மணிமகுடம்
காட்சி 21 · 21 / 47
மக்கள் இயக்கத்தின் மீது உனக்குப் பற்றுதல் இருப்பதாகச் சொன்னாயே; அதுதான் காரணம் - இன்னும் என்ன புதிய காரணம்?
தூரத்திலிருந்து பார்க்கும் போது சோலையின் பசுமை நிறைந்த அழகு, ஒரு இளம் பெண்ணை அருகே அழைக்கிறது - சோலைக்குள்ளே நுழைந்து விட்ட அந்தப் பெண்ணை அங்குள்ள ஒரு பொன்மலர் கவருகிறது! அந்த மலரை தன்னுடைய மெல்லிய கரங்களால் கொய்து, கூந்தலில் சூடிக் கொண்டு குதூகலமடைகிறாள் அவள்! இதிலிருந்து என்ன தெரிகிறது?
பெண்களுக்கு மலரின் மீது ஆசை என்று தெரிகிறது...
அய்யோ.. எவ்வளவு பெரிய உதாரணத்தை சாதாரணமாக்கி விட்டீர்கள். அதாவது அந்தப் பெண்ணை அந்த சோலையும் கவருகிறது - அந்த ஒரு மலரும் கவருகிறது.
ஆமாம்
சோலைக்கு வந்தவள், அந்த மலரை மட்டும் பறிப்பாளேன்?
பிறகென்ன? இலை தழைகளையா பறிப்பாள்?
அதல்ல நான் சொல்வது.
சொல்வதை சுற்றி வளைக்காமல் சொல்.
மக்கள் மன்றம் என்னைக் கவர்ந்த சோலை! அங்கே நான் சூடி மகிழ ஆசைப்படும் மலர்.. மலர்...
(சந்தேகத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டே பேச்சை மாற்றும் எண்ணத்துடன்) கலாராணி! மக்கள் மன்றத்தை தோட்டமென்று எண்ணிக் கொண்டால்தானே மலரை நினைத்து வாட்டமடைய வேண்டியிருக்கிறது... மக்கள் மன்றம் ஒரு பாசறை என்று எண்ணிக் கொள்! பாடி வீடு என்று கற்பனை செய்துகொள்.
அங்கேயும் போர்வாள் உண்டே; வீரப் பெண்களைக் கவர அதுபோதாதா?
நீ குறிப்பிடும் போர் வாள் - மலர் - இவைகளுக்கெல்லாம் பொருள் என்ன?
போர்வாளுக்கும் மலருக்கும் நீங்காத தொடர்பு இருக்கிறதல்லவா?
வெற்றி பெற்ற வாளுக்கு மலர்மாலை சூட்டுவார்கள் வீரர்கள்! அதைத்தானே சொல்லுகிறாய்.
ஆமாம் நீங்கள் போர் வாள்! நான்...
கலாராணி! (வியப்புடன் பார்க்கிறான்)
நான் மலர் என்கிறேன்.
தவறான நினைவு - மிகத் தவறான நினைவு - உன் கருத்தை உடனடியாக மாற்றிக் கொள்!
மாற்றிக் கொள்ள முடியாது! என்றைக்கு என் வீட்டில் உங்களைப் பார்த்தேனோ; என்றைக்கு உங்கள் ஆவேசம் நிறைந்த அழகு மொழிகளைக் கேட்டேனோ; என்றைக்கு மக்களின் நலத்திற்காக ஒலித்த அந்த வீரக் குரலை ரசித்தேனோ; அன்றுமுதல் அடிமையாகி விட்டேன்! அமைச்சர் மகள் என்பதை மறந்து விட்டேன் - கனவிலே - நனவிலே - கண்ணைத் திறந்தால் காணும் பொருள்களிலே - மூடினால் - இமைக் கதவுகளின் உட்புறத்திலே - தங்களது திருவுருவத்தையே கண்டேன்!
மீண்டும் சந்திப்போமா என்று ஏங்கினேன் - சந்தித்தேன் - சந்தோஷத்தின் சிகரத்தில் நின்றேன். ஆனால், இன்று தங்களின் சொற்கள், என்னைத் துன்பக் கடலில் ஆழ்த்தியே தள்ளி விடுகின்றன. தயவு செய்து என்னைத் தவறாக எண்ணாதீர்கள். மந்திரி மகள் என்பதற்காக மட்டும் என்னை வெறுத்து விடாதீர்கள். உப்புக் கடலிலேதான் ஒளி முத்தும் இருக்கிறது! அதை மறந்து விடாதீர்கள்!
வேறு ஏதாவது பேசு!
எதைப் பேசினாலும், எதை நினைத்தாலும் - சுற்றிச் சுற்றி இங்கேதான் வருவேன். நீங்கள் ஒரு வார்த்தை கூறிவிடுங்கள் போதும், நீங்கள் போர் வாள் - நான் மலர்!
என் மனதைக் கவர்ந்த மலர், இந்த மன்றத்திலேயே இருக்கிறது! நீ குறிப்பிட்டாயே, அந்த லட்சணங்கள் அத்தனையும் பொருந்திய புரட்சி மலர்!
அல்லி மலரா?
ஆம் - அல்லிதான்!
(அப்போது அல்லி வருகிறாள். கையில் ‘மணிமகுடம்’ ஏட்டுடன்)
புதிய பத்திரிகை பார்த்தீர்களா? “மணிமகுடம்” ஆகா! மக்களின் குரல் இதுதான்! புதுமைப்பித்தனின் எழுத்தா? பொங்கி வரும் புது வெள்ளமா? கட்டுரையா? கடல் அலையா? சொற் கூட்டமா? குறைக் காற்றா? என்றெல்லாம் புகழ்கிறார்கள், மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று!.. இனி குருநாதர் தொலைந்தார்! போலிப் பத்திரிகை தலையெடுக்க முடியாது! அமைச்சரின் அடக்கு முறை தூள்! தூள்!
நீயே புகழ்ந்து கொண்டேயிருக்கிறாயே; இப்படிக் கொடேன் பத்திரிகையை!
(பத்திரிகையை கண்களில் ஒற்றிக் கொண்டபடி) ஆகாகா! நாட்டையே ஒரு கலக்கு கலக்கி விட்டது இந்த லட்சிய ஏடு!
(என்றபடி பத்திரிகையை பொன்னழகனிடம் கொடுக்கிறாள், பின், கலாவைப் பார்த்து)
என்ன, கலாராணி! மன்றத்து வாசம் எப்படி இருக்கிறது? நீ இன்னும் உணவருந்தியிருக்க மாட்டாயே! வா! போகலாம்.
(கையைப்பிடித்து அழைக்கிறாள்)
