாததா கலாராணி இருக்குமிடத்தை கண்டுபிடிக்க! புதுமைப்பித்தன், பொன்னழகன் கூட்டத்தை சபித்தே பொசுக்கி விடலாமே, அவர் நினைத்தால்!
சரிதான், நீ சொல்வதைப் போல் நான் அந்த குருநாதரிடம் சொன்னால், அவர் என்னைப் பார்த்து என்ன தெரியுமா கேட்டார்? புதுமைப்பித்தன் ஆவி, அமைச்சர் உருவத்திலே வந்திருக்கிறதா என்று கேட்டார்! இதுமாதிரி கேள்விகளை, புதுமைப்பித்தன் தான் கேட்கிறான், அவன் பத்திரிகையில்! நாமும் கேட்டால் குருநாதருக்குக் கோபம் தான் வரும்!
அப்படியானால் குருநாதர், சக்தியற்றவரா?
சத்தம் போடாதே - யார் காதிலாவது விழப் போகிறது! என்னமோ “நெய்க்குத் தொன்னை - தொன்னைக்கு நெய்” என்பார்களே, பழமொழி - அதுபோல அவருக்கு நான் ஆதாரம் - எனக்கு அவர் ஆதாரம்!
இதுமாதிரி போலி ஆதாரங்களால் புரட்சியை அடக்க முடியாது பிரபு!
வஞ்சி! நீ ஒன்றும் யோசனையும் சொல்ல வேண்டாம் - போ! போ! (போகிறாள்)
(ஒரு காவலன் வந்து)
பிரபு! பத்திரிகையாசிரியரும், குருநாதரும் பல்லக்கில் வந்திருக்கிறார்கள். தங்களை அவசரமாகப் பேட்டி காண வேண்டுமாம்.
அழைத்துவா! அழைத்துவா!
(குருநாதர், அரிஹரநாதர் இருவரும் வந்து அமருதல்)
என்ன திடீரென்று?
சீமான்கள் சபை, அதிகாரப்பூர்வமில்லாமல் அவசரமாகக் கூடி, நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பங்களை ஆராய்ந்தோம். கோயில் கட்டுவதற்கு, அரசன் சம்மதிக்க வில்லையென்ற செய்தியை வைத்து காரசாரமான விவாதம் நடைபெற்றதாம். கடைசியாக அரசனே சீமான்கள் சபைக்கு வரவேண்டுமென்றும், கோயில் கட்ட சம்மதித்து கையெழுத்திட வேண்டுமென்றும், அப்படிக் கையெழுத்திட்ட பிறகே சீமான்கள் சபை, மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்குமென்றும் தீர்மானித்திருக்கிறார்களாம்.
