உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
மணிமகுடம்/காட்சி 20
நாடகங்கள்

மணிமகுடம்

காட்சி 20 · 20 / 47

(அவள், சோகத்தோடு, முகத்தை மூடிக் கொண்டு திரும்பி வந்து விடுகிறாள். அவனும், கருப்பு ரோஜாவும் போய்விடுதல்.)

(வீதி ‘மணிமகுடம்’ என்ற பத்திரிகையை ஒருவன் கூவி விற்றுக் கொண்டு போகிறான். மக்கள் பரபரப்போடு வாங்குகிறார்கள்... கூடிக் கொண்டு ஒரு பத்திரிகையைப் படிக்கிறார்கள்)

ஒருவன் படிக்கிறான்.

“மணிமகுடம்”

“ஆசிரியர் - புதுமைப்பித்தன்”

“தின இதழ் - விலை ஒரு பணம்”

“கொடிக்காலை அழித்து கோயில் கட்ட கொற்றவன் கையெழுத்திட்டது உண்மைதானா?

ஆயிரம் குடிசைகளை அழித்து விட்டு, அங்கே ஆலயம் அமைக்கும் அக்கிரம திட்டத்திற்கு, அரசன் உடன்படவில்லை என்றும், கையெழுத்திட்டு விட்டார் என்று செய்தி பிரசுரித்தது அரசாங்க பிரச்சார பீடத்தின் பகிரங்க மோசடி என்றும் மணிமகுடத்தின் ஒற்றன் கூறுவதை, மந்திரியோ, குருநாதரோ, சீமான் சபையோ மறுக்க முடியுமா?”

(இந்தச் செய்தி படிப்பதை, அல்லி அங்கு நின்று மகிழ்ச்சியோடு கேட்டுக் கொண்டிருக்கிறாள், அவர்களுக்கு ஒரே குதாகலம். அவர்களிடம் அல்லி, ஓடி வருதல்)

அய்யா... அய்யா... அந்தப் பத்திரிகையை எனக்குத் தருவீர்களா?

முடியாது.. முடியாது.. நாங்க படிக்கணும்.

(வேகமாகப் படித்தல்)

“குருநாதரின் கோரதாண்டவம் - ஒரு சிறு கதை”

(அல்லியைப் பார்க்காமலே, பதில் சொல்லி விட்டு, பத்திரிகையைப் படித்தவன், பிறகு அல்லியை நிமிர்ந்து பார்த்து விட்டு வியப்புடன்)

அடடே-- நீங்களா... இந்தாங்க!

(பத்திரிகையைத் தருகிறான்.)

(தரும்போதே, படித்துக் கொண்டு தருகிறான்.)

“மந்திரிகுமாரி - ஒரு தொடர்கதை - மர்மங்கள் நிறைந்தது!”

சரி - சரி நீங்கள் படியுங்கள் - நான் வேறு வாங்கிக் கொள்கிறேன்.

(அவசரமாகச் செல்கிறாள் உற்சாகத்துடன்.)

(மக்கள் மன்றம் - ஒரு அறையில் பொன்னழகனும், கலாராணியும் இருக்கிறார்கள்.)

நான் இங்கிருந்து தப்பி ஓடிவிடுவேனா என்று சந்தேகப்படவே வேண்டாம். நான் இங்கிருக்கும் விஷயம் அப்பாவுக்குத் தெரிந்து அவர் என்னை மீட்டு விடுவாரோ என்று கவலைப்பட வேண்டாம் - நான் இங்கிருக்கவே விரும்புகிறேன்.

நீ சொல்வது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், இதை நம்புவதற்கு இன்னும் பல நாட்கள் நகர வேண்டும். மன்றத்தில் உறுப்பினராக விரும்புகிறவர்களையே நாங்கள் எளிதில் நம்புவதில்லை. ஒரு மந்திரி மகளை நம்புவதென்றால்...

எத்தனையோ முறை கேட்டு விட்டேன். சரியான பதில் இல்லை - இப்போதாவது சொல்லுங்கள்! என்னை அபகரித்த காரணம் என்ன?

அதுதான் சொன்னேனே; அரசனுக்கும் உனக்கும் திருமணம் நடக்கக் கூடாது என்றுதான்!...

சரி! அரசனை மணக்கவில்லை - பிறகு என்னகதி?

இந்த அவசரத்தில் அதையும் தீர்மானித்து விட வேண்டுமா?

தீர்மானித்துக் கொள்வது, என் உள்ளத்திற்கு ஒரு திருப்தி.

திருமண விஷயங்களைப் பெண்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

அதை ஆண்கள் எதிர்க்கக் கூடாது, இல்லையா?

ஆமாம்!

ஒன்று கேட்கிறேன்... நான் இங்கேயே இருக்கிறேன்; திரும்ப அரண்மனைக்குப் போகவில்லை என்று சொல்கிறேன், அதற்கு என்ன காரணம்?